பக்கம் எண் :

534கலித்தொகை

10மருந்தின்று,(1) மன்னவன் சீறிற் றவறுண்டோ நீநயந்த
வின்னகை தீதோ விலேன

எ - து: அதுகேட்ட தலைவன், என்னைப் பேயென்று காயாதே 1கொள்; எனக்குத் தவறுகளேற்றுதற்கு அலமராதேகொள்; எனக் கூறி, 2பின்னும் இனிய நகையினையுடையாய்! நீ என்மேல் ஏற்றிச்சொல்ல விரும்பிய தீதோயான் உடையேனல்லேன்; அரசன் கோபிக்கப்படுகின்றவன்மேல் ஒருதவறு உண்டோ? தவறில்லாயினுங் கோபிப்பனன்றோ? அங்ஙனம் கோபிக்குமிடத்து அதற்கொரு (2) பரிகாரமில்லை யென்றான். எ - று.

12

(3)3மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர்
புறஞ்சாய்ந்து 4காண்டைப்பாய் நெஞ்சே 5யுறழ்ந்திவனைப் 
பொய்ப்ப விடேஎ மெனநெருங்கிற் (4)றப்பினே 
னென்றடி சேர்தலு முண்டு 


1. ‘உற்றொரு தனியே தானே தன்கணே யுலக மெல்லாம், பெற்றவன் முனியப் புக்கா னடுவினிப் பிழைப்ப தெங்கே, குற்றமொன் றிலாதோர் மேலுங் கோள்வரக் குறுகு மென்னா, மற்றைய பூத மெல்லாம் வருணனை வைத மாதோ" கம்ப. வருணனை வழிவேண்டு. 63. 

2. மருந்து - பரிகாரம். புறம். 3: 12, 42: 22. 

3. (அ) "கொடியோர் கொடுமை சுடுமென வொடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியி னீங்கிய தகுதிக் கண்ணும்" என்பதற்கு, "கொடியோரது கொடுமை சுடாநின்றதெனப் புணர்ச்சியை யொடியாது புகழை விரும்பினோர் சொல்லோடே யொருப்பட்டு வேறு படுதலி னீங்கிய தகுதிக் கண்ணும் என்றவாறு; அஃதாவது: அக்காலத்துத் தக்கதறிதல்; புகழை விரும்பினோர் சொல்லுஞ் சொல்லாவது காமம் விரும்பும் பரத்தையரைப் போலாது அறத்தை விரும்புதல்" என்று உரைவகுத்து, "மாண.................................உண்டு"என்பதை மேற்கோள் காட்டுவர் இளம்; தொல். கற்பி. சூ. 6.(ஆ) இப்பகுதி, கற்பென்னுங் கைகோளுள் சிதைவு பிறர்க்கின்மை யென்னு மெய்ப்பாட்டிற்கும் மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 19.(இ) மாணாமை யென்பது மிகாமை யென்னும் பொருளிலும் வருமென்பதற்கு, "மாண மறந்துள்ளா நாணிலி" என்பது மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 24. ‘தெய்வம்’ இளம்.

4. புலவியுள் தலைவியுயர்வும் கிழவோன் பணிவும் உண்டென்பது தலைவி மனத்து நிகழ்தலுண் டென்பதற்கு, "தப்பினே, னென்றடி சேர்தலு முண்டு" என்பது மேற்கோள்; தொல். பொருளி. சூ. 33. நச்.;

(பிரதிபேதம்) 1. கொள்ளென் றெனக்கு, 2. பின்னு மின்னகாய் நீ, 3. மானமறந்துள்ளாத, 4. கண்டைப்பாய்நெஞ்சே, கண்டெய்ப்பாய் நெஞ்சே, 5. புரந்தவனை.