பக்கம் எண் :

852கலித்தொகை

லழலவிர் வயங்கிழை யொலிப்ப 1வுலமந்
தெழிலெஞ்சு மயிலி னடுங்கிச் 2சேக்கையி
னழலா கின்3றவர் நக்கதன் பயனே

எ - து: தோழீ! நம்முடைய(1) நாணை நம்மிடத்தே நிறுத்துதலைச் செய்வாமென்று உணர்ந்திருத்தல் அரிது; அதற்குக் காரணமென்னெனில் வேட்கை பெரியதாயிராநின்றது; அதனாற் றேய்ந்த உயிர் மிகச் சிறிதாயிராநின்றது; நமக்கு வருத்தத்தைத் தருதலையுடைய யாமங்களும் பலவாயிராநின்றன; அவ்வியாமங்களிற் றுயிலாதபடி துணையைப் பிரிந்து வருந்தி நம்மோடு உசாவும் அன்றில்களும் சில உளவாயிராநின்றன; ஆதலான் அவ்வுயிர் தாங்குதல் அரிது; முடிவில் அவர் நம்மோடு கூடியதனாற் பெற்றபயன் (2) பீலி உதிர்ந்த மயில்போலே பொலிவழிந்த நாணத்தால் நாம் நடுங்கச் சேக்கையிலேகிடந்து 4உடம்பு நெருப்பிலே ஓடவைத்த பொன்னாற்செய்த சிலம்புமுதலியன ஒலிக்கும்படி உலமர நமக்குக் காமத்தீ உண்டாகாநின்றதொன்றுமே. எ - று.

உலமர, நடுங்க எனத் 5திரிக்க.

மெல்லிய நெஞ்சு பையுள் கூரத்தஞ்
சொல்லினா னெய்தமை 6யல்ல தவர்நம்மை
(3) வல்லவன் றைஇய வாக்கமை கடுவிசை
வில்லினா னெய்தலோ விலர்ம னாயிழை
வில்லினுங் 7கடிதவர் சொல்லினுட் பிறந்தநோய்

எ - து: அவர் நெஞ்சுபோல் வலியுடைத்தன்றி நம்முடைய வலியில்லாத நெஞ்சு வருத்தம் மிகும்படி தாம் நின்னிற்பிரியே னென்று தெளிவித்த சொல்லால் வருத்தினமையல்லாது அவர் நம்மைப் பண்ணவல்லவனாலே பண்ணப்பட்ட (4) வடிவமைந்த கடிய விசையையுடைய (5)வில்லினால் எய்தற்றொழிலைச் செய்தலோ உடையரல்லர்; ஆயினும் ஆயிழாய்! அவர் தெளிவித்த சொல்லாற் பிறந்தநோய் மிகவும் வில்லினுங் கடிதாயிராநின்றது. எ - று.


1. “எழுந்த நாணு மிச்சையுந் தினம்போ ராடி, யகழ்தர நாணந் தோற்ற தாசையே வென்றதம்மா” திருக்குற்றாலத். புராணவியல்பும். 13.

2. “காமர் பீலி யாய் மயில்” அகம். 358 : 2.

3. “வல்லவன் றைஇய பாவைகொல்” கலி. 56 : 7.

4. வடிவு-வார்த்தல்; “வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே” புறம். 312 : 3.

5. வில், ஆகுபெயராய் அம்பை உணர்த்திற்றெனினும் ஆம்; “வில்லின் மாரியின் வீரன் விலக்கினான்” கம்ப. தாடகைவதை. 17.

(பிரதிபேதம்)1உலம் வந்து, 2சேக்கையுள், 3அவனக்கதன், 4உடம்பு சிலம்பு முதலியன, 5திரிக்க, அழலவிர் லயங்கிழை - நெருப்பிலே யோடவைத்த பொன்னாற்செய்தவிழைமெல்லிய, 6அல்லாதவர் நம்மை, 7கொடிதவர்