(1) னனவினா னலம்வாட நலிதந்த (2) நடுங்கஞர் கனவினா லழிவுற்றுக் கங்குலு மாற்றாக்கால் |
எ - து: பகலிடத்தே அழகுகெடும்படி எம்மை நலிதலைத் தந்த நடுங்குதற்குக் காரணமான வருத்தம் 1கங்குலிற் கனவின்கண்ணும் வந்து வருத்தமுறுத்தி இவள் ஆற்றாதகாலத்து இயற்கைப்புணர்ச்சிக்கண் தெளிவகப்படுத்தி இட்டுப்பிரிதலைச்செய்து பின்னர் நீ அருளாதே அருமைசெய்தயர்த்தபின்னர் இவள்நெஞ்சழிவதற்குக் காரணமான வருத்தம் இறந்துபா டெய்துவியா நிற்கவும் உயிரைப் போகாமல் நிறுத்தவும் பொருந்தும், அதனாற் பெற்றதென் ? 2அக்கனவின் ஆற்றல் அதற்கு இயைகின்ற தில்லையே; எ - று. 3எனவாங்கு எ - து: என்று யான் கூறும்படியாக ; எ - று. ஆங்கு, அசை. (3) | விளியாநோ யுழந்தானா வென்றோழி நின்மலை முளிவுற வருந்திய முளைமுதிர் சிறு (4) தினை தளிபெறத் தகைபெற் றாங்குநின் னளிபெற (5) நந்துமிவ ளாய்நுதற் கவினே |
1. “நனவிற்றான் செய்தது மனத்ததாகலிற், கனவிற் கண்டு” (கலி. 49. 3 - 4.) என்பதும் அதன்குறிப்பும் இங்கே அறிதற்பாலன. 2. “நடுங்கஞர்” குறள். 1086. 3. “விளியா வெவ்வம்” அகம். 212 : 23. 4. (அ) “பெயினந்தி வறப்பிற் சாம் புலத்திற்குப் பெயல்போல்யான், செலினந்திச் செறிற்சாம்பு மிவளென்னுந் தகையோதான்” கலி. 78 : 19 - 20. (ஆ) “ஈனல் செல்லா வேனற் கிழுமெனக், கருவி வானந்தலைஇ யாங்கு” புறம். 159 : 18 - 9. (இ) “வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே” இனியது. 16. (ஈ) “மேதினி யிடத்தபைங் கூழ்கள், கரிந்தன தளிர்ப்ப வெள்ளிவீ ழன்ன கணமழை பொழிவது கடுப்ப” நைடதம். அன்னத்தைத்தூது. 5. (உ) “மழைபொழிய வேனிலின்முன் வாடிய பைங்கூழ்போல மறையினீங்கி..................மகிழ்ந்து” விநாயக. மயூரேசர். 37. என்பவையும் (ஊ) “கார்பெற்ற புலமேபோற் கவின்பெறும்” (கலி. 38: 12) என்பதும் (எ) அதன்குறிப்பில் இவ்விடத்துக்குப் பொருந்துவனவும் (ஏ) “வானந், துளிமாறு பொழுதினிவ் வுலகம் போலுநின், னளிமாறு பொழுதினிவ் வாயிழை கவினே” கலி. 25 : 27 - 9 என்பதும் ஒப்புநோக்கற்பாலன. 5. “நந்துமென் பேதை நுதல்” கார். 40. (பிரதிபேதம்)1தங்குதலிற, 2அக்கனவினா லதற்கு, 3எனவாங்கு அசை விளியா.
|