6 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
தூண்டுகோலாய்க் கொள்வரென நன்கறிவேன்; மற்றவரின் அழுக்காற்றை மதித்தல் மிகை. இவ்வுரை முறையாகத் தொடர்ந்து எழுதப் பெறாமல், வாய்த்தபொழுது நினைவுவந்த நூற்பாக்களைப் பெயர்த்தெடுத்து நெட்டிடைகழிய விட்டுவிட்டெழுதி வெவ்வேறு சஞ்சிகைகளில் வெளியிட்டதனால், சிற்சிலவிடங்களில் சில குறிப்புக்கள் மீண்டும் கூற நேர்ந்தது; இக்குற்றம் பொறுத்தற்குரியது. வழுவின்றி எழுதுதற்கும் அச்சிலெழும் பிழைதிருத்தியுதவுதற்கும் உறுதுணைவர் மதுரையில் நான் பெறுவதரிதானதனால், இப்பதிப்புப் பிழைபெருகி, மலர் கனிகள் மணவாமல் “இலைமலிந்த சருக்க” மயமாயினது. அதனுள்ளும் பயன்காணும் அருளுடைமை தமிழறிஞர் கடவுட்சால்பாதலினால், நடுவிகவாத் தமிழரிதை நகைக்கமாட்டார். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல”ஆதலின் என்புத்துரையை வித்தகர் வெறுக்கார்; உண்மைநாடியுவக்கும் மாணவர் இஃதவரைச் சிந்திக்கத் தூண்டுந் துணையாகப் பேணுவர். அழுக்காறுடையார் வழுக்காண முயல்வது அவரியல்பாதலின், அதற்கு வருந்தல் வேண்டா. கண்ட உண்மையைக் கரவாதுரைப்பதென்னியல்பு. என் பல பனுவல்களை மறுப்பொல்லாது வெறுப்பவரும், புதிய என் முடிபுகளைத் தமதாக்கி என் பெயர் குறியாமலே வெளியிட்டுப் புகழ்பெறுபவரும் பலருளர். விலையின்றிக் கொண்டாலும் என் உரைகளிலெதனையுமே படித்துண்மை யுணர்த்தியவர் யாருமிலர். பல் கலைக்கழகங்கள் உலகியலறிவை விலை பகர்பவரின் நிலைக்களமாக நிலவுகின்றன. எனினும், தமிழருக்குத் தமிழில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து வளர்வதால், இப்புத்துரை அத்துறையில் ஆராய்வார்க்குதவுமென எண்ணி வெளியிடத் துணிந்தேன். தமிழோங்க! தமிழறமும் தமிழகமும் என்றும் தழைக! ‘மலையகம்’ பசுமலை 1. 11. 1942 | ச. சோ. பாரதி. |
|