பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்785

யிடத்து அவற்றை அசைத்த காற்றுவந்து தன்மேற்பட, அதனைக் கழியிற் பூத்த மலரினது மணமென்று உணர்ந்து, பின்பு மயக்கங்கொண்டு வருந்தா நிற்கும். எ - று.

14நீணகர் நிறையாற்றா ணினையுநள் வதிந்தக்காற்
(1) றோண்மேலா யெனநின்னை மதிக்குமன் மதித்தாங்கே
(2) நனவெனப் புல்லுங்காற் காணாளாய்க் கண்டது
கனவென வுணர்ந்துபிற் கையற்றுக் கலங்குமே

எ - து: உயர்ந்தமனையிலே மனத்தைநிறுத்துதலைமாட்டாளாய் (3) நின்னை நினைத்து அவசத்தாற் சிறிதுதுயின்றவிடத்துத் தன் தோண்மேற்கிடந்தாயாக நின்னை மிகவுந் துணியும்; துணிந்த அப்பொழுதே மெய்யென்று கருதித் தழுவுமிடத்து உன்வடிவைக் காணாளாய்த் 1தான்கண்டது கனவாயிருந்ததென்று அறிந்து பின்பு செயலற்றுக் கலங்காநிற்கும். எ - று.

2எனவாங்கு

எ - து: என்று; எ - று. ஆங்கு, அசை.

19(4) பலநினைந் தினையும் பைத னெஞ்சி
னலமர னோயு ளுழக்குமென் (5) றோழி

1. (அ) “துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கா, னெஞ்சத்தராவர் விரைந்து” குறள். 1218. என்பதும் (ஆ) “வேய்புரை மென்றோளின்றுயி லென்றும், பெறாஅன் பெயரினும்” குறிஞ்சி. 242 - 243. (இ) “பாயல்கொண் டென்றோட் கனவுவார்” கலி. 23 : 7. (ஈ) “இளையோள், பெருந்தோ ளின்றுயில் கைவிடு கலனே” அகம். 193 : 13 - 14. (உ) “நறுநுதலா, ராவி தளிர்ப்ப வவர்தோண்மேற் றுஞ்சினார்” (ஊ) “நல்லா ரவர்தோண்மேற் றுஞ்சினார்” சீவக. 1575, 1576. என்பவைகளும் (எ) “மென்றோட் டுயில்பெறும்” (கலி. 104: 24) என்பதும் அதன் குறிப்பும் இங்கே அறிதற்பாலன.

2. “நனவினா னல்காக் கொடியார் கனவினா, னென்னெம்மைப் பீழிப்பது” குறள். 1217.

3. “நனவிற்றான் செய்தது மனத்த தாகலிற், கனவிற் கண்டு” (கலி. 49 : 3 - 4) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

4. (அ) “பலநாடு நெஞ்சினேம்” (ஆ) “பலசூழு மனத்தோடு பைதலேன்” கலி. 35 : 19. 46 : 17.

5. “ஆய்நலம் பெயர்தரப், புரியுளைக் கலிமான்றேர் கடவுபு, விரிதண்டார் வியன்மார்ப விரைகநின் செலவே” (கலி. 124 : 19 - 21.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

(பிரதிபேதம்) 1நாங்கண்டது, 2எனவாங்கு, அசை.