பக்கம் எண் :

702கலித்தொகை

வேந்தூட் டரவத்து நின்பெண்டிர் காணாமற்
(1)காஞ்சித்தா துக்கன்ன (2)தாதெரு மன்றத்துத்
தூங்குங் குரவையு ணின்பெண்டிர் கேளாமை
(3)யாம்பற் குழலாற் பயிர்பயி ரெம்படப்பைக்
காஞ்சிக்கீழ்ச் செய்தேங் குறி

எ - து : அதுகேட்டவள், அப்படியை மெய்யென்று உணரும் அறியா 1மகளிர் கூட்டத்திற்கு உடன்படுவார்; அச்சூளுறவு பொய்க்குமவன் நீ ; நின் வருத்தத்தை ஆராய்ந்து பார்க்கில் அதற்கு உடன்படுதலே வேண்டுதலின் எம்முடைய புழைக்கடையிற் காஞ்சிமரத்தின் கீழே குறியிடஞ்செய்தேம்; ஆண்டு வருங்கால் தேனைத் தன்னிடத்தே கொண்ட (4)பொதியின் மலையை யுடையவனுடைய சிறுகுடியில்வாழும் எம் ஆயர் அவ்வேந்தன் இனிதிருந்து வாழ்வதற்கு அந்நிலத்திற் றெய்வத்திற்கு மடைகொடுக்கும் ஆரவாரத்தாலே வந்த நின்னுடைய பெண்டிர் நின்னைக் காணாமல், காஞ்சிப்பூவின் தாது உதிர்ந்தாற்போன்ற தாதாகியஎருவையுடைய மன்றத்திடத்து ஆடுங் குரவைக் கூத்திடத்து வந்த நின்னுடைய பெண்டிர் கேளாமல், நீ செய்யுங் (5) குறியை


1. (அ) ”புன்காஞ்சித் தாதுதன் புறம்புதையக் கிளியெனக்கண், டன்புகொண் மடப்பெடை யலமந்தாங் ககல்வதனை, யென்புருகு குரலழைஇ யிருஞ்சிறகர் குலைத்துகுத்துத், தன்பெடையைக் குயிறழுவத் தலைவந்த திளவேனில்” (சீவக. 648) என்பதனால் காஞ்சித் தாது பச்சைநிறமுடையதென்பது அறியலாகும். (ஆ) "குயிற்கு ழாங்குடை காஞ்சியின் கோமளத் தாது, வெயிற்கு ழாமறைத் திருவீசும் பிருள் செய” என்பது காஞ்சிப்புராணம்.

2. (அ) "தாதெரு மன்றத் தயர்வர் தழூஉ” கலி. 103 : 62. (ஆ) "தாதெரு மன்றந் தானுடன் கழிந்து”
(இ) "தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே” (ஈ) "தாதெரு மன்றத்து மாதரியெழுந்து” (சிலப். 16 : 102, 17 : ‘மாயவன்றன்’, 27 : 74 எனத் தாதெருக் கூறப்பட்டிருக்கும் இடங்களையும் அதற்கு இங்கே காஞ்சித்தாதை உவமை கூறியிருப்பதையும் நோக்க, தாதெருவென்றது சாணாகத்தையென்று தோற்றுகிறது. இது யானை குதிரைகளின் இலத்தி முதலிய வற்றிற்கும் வரும்.

3. ஆம்பற் குழலென்பது வெண்கலத்தால் ஆம்பற்பூவடிவாக அணைசு பண்ணிச்செறித்த குழலென்று விளக்குவர் அடியார்க்கு நல்லார்.

4. இந்நூற் பக்கம் 195: 1 -ஆம் குறிப்புப் பார்க்க.

5. “நின்னூ ரகம்புகுந் தாற்குறி காட்டு நெடுந்தகையே” தஞ்சை . 188.

(பிரதிபேதம்)1மகளிர்க்கூட்டத்திற்கு.