14 | ஐய, காமரு நோக்கினை (1) யத்தத்தா வென்னுநின் றேமொழி கேட்ட லினிதுமற் றின்னாதே 1யுய்வின்றி நுந்தை நலனுணச் சாஅய்ச்சாஅய்மா ரெவ்வநோ யாங்காணுங் கால் |
எ - து: 2ஐயனே! விருப்பமருவுகின்ற அழகினையுடையையாய் அத்தா அத்தாவென்று கூறும் (2) நினது இனிய மொழியைக்கேட்டு மகிழ்ந்திருத்தல் இனிது; அஃதொழிந்து நுந்தை மகளிர் நலஞ் சாய்தற்கு அவர் நலத்தை உண்கையினாலே உய்வின்றிச் சாய்ந்துற்ற எவ்வத்தைத் தரும் நோயை யாங்காணுமிடத்து அக்காட்சி இன்னாது. எ - று, (3) 3காமர் கடைக்குறைந்து நின்றது. மருவும் ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங்கெட்டு மவ்வீறு சந்தியாற் கெட்டது. அத்தா கடைக்குறைந்து நின்றது. சாய்மார், 4மாரீற்றுமுற்று எதிர்காலமுணர்த்திற்று. அது நலனுணவென்னும் வினையோடு முடிந்தது.
1. "ஓவா தடுத்தடுத்தத் தத்தாவென் பான்" கலி. 81. 19. 2. (அ) "யாழொடுங்கொள்ளா பொழுதொடும்புணரா, பொருளறி வாரா வாயினுந் தந்தையர்க், கருள்வந் தனவாற் புதல்வர்தம் மழலை" புறம். 92 : 1 - 3. (ஆ) "அவர்மழலை கேட்ட லமிழ்தி னினிதே" இனியது. 15. (இ) "குழலினி தியாழினி தென்பதம் மக்கண், மழலைச்சொற் கேளா தவர்" குறள். 66. (ஈ) "எழுத்தி னுறழாது வழுத்து பொருளின்றிக், குறிப்பொடு படாது வெறித்த புன்சொல்லே, யாயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழிகுழலினும் யாழினு மழகிதாம்" திருக்கழுமலமும். 28 : 2 - 5. (உ) "குழலும் யாழு மினியவெனக் கூறா வண்ண மென்கனிவாய் மழலை மொழிந்து" பிரபு. மாயையின் 52. (ஊ) "குழலினும் யாழினுங் குழைந்த செவ்வியாய்மழலையஞ் சிறுவர்சொன் மருந்தி லின்பமாம்" தீர்த்தகிரி. கந்ததீர்த்த. 27. 3. காம ரென்பதற்கு, விருப்பமென்ற பொருளே (புறம். 198 : 8. மது. 282.) உரைகளிற் காணப்படுகின்றது; (அ) "காமர் கண்டிகை சிலப். 6 : 89. என்புழி, 'காமம், காமரென விகாரமாயிற்று' என்று அடியார்க்கு நல்லாரும் எழுதியிருக்கிறார். இவ்வுரையாசிரியரோ பல விடத்து (முருகு. 75. சிறுபாண். 77. மது. 422.) அதற்கு விருப்ப மருவின என்றும் எழுதியிருக்கிறார். அடியார்க்கு நல்லார். (ஆ) "காமரு குவளை" (சிலப். 4 : 40.) என்புழி, 'காமம்வருமென்பது விகாரத்தாற் காமருவென நின்று கண்டார்க்கு விருப்பம் வருமென்ப தாயிற்று' என்று எழுதியிருக்கிறார். இவை ஆராய்தற்பாலன. (பிரதிபேதம்)1எய்வின்றி, 2ஐயெனவிருப்பம், 3காம்கடைக்குறைந்து, 4மாரீற்று எதிர் காலமுற்றுணர்த்திற்று.
|