1அஃது என்னெனில் நீ அக்காலத்து அவனை 2மிகச்சீறில் யான் இறக்கும்படி நேரும் 3என்றுங் கூறினாள்; அங்ஙனங் கூறின அளவிலே ஞாயிறு படுகின்ற மையைக் கண்டு பிரிந்தார்க்கு வருத்தந்தகும்படியாக மாந்தளிர்போலும் நிறத்தைக்கொண்ட மாலைக்குமுன்னாகிய இக்காலத்தே இவ்வூரின் மகளிர் தாம் (1) தளிர்விரவின மாலைகளைச் சூடி ஆடவர்மேல் தாம் வைத்த நலத்தைப் பாடி இன்புறுவர்கள்; அவர்களைப்போல ஆச்சாமரந்தளிர்க்குங் காட்டிடைச்சென்றவர் 4மீண்டுவரின் யாம் மனமகிழுவேம்; அதனாற் பெற்றதென்? அவர்வரக் கண்டிலேம் என்றுங் கூறினாள்; கூறி, யாம் தளிர்க்குமாறு எங்ஙனே என்பீராயின், என்றோளைத் தொழில் கொள்கின்ற அவன் நெய்தற் பூவைப் புறவிதழொடித்து மாலை கட்டிச் சூடவும் வல்லன்; நெடிதாகிய மென்றோளிலே காமன்சிலையாகிய எழுதுகரும்பைஎழுதவும்வல்லன்; இளமுலைமேல் தொய்யிற் குழம்பாற் கொடி எழுதவும்வல்லன்; இவையொழிந்து நீங்கியிருந்து மனம் வேட்கையடக்கியிருக்குமிடத்துத் தன்கையில் வில்லைத் தொழில்கொள்ளவல்ல காமனை ஒக்கும்; அதுவன்றி, வேட்கை நிகழ்ந்து கூடுங்காலத்து ஆண்டு நிகழ்த்தும் நல்ல தொழில்கள் பலவற்றையும் வல்லன்; இவ்வாற்றான் என் மனந் தளிர்க்குமென்றுகூறினாள்; அங்ஙனங் கூறின அளவிலே மாலைக் காலம் வருகின்றதனைக் கண்டு அவனை நினையும் என்னுள்ளங் குவியுமாறு போல நெடிய கழியின் மலர்கள் குவிய, இரங்கும் என்னெஞ்சுபோலே கோவலர் குழலோசைதோன்ற, அலைவுபெற்றஎன் மொழிகள்போல (2) வண்டுகளின் (3) செவ்வழிப்பாட்டு அடங்க, கெட்டுப்போன என் அழகுபோலப் பகற் காலத்தின் ஒளி மழுங்க, கலக்கத்தோடேவந்த
1. (அ) ‘‘தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழு மலர்க், காமருகுவளைக் கழுநீர்மாமலர்ப், பைந்தளிர்ப்படலை’’ சிலப். 4 : 39-41. (ஆ) ‘‘முறி மிடை படலை மாலை’’ சீவக. 483, 1889. (இ) ‘‘பைந்தளிர்ப்படலை’’ பெருங். (3) 27 : 14. (ஈ) ‘‘கொய்தளிர்த் தண்படலை’’ (உ) இது படலை மாலை எனவும் இலை மாலை எனவும் வழங்கும். 2. (அ) ‘‘செவ்வழிப் பண்ணிற் சிறைவண்டாற்றுந், தடந்தாழ் வயலொடு’’ சிலப். 11 : 88 - 89. (ஆ) ‘‘பறவைபாட் டடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே ..........................துறந்தார்நாட் டுளதாங்கொன், மறவையா யென்னுயிர்மேல் வந்தவிம் மருண்மாலை’’ சிலப். 7 : 42. 3. (அ) ‘‘இருள்வரச், சீறியாழ் செவ்வழி பண்ணி’’ (ஆ) ‘‘மாலை மருதம் பண்ணிக் காலைக், கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி, வரவெமர் மறந்தனர்’’ (புறம். 144 : 1-2, 149 : 2-4) என்பவற்றால், செவ்வழிப்பண் மாலைக்குரித்தென்று கூறப்படுதலால் செவ்வழியா ழிசைநிற்பவென்பதற்கு, யாழிற் செவ்வழிப்பண்ணைவாசிப்ப என்றலுமாம். இஃது இரங்கற்பண்ணாதலின் சாயகிளவிக்கு உவமையாகக் கூறப்பட்டது; (பிரதிபேதம்)1அதுவென்னெனில், 2மிகச் சீறாமல் யானிறக்கும்படி, 3என்று கூறினாள், 4மீண்டுவரின் மனமகிழுவோம், அதனால்.
|