பக்கம் எண் :

நான்காவது முல்லை733

(1)தோழிநாங், (2)காணாமை (3)யுண்ட கடுங்கள்ளை மெய்கூர
(4)நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக்
கரந்ததூஉங் (5) கையொடு கோட்பட்டாங் கண்டாய்நம்
(6)புல்லினத் 1தாய மகன்சூடி வந்ததோர்
முல்லை யொருகாழுங் கண்ணியு மெல்லியால்
கூந்தலுட் பெய்து முடித்தேன்மற் றோழியாய்
(7) 2வெண்ணெ யுரைஇ விரித்த கதுப்போடே
யன்னையு மத்தனு 3மில்லரா யாய்நாண
வன்னைமுன் வீழ்ந்தன்றப் பூ

1. ‘ஆயர்வேட்டுவர்’ என்னும் (தொல். அகத். 21.) சூத்திரவுரையில் ‘ஆயர்வேட்டுவரென்னும் இரண்டு பெயரே எடுத்தோதினாரேனும் ஒன்றென முடித்தலான் அந்நிலங்கட்குரிய ஏனைப்பெயர்களான் வருவனவுங் கொள்க’ என்று கூறி “தோழி நாங்.......................................மகன்” என்னும் பகுதியை மேற்கோள் காட்டுவர். நச்.

2. (அ) “நம்மு னாணுநர் போலத் தம்முண், மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சிபோல, வுள்ளத் துள்ளே மகிழ்ப” தொல். களவி. சூ. 23. நச்; நாற். சூ. 141. மேற். (ஆ) “கள்ளொற்றிக் கண்சாய் பவர்” குறள். 927. (இ) “மட்டொளித் துண்ணு மாந்தர் மாண்புபோன் மறைந்து வண்ணப், பட்டொளித் தொழிய வல்குற் பசுங்கதிர்க் கலாபந் தோன்ற" சீவக. 2533.

3. “அந்தீந்தேறன் மாந்தினர் மயங்கி...........புலவிக்காலத்துப் போற்றா துரைத்த, காவியங்கண்ணார் கட்டுரை யெட்டுக்கு, நாவொடு நவிலா நகைபடு கிளவியும்” சிலப். 14: 133 - 139.

4. “நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும், பேணாப் பெருங்குற்றத் தார்க்கு” குறள். 924.

5. “தலைப்பெய்து, கையொடு கண்டாய்” கலி. 95: 27 - 28 என்பதும் அதன்குறிப்பும் இங்கே அறிதற்பாலன.

6. “புல்லினத் தாயர்மகன்” (கலி. 103: 47.) என்பதும் அதன்குறிப்பும் பார்க்க.

7. “ஐங் கூந்த லுளரச், சிறுமுல்லை நாறியதற்கு” (கலி. 105: 53 - 54.) என்பதற்கு, ‘ஐவகைப்பட்ட கூந்தலை ஆற்ற அது வெண்ணெயின் நாற்றம் நீங்கிச் சிறிய முல்லைப்பூவின் நாற்றம் மேவி மிக நாறியதற்கு’ என்று எழுதியிருக்குமுரை ஈண்டு அறிதற்பாலது.

(பிரதிபேதம்)1ஆயர்மகன், 2வெண்ணையுரைஇ, 3இல்லாராயாய்நாண.