தொல்காப்பியர் - பொருட்படலம் அகத்திணை இயல் எழுத்துஞ் சொல்லும் செய்யுளுக்கு இன்றியமையாத உறுப்புக்களாதலின், அவற்றை முறையே முன்னிரண்டு பகுதிகளாக வகுத்துக்கூறின தொல்காப்பியர், புலவர்க்குரிய பொருட்பகுதியை மூன்றாம் படலமாக வகுத்தார். மக்கள் கருத்துக்களை விளங்க வெளிப்படுத்துங் கருவியனைத்தும் செய்யுளெனப்படும். செவ்விதாய உளப்பாடு, அதாவது உளத்துறுங்கருத்தைக் கேட்போருளத்துறக் கூறுதற்குரிய சொற்றொடர்களெல்லாம் செய்யுளாகும். பாட்டே செய்யுளென்பது பிற்காலப் பிழைவழக்கு, உரை, பாட்டு, நூல், பிசி, குறிப்புமொழி, மறைமொழி, பழமொழி எனப் பலவகையானும் பல்வேறுருவிற் றோன்றி நின்று பொருள்பயப்பனயாவும் செய்யுளேயாம். செய்யுளெல்லாம் பொருள் பற்றியவே யாகலானும், பொருளொன்றே மக்கள் குறியாகலானும் அப்பொருள் பற்றியும், அப்பொருளுரைக்குங் கருவியாகும் செய்யுள் பற்றியும், அவையிற்றுக் குறுப்பும் துணையுமாவன பிறபற்றியும் கூறுவனவற்றின் தொகுதி தொல்காப்பியரின் பொருட்படலமாகும். இனி, ஆரியர் செய்யுள் அனைத்தும் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றுள் ஒன்றும் பலவும் பொருளாகக் கொண்டே அமைதல் வேண்டுமென்பர். தமிழ்ப் புலவர், மக்கள் பொருளாக மதிப்பன எல்லாம் செய்யுளுக்குரியனவாகும் எனக் கொள்வர். அப்பொருளெல்லாம் மக்கள் வாழ்வொடு படுவவாகலானும், மக்கள் வாழ்வும் அகமும் புறமுமென இரண்டிலடங்குவதாகலானும், பொருளை அகமும் புறமுமென இருகூறாய் வகுத்துக் கூறுவதே தமிழ் மரபாகும். அம்மரபு மேற்கொண்டு தொல்காப்பியரும் தமிழ்ச் செய்யுட்பொருளை அகப்பொருளும் புறப்பொருளுமாக இருகூறாக்கி, அவற்றின் |