பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை9

குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என முறைப்படத் தொகுத்தார். காதல் ஒருவன்பாற்கதிர்த்து, மற்றையோள்மாட்டுப் பருவமன்மையாற் பால்விளியுணராப் பான்மையிற் சிறக்கத் தோன்றா நிலையே கைக்கிளை. எனில், இந்நிலை, கன்றிய காதலன் “காமாஞ்சாலா இளமையோள்வயின்” தனக்கேமம் சாலப்பெறானெனினும், தன்னலம் விழையாமல் பழிபடு பிழையொழித்து அவணலம் பேணியொழுகும் காதற்பெற்றிய தாகலின், அதனை முதலில் வைத்து, இருபாலும் காதலொத்துக் கனிந்து சிறந்த அன்பினைந்திணைகளை அதன் பின்னமைத்து, அவற்றின் பின் காதல் கண்ணாது கழிகாமப்பழிபிறங்கும் பெருந்திணையைப் பிரித்து நிறுத்தி முறைப்படுத்தினார். இவ்வெழுதிணைகளையு மிம் முறையாற் றொகுத்துக் காட்டினரெனினும், விரிக்குங்கால் இலக்கணம் நிறைந்த ஐந்திணைகளையும் தொடர்புடன் பலபட விளக்கித், தம்மியல் கூறுமளவில் அமைவனவான கைக்கிளை பெருந்திணைகளி னிலக்கணங்களை முறையே இறுதியிலிரண்டு தனிச் சூத்திரங்களாற் றெளித்து முடிப்பர்.

இவ்வகத்திணையியற் சூத்திரங்களின் வைப்புமுறை வருமாறு:

முதற் சூத்திரத்தில் அகத்திணைகள் ஏழெனத் தொகை வரையறைப்பட்டது. அவ்வேழனுள் முதலும் இறுதியுமாகத் தமக்கென நிலத்தொடர்பில்லாத கைக்கிளை பெருந்திணைகளை விடுத்து, மற்ற ஒத்த காதல் திணைகள் ஐந்தனுள் பிரிவாம்பாலையைப் பொதுவாக்கி, ஏனைய நான்கினையும் தத்தமியல்பால் நால்வகைப்பட்ட ‘தமிழ் கூறும்’ நல்லுலக நானிலப் பகுதிகளில் ஒவ்வொன்றிற்கும் முறையே சிறப்பியைபுபற்றி வகுத்துப் பொருத்திய மரபு இரண்டாஞ் சூத்திரத்திற் கூறப்படுகிறது. காடும், மலையும், ஊருங் கடலுமான நானிலப்பகுதிகளும், அவ்வந் நிலத்தில் சிறந்த முல்லை, குறிஞ்சி, மருதல், நெய்தல் எனும் அடையாளப் பூக்களால் அழைக்கப்படுதலின், அவ்வப்பகுதிக்குச் சிறந்தியைந்த அகவொழுக்கங்களும் அவ்வந்நிலப் பூப்பெயர்களே கொள்வனவாயின. பூப் பெயர்கொள்ளும் இம்முறையைத் தழுவியே ஏனைப் பிரிவொழுக்கமும் நானிலங்களிலடங்காத சுரங்களிற் பெரும்பாலான பாலைப்பூவின் பெயரால் வழங்கலாயிற்று.

இனி, அகப்பொருள் முதல் கரு உரியென மூன்று கூறுபடுமென்பது மூன்றாஞ் சூத்திரத்தாலும், அவற்றுள் முதல்