பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி265

எ - து; மிடியாலே பொருளின்மையைச் சொன்னார்க்கு அப்பொருளை [அவர்க்கு] நிறைத்தலாற்றாதபொழுது தன்மெய்யைத் துறக்குமவன்மலை தறு கண்மையையுடைய புலியின் அடியைப்போல வாழையினது வளைந்தகாய் குலைகடோறும் தூங்கும்; 1எ - று.

புலியடிபோல வாழைக்குலை தூங்குமென்றதனான் நம்மைவரையாமையிற கொடியன்போற் றோன்றினான், அவன் இனி வரைந்துகொண்டு நமக்கு இனியனாவனென உள்ளுறையுவமங்கொள்க. இது வினையுவமப்போலி.

இனி முருகற்கு ஏற்றுங்காற் பிறவித் தடுமாற்றத்தான் வீடு பெறுத லின்மையை உரைத்தார்க்கு அவ்வீடு பெறுந்தன்மையைத் தான் நிறைவித்தலை அவர்கள் கொள்ளமாட்டாதகாலத்துத் தன்றிருமேனியைக்கைவிட்டு அவர்கண் மனத்தே தங்குகின்றவனெனக் கூறுக. " ஒருநீ யாகத் 2தோன்ற விழுமிய பெறலரும்பரிசினல்கும்" என்றார் (1) முருகாற்றுப்படையில், (2)"தன்னையுன்னி யென்னை, யாக்கிய போழ்தே யானவ னாயினேன்" என்பதனானும் உணர்க.

எனவாங்கு

எ - து; என்று: எ - று.

ஆங்கு, அசை.

29 கூடி யவர்திறம் பாடவென் றோழிக்கு
வாடிய மென்றோளும் வீங்கின
வாடமை வெற்ப னளித்தக்காற் போன்றே

எ - து; யானுந் தலைவியுங் கூடித் தலைவன் றிறத்தையும் முருகன் றிறத்தையும் பாடினேமாக, என்னுடைய தோழிக்கு அசைகின்ற மூங்கிலை யுடைத்தாகிய வெற்பையுடையவன் அளித்தபொழுது போன்று முன் அளியாமையான் மெலிந்த மெல்லிய தோள்களும் சிறந்தன; எ - று.

எனத் தன்னுள்ளே கூறுவாளாய்த் தலைவன் சிறைப்புறமாகக் கூறினாள்; அவன் கடிதாக வரைதற்கு.

இதனால், தலைவற்குச் சூழ்ச்சிபிறந்தது.

இப்பாட்டு முழுதும் முருகற்குப் பயன்படாது தலைவற்குப் பயன்பட்டு நின்றவாறு உணர்க.

இது கொச்சகங்களும் விரவி வந்தமையிற் கலிவெண்பாவின் வேறுபட்டு வந்த கொச்சகம். (7)


1. முருகு. 294 - 5. அங்கு இப்பகுதியின் இறுதிச்சொல் நல்குமதியென்று கொள்ளப்பட்டு அதற்கு ஏற்ப இலக்கணக்குறிப்பும் எழுதப்பெற்றிருக்கிறது.

2. 'தன்னையுன்னி....................யானவனாயினேன்' என்னும் இச்சொற்றொடர் திருமுருகாற்றுப்படை. 111 - 3-ஆம் அடிகளினுரையில்மேற்கோளாக வந்துள்ளது.

(பிரதிபேதம்) 1எனத்தலைவிகூறினாள்புலியடி, 2தோன்றி.