பக்கம் எண் :

264கலித்தொகை

எ - து; பிடியோடு கூடிய நிலைமையினை 1யுடைய வளகென்னும்புதலினது தழையை மனம்பொருந்தித் 2தின்ற, இணைந்த கொம்புகள் அழகுகொண்டவரை நடந்ததனையொக்குஞ் செலவினால் விளங்குகின்ற அழகினையுடைத்தாகிய யானைகளையுடையப் பனையுடைய மலைநாடனை மணம் நாறும் மயிரினை யுடையாய்; முன் இயற்பட மொழிந்ததனை மறுத்து இனி இயற்பழித்து ஒன்று 3பாடுவாயாக; எ - று.

நிலைமையையுடைய யானை, தின்ற யானை, அழகினையுடைத்தாகிய யானையென்க.

மருப்பெழில்கொண்டவரை, இல்பொருளுவமை.

இதனால் (1) விலங்குகளுந் தமக்கு வேண்டுவனவற்றை நுகர்ந்து வருத்த 4மின்றி ஒழுகினாற்போல நாமும் நமக்கு வேண்டுவனவற்றை நுகர்ந்து இல்லறத்தையும் நிகழ்த்தி வருத்தமின்றி ஒழுகுமாறு வரைந்துகொள்வனென்றாளாக உள்ளுறையுவமங் கொள்க. இது பயவுவமப்போலி. மறுத்தொன்று பாடித்தை 5என்றதன் பயன் இவள் களவொழுக்கங் கருதாமல் வரைந்து கோடலே கருதினாளெனத் தலைவன் உட்கொண்டு கடிதின்வரைதலாம். 6அது கேட்ட தலைவி கூறுகின்றாள்.

24 (2) கடுங்க (3) ணுழுவை யடிபோல வாழைக்
கொடுங்காய் குலைதொறூஉந் தூங்கு மிடும்பையா
(4) லின்மை 7யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்காற்
றன்மெய் துறப்பான் மலை.

1. (அ) "கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை, யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்தசாரற் பலவின் சுளையொ டூழ்படு,பாறை நெடுஞ்சுனை விளைந்த தேற,லறியா துண்ட கூடுவனயலது, கறிவளர் சாந்த மேறல் சொல்லாது,நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங்,குறியா வின்ப மெளிதி னின்மலைப், பல்வேறு விலங்கு மெய்து நாட,குறித்த வின்ப நினக்கெவ னரிய" அகம். 2 : 1 - 10. (ஆ) "எழுங்குலை வாழையி னின்கனி தின்றிள மந்தியந்தண், செழுங்குலை வாழை நிழலிற் றுயில்சிலம்பா" கோவையார்: 250.

2. "கடுங்கணிரும்புலி" கலி: 65 : 23 - 4.

3. (அ) "வெம்புலி யடிய பைங்காய்க்,கோழரையரம்பை" நைடதம். சுயம். 159. (ஆ) "கதலிப் புலியடிக் குலை" சீறா. நாட்டு. 38.

4. "ஈத லிரந்தார்க்கொன் றாற்றாது வாழ்தலிற், சாதலுங் கூடுமாமற்று கலி. 61 : 11 - 2. என்பதும் அதன் குறிப்பும் இங்கே ஒப்புநோக்கற் பாலன.

(பிரதிபேதம்) 1உடையயாணைவளகென், 2தின்றயாணை இணைந், 3பாடுவாயென்றாள் தோழி மருப், 4 இன்றியேஒழுகினாற், 5என்றதனாற்பயன், 6கடுங்கணுழுவை, 7உரைத்தாற்கு.