பக்கம் எண் :

268கலித்தொகை

அருவி தனது அழகியகொம்புகளின்மேலேவீழ்தலாலேமுதிர்ந்தகொத்துக்கள் அலர்தல்கொண்ட முழவுபோலுந் தாளினையுடைய நெருப்புப்போலும் வேங்கை, புகரினையுடையமத்தகத்தினையும் அழகினையுமுடைய (1) யானைகள் பூவொடு கூடிய நீரை மேலே சொரியாநிற்க எக்காலமும் முறுக்கு நெகிழ்ந்த தாமரைமலரினது அழகையுடைய (2) அல்லியிலே (3) வீறுபெற்றுத் திருமகள் விரும்பியிருந்தாலொத்த தேனாறும் வெற்றியினையுடைய வெற்பனே; எ - று.

சுடரின் கவினைக்கொண்ட அடுக்கமெனவே மாணிக்கப்பாறை யென்னும் பொருள் தந்தது. எதிர் எதிர் ஓங்கிய வரைகளைத் தலைவன் சுற்றத்தாருந் தலைவி சுற்றத்தாருமாகவும், அவற்றிடையடுக்கத்தைத் தலைவன் மனையாகவும், இரண்டருவியும் வீழ்கின்றதனை இருவகைச்சுற்றத்தாருஞ் செய்கின்ற சிறப்புக்களாகவும், இணர் ஊழ்கொண்டதனைப் புதல்வர்ப் பயத்தலாகவும், வேங்கையைத் தலைவியாகவும் உள்ளுறையுவமங்கொள்க. இது பயவுவமப்போலி. இதனாற் கூறியது நின் நாட்டில் உறைகின்ற வேங்கை சிறப்பெய்தினாற் போலத்தலைவியும் நின்னில்லின்கண்வந்து சிறப்பெய்துமாறு கடிதின்வரைந்து கொள்கவென்றதாயிற்று. வரிநுதலெழின் முதலாகத் திருநயந்திருந்த(ன்ன) வென்ற ஏனையுவமம் 1முற்கூறிய உள்ளுறையுவமத்தைத் தருகின்ற கருப் பொருட்குச்சிறப்புக்கொடுத்தாலும் உள்ளுறையுவமம்போலத் திணையுணர்தலைத் தள்ளாது நின்றது, இதற்கு (4) விதி முற்கூறினாம்.


(கம்ப. சித்திர. 15.) இதனோடு ஒப்புநோக்கற்பாலது. (ஆ) "மஞ்சளாவிய மாணிக்கப் பாறையின் மறைவ,
செஞ்செ வேநெடு மரகதப் பாறையிற் றெரிவ,விஞ்சை நாடியர் கொழுநரோ டூடினர் விமலப்,பஞ்ச ளாவிய சீறடிச் சுவடுகள் பாராய்" என்றும் (கம்ப. சித்திர, 20) ‘மாணிக்கப்பாறையிடத்து' என்றும் (கலி. 45. உரை). பிறவிடத்தும் மாணிக்கப்பாறை கூறப்படுதலும் காண்க.

1. (அ) "கள்ளவிழ் கமழ்கோதைக் காவலன் றிருமகளை, வெள்ளிரு மதயானை விழுமணிக் குடமேற்றித், தெள்ளறன் மண்ணுந்நீ ராட்டினர் தேமலர்மே, லொள்ளிழை யவளொத்தா ளுருவநுண் ணுசுப்பின்னாள்" (சீவக. 2431.) (ஆ) "தைய லாளையொர் தாரணி தோளினா, னெய்கொளோதியி னீர்முகந் தெற்றினான், செய்ய தாமரைச் செல்வியைத் தீம் புனல்,கையி னாட்டுங் களிற்றர சென்னவே" (கம்ப. நீர்விளை. 25.) (இ) "நடுவே திருவும் இரண்டுபுறத்தும் இரண்டுசெங்கழுநீர்ப்பூவும் இரண்டு பிடியுமாக வகுத்த உத்தரக்கற்கவி" (நெடு. 81 - 5. விசேடவுரை) என்பவைகளும் இந்நூற்பக்கம் 267: 4 (8) குறிப்பும் இங்கே அறிதற்பாலன.

2. (அ) "அல்லிசே ரணங்கிற்கு" (ஆ) "அல்லியுட் பாவையன்னாள்" சீவக. 162, 1505; (இ) "அல்லி யங்கமலை" கூர்ம. இராமனவ. 103.

3. வீறு - வேறொன்றற்குமில்லாத அழகு.

4. இந்நூல் 211 - ஆம் பக்கம் பார்க்க.

(பிரதிபேதம்) 1 முதற்கூறிய.