பக்கம் எண் :

நான்காவது முல்லை685

37பல்லூழ் (1) தயிர்கடையத் தாஅய 1புள்ளிமேற்
கொல்லேறு கொண்டான் குருதி மயக்குறப்
புல்லலெந் தோளிற் கணியோவெங் கேளே

எ - து: எம்முடைய தோழீ! பலமுறையாகத் தயிரைக் கடைகையினாலே பாய்ந்த புள்ளிகளின்மேலே கொல்லுகின்ற ஏற்றைத் தழுவினவனுடைய குருதி மயக்கமுறும்படி தழுவுதல் எம்முடைய தோளிற்கு அழகு மாத்திரையோ? அதிலுஞ்சிறந்ததொன்றன்றோ. எ - று.

40ஆங்கு, போரேற் றருந்தலை யஞ்சலு மாய்ச்சியர்
காரிகைத் தோள்கா முறுதலு மிவ்விரண்டு
மோராங்குச் சேற லிலவோவெங் கேளே

எ - து: எம்முடைய தோழீ! ஆயர் பொருகின்ற ஏற்றினது சேருதற்கரிய 2தலையை அஞ்சுதலும் ஆய்ச்சியர் ஏறுதழுவாதவருடைய காரிகைத்தோளை விரும்புதலுமாகிய இவ்விரண்டு நிலையும் இக்குடிப்பிறந்தவர்களுக்கு ஒன்றாகச் 3செல்லுதல் ஈண்டு இல்லையோ. எ - று.

காரிகைத்தோளென்றது, இகழ்ச்சி; வடுப்படாததோளாதலின்.

43கொல்லேறு கொண்டா னிவள்கேள்வ னென்றூரார்
சொல்லுஞ்சொற் கேளா வளைமாறி யாம்வருஞ்
செல்வமெங் கேள்வன் றருமோவெங் கேளே

எ - து: எம்முடைய தோழீ! இவளுடைய கணவன் கொல்லுகின்ற ஏற்றைத் தழுவினானென்று 4ஊரார் புகழ்ந்துசொல்லுகின்ற அச்சொல்லைக் கேட்டு மோரைவிற்று யாம் வருஞ்செல்வத்தை எங்கணவன் தருமோ. எ - று.

ஓகாரம், தெரிநிலை. என்றது, அவன் புறத்துப் 5போய் இப்புகழ்கேட்க என்னைவிடானென அவன் தன்மேலுள்ள விருப்பங் கூறிற்று. இவை குரவைப்பாட்டு.

46
(2)
ஆங்க
அருந்தலை யேற்றோடு காதலர்ப் பேணிச்
சுரும்பிமிர் கானநாம் பாடினம் பரவுது
மேற்றவர் புலங்கெடத் திறைகொண்டு
மாற்றாரைக் கடக்கவெம் மறங்கெழு கோவே

1. "தயிர்ப்புளி, மொய்த்த தோணலார்" சீவக. 423.

2. அருந்தலை யென்பதற்கு இங்கும் இச்செய்யுள் 40 - ஆம் அடியிற்குறித்த பொருளே கொள்க.

(பிரதிபேதம்)1புள்ளியின்மேற், 2தலையஞ்சுதலும், 3சொல்லுதலினடுவில்லையோ, 4ஊர் புகழ்ந்து, 5போயப்புகழ்.