பக்கம் எண் :

834கலித்தொகை

தன்னிடத்தே குவித்துக்கொண்டு அத்தகிரியைச் சேர்ந்து மறைகையினாலே பெரிதாகிய கடலில் ஓதம் ஏறுகின்ற நீர் மிக்குக் கரையைச் சேராநிற்க, கழியிடத்துப் பூக்களினின்றும் போன வண்டுகளாலே பொலிவழிந்த துறையிடத்தனவாய்த் துயில்கொள்வனபோலே, அக்கயத்தின் மலர்களெல்லாம் வாய்குவியாநிற்க, அக்காலத்தே இருங்கடல் ஒலித்து இவ்வுலகெல்லாம் ஒருபடிப்பட நடுக்கமுற்று அச்சமுறும்படி (1) தான் தோற்றுவித்த இருநிலத்தைத் தான் மீண்டு தன்னிடத்தே ஒடுக்கிக்கொள்ளுந் தன்மையையொத்த இராக்காலத்தைத் தான் (2) படைப்பதுபோல, அதற்கு முன்னே தோன்றுகின்ற, பிரிந்தோர்க்கு 1வருத்தம் மிகுதற்குக் காரணமான, மருண்மாலைக் கண்ணே. எ - று.

இருங்கடல் ஒலித்தெழுந்து உலகைக் கோப்பதுபோன்ற இராக்காலத்தைத் தான்படைப்பதுபோற் றோன்றுகின்ற மாலை என்க. மறைதலின் ஆங்கே தோன்றுகின்ற மாலையென்க.

11 தவலினோய் செய்தவர்க் காணாமை நினைத்தலி
2னிகலிடும் பனிதின வெவ்வத்து ளாழ்ந்தாங்கே


விதி, ‘செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின், மெய்யொருங் கியலுந் தொழிறொகு மொழியும்’ என்றதாம். என்றதன்பொருள் செய்யுஞ் செய்த என்னும் பெயரெச்சச் சொற்களினுடைய காலங்காட்டும் உம்மும் அகரமும் ஒருசொற்கண்ணே சேர நடக்கும் புடை பெயர்ச்சி தொக்குநிற்குஞ் சொற்களென்றவாறு. இங்ஙனம் இரண்டு பெயரெச்ச வாசகமுஞ் சேரத் தொக்குநிற்றலான் ஆசிரியர் ஒரு சொல்லாக்கிப் புணர்க்கலாகாதென்று புணரியனிலையுடையுணரத்தோன்றா’ என்றார்’’ என்று நச்சினார்க்கினியர் (தொல். எச்ச. சூ. 19 உரை) எழுதியிருப்பதும் அறிதற்பாலன.

1. (அ) ‘‘மாநிலமியலா முதன்முறை யமையத்து, நாம வெள்ளத்து நடுவட்டோன்றிய, வாய்மொழி மகனொடு’’ என்னும் (பரி. 3 ; 91 - 93) பகுதியும் அதனுரையும், (ஆ) ‘‘மாநில மியற்றுவான், விரிதிரை நீக்குவான் வியன்குறிப் பொத்தனர்’’ (கலி. 106 : 18 - 19.) என்பதும் அதன் குறிப்பில் இவ்விடத்துக்குப் பொருந்துவனவும் பார்கக.

2. காண்பது - செய்வதாதலின் படைப்பதென்று பொருள் கூறினார்; காணென்பது செய்யென்னும் பொருளில் வருதலை, ‘‘கம்மியர் காணாமரபின’’ (சிலப். 5 : 106) என்புழி, ‘காணா’ என்பதற்கு, ‘பண்ணப் படாதன’ என்று அடியார்க்கு நல்லார் பொருளெழுதி யிருத்தலாலும் அறிக. இக்காலத்தும் உலகவழக்கில் காணுதலின் பொருட்டாகிய பார்த்தலென்பது செய்தலென்னும் பொருளில் வழங்குகின்றது.

(பிரதிபேதம்)1வருத்தத்திற்குக் காரணமான, 2இகலிரும்பனி, இகலடும்பனி.