நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் 1மறிதரு மயமிழி யருவிய (1) வணிமலை நன்னாட எ - து: தான் நுகர்கின்ற பூத் தன்னையின்றித் தனித்து உறைய, தான் விரும்பிய பூவின்மேலே போன பெருமையினையும் அழகினையுமுடைத் தாகிய சிறகினையும் நீலமணிபோலும் நிறத்தினையுமுடைய தும்பி, (2) வாயிடத்தே பெருகிவீழ்கின்ற மதத்தையும் வெள்ளியமருப்பினையுமுடைய (3) யானைத்தலைவ னோடே அழகினையுடைத்தாகிய வரியினையுடைய புலி வந்து போர்செய்த காலத்தே, வேங்கையினது அழகையுடைய பூங்கொம் பென்று கருதி விறலையுடைய புலியைச் சூழ்ந்தும் வேங்கைச்சினையென்று பொலிவுபெற்ற புள்ளிகளையுடைய யானையினது புகரினையுடைய முகத்தை அணுகியும், வலிமிகுகின்ற கோபத்தாலே (4) வாட் போரைச் செய்யத் தொடங்கின மன்னரை நட்பாக்கும் உபாயத்தை ஆராய்ந்து நட்பாக்குஞ் சந்துசெய்வாரைப்போலப் பலகாலுந் திரியும், பள்ளத்தே குதிக்கின்ற அருவிகளையுடைய திரண்ட மலைகளை யுடைய 2நன்னாடனே; எ - று.
1. அணியென்பது திரளென்னும் பொருளில் “அணியணியாகிய தாரர்” (பரி. 6 : 31) எனப் பெயர்ச்சொல்லாய் வருதலும் இங்கு அறிதற்பாலது. 2. (அ) ”வாய்ப்புகு கடாஅத்து.........வயக்களிற் றொருத்தல்” (அகம். 78 : 3 - 4.) (ஆ) ”வாய்புகு கடாஅத், தண்ணல் யானை புறம். 93 : 12 - 3) (இ) "வாய்புகு கடாஅத்த, வண்ணல் யானை” (தொல். கள. சூ. 11, நச். மேற்கோள்;) (ஈ) "நாகம், வாய்வழி கடாத்ததாகி” சீவக, 753. 3. ஒருத்தலென்பது யானைத்தலைவனென்னும் பொருளில் வருதலை, (அ) ”இனம்பிரி யொருத்தல்” (மலைபடு. 297; ) (ஆ) ”இனந்தலைத்தரூஉ மெறுழ்கிளர்முன்பின், வரிமிஞிறார்க்கும் வாய்புகுகடாஅத்துப், பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல்” (அகம் 78 : 2 - 4) என்பவற்றாலும் அவற்றினுரையாலும், தலைமையுற்ற களிற்றை யானைத் தலைவனென்னும் வழக்கை (இ) இவ்வுரைகளாலும் (ஈ) ”அலகி லானைக ளனேகமு மவற்றொடுமிடைந்த, திலக வாணுதற் பிடிகளுங் குருளையுஞ் செறிந்த, வுலவை நீள்வனத் தூதமே யொத்தவவ் வூதத், தலைவனேயொத்துப் பொலிந்தது சந்திர சயிலம்” (கம்ப. வரைக்காட்சி. 7.) என்பதனாலும் அறிக. (உ) ”யானையு ளரசன்” - ‘களிற்றரசன்’ (சீவக. 2436) (ஊ) ”நாகாதிபன்” (வில்லி. அருச்சுனன் றீர்த்தயாத்திரை. 10.) எனவருதலும் காண்க. 4. “இகன்மீக் கடவு மிருபெரு வேந்தர், வினையிடை நின்ற சான்றோர் போல, விருபே ரச்சமோ டியானு மாற்றலேன்” குறிஞ்சி. 27 - 8. (பிரதிபேதம்) 1மறுத்தருபயமிழி, 2நன்னாடனே தும்பி வினைவர்.
|