பக்கம் எண் :

932கலித்தொகை

றுன்னி யகலத் துறந்த வணியளாய்
நாணு நிறையு முணர்கல்லா டோண்ஞெகிழ்பு
(1) பேரம ருண்க ணிறைமல்க வந்நீர்தன்
கூரெயி (2) றாடிக் குவிமுலைமேல் 1வார்தரத்
தேர்வழி நின்று தெருமரு மாயிழை
கூறுப கேளாமோ 2சென்று
11 எல்லிழாய், (3) எற்றி வரைந்தானை நாணு மறந்தாளென்
3றுற்றனிர் போல வினவுதிர் மற்றிது
கேட்டீமி னெல்லீரும் வந்து
14 வறந்தெற மாற்றிய வானமும் போலு
நிறைந்தென்னை மாய்ப்பதோர் வெள்ளமும் போலுஞ்
சிறந்தவன் (4) றூவற நீப்பப் பிறங்கிவந்
தென்மே னிலைஇய நோய்

எ - து: 4அரசன் தனக்குப் புகழ் உயர்ந்து நடக்கும்படியாகத் தம்மறி வான் மிக்குச் சேர்ந்த (5) அமைச்சரை முன்னர் நடுக்கமான மொழி களைக் கூறிப் பின்னர் ஒரு படியிலே எல்லையில்லாத இடும்பைகளை உறுவித்துக் கொல்லுதலை இயல்பாகவுடைய கொடுங்கோலரசனிலுங்காட்டில், 5கணவர்க்கு மகளிர்க் குண்டாகிய காமத்தாலும் அவர்மேல் நிகழும் அன்பு இல்லையாமா யிருந்தது; எங்ஙனேயென்னில் அவ்வாயிழை தன்றலைவன் அன்னத் தூவியாற் செய்த மெல்லிதாகிய சேக்கையிலே அளித்து இராக்காலத்தேவந்து துன்னிக் கூரிய எயிற்றினீரை நுகர்ந்து குற்றந் தீரத் தலையளிசெய்து நீங்குகையினாலே அத் தலையளியால் ஆராமல் தன்னை நீங்கின அணிகளை யுடையளாய்த் தனக்கியல்பாகிய நாணையும் நிறையென்னுங் குணத்தையும் தாங்குதல் 6வேண்டுமென்று அறியாளாய்த் தன் தோள் மெலிந்து பெரிய அமர்த்த


1. "பேரம ருண்கணின் றோழி’’ கலி. 60 : 16.

2. ஆடுதலென்பதற்கு நுகர்தலென்னும் பொருள், "நெய்தற்றா தமர்ந்தாடி’’ (கலி. 74: 2) என்றவிடத்தும் கூறப்பட்டிருக்கிறது.

3. இந்நூற் பக்கம் 915: 1-ஆம் குறிப்புப் பார்க்க.

4. இந்நூற் பக்கம் 747: 5-ஆம் குறிப்புப் பார்க்க.

5. "புரைதவப் பயனோக்கார் தம்மாக்க முயல்வாரை, வரைவின்றிச் செறும்பொழுதிற் கண்ணோடா துயிர்வௌவு, மரைசினுந் நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ’’ (கலி. 8: 15-17..) என்பதும் இந்நூற் பக்கம் 54: 1-ஆம் குறிப்பும் பார்க்க.

(பிரதிபேதம்)1வாராகத்தேர்வழி, 2சென்று எற்றி, 3உற்றறிவீர்போல, 4‘அரைசன்’, 5மகளிர்க்குண்டாகிய காமத்தானுங் கணவர்க் கவர்மே னிகழுமன்பு, 6வேணுமென்று