வேதாந்தங்கள் முழுதும் போற்றுமோ; எவன் அவ்வேத வேதாந்தங்களுக்கு அப்பாற் பட்டவனோ; இமையவர்களே நீவிர் இயக்க வடிவாகி வந்த அழகன் அவனே என்றறிமின். எவன்நாமம் எண்ணின் எவன்தாள் பழிச்சின் எவனைக் கருத்தின் நிறுவின், எவன் அன்பர் சேவை புரியிற் பவங்கள் இரிவுற்று முத்தி மருவும், எவன் உண்மை இன்ப அறிவாகி நிற்பன் எவன்இந்து வேணி முடியான், அவனென்று காண்மின் இமையீர் இயக்க வடிவாகி வந்த அழகன், 17 எவனது திருப்பெயரை நினைத்தால்-எவனது திருவடிகளைத் துதித்தால் -எவனைக் கருத்தில் ஊன்றினால் (தியானித்தால்)-எவனுடைய அடியவர்க்குப் பணிபுரிந்தால் பிறவி யொழிந்து முத்தி கைகூடும். எவன் சச்சிதானந்த இயல்பினனாய் விளங்குபவன். எவன் சந்திரசேகரனோ அவனென்று காணுங்கோள் இமையீா!் யக்ஷ வடிவில் வெளிப்பட்டருளிய அழகன். ஒற்றைத் துரும்பின் நுமதாற்றல் முற்றும் ஒழிவித் தகன்ற அவனைப், பற்றுற்று நீவிர் அறிகின்றி வீர்கள் பழையோன் அவன்றன் வலமே, அற்றத்தின் நீக்கும் அவன்பால் உதித்த அகிலந் தனக்கு வலமாம், மற்றுத் தமக்கு முதலாய மண்ணின் வலியே கடாதி வலிபோல். 18 ஓர் சிறு துரும்பிடை வைத்து நுமது வலிமையை முற்றும் போக்கி மறைந்தருளிய அப்பேராற்றலனைத் தன்முனைப்பு மிக்கமையால் நீவிர் காணும்வலியிலீர்கள். அப்பழையோன் வலிமையே ஆணவ மலத்தினின்று நீங்கும் பொருட்டு அவனிடை உதித்த உலகிற்கு வலிமையாகும். மண் முதலிய முதற் காரணங்களின் வன்மையே குட முதலிய காரியங்களிடைக் கிடத்தல் போல. படைப்போனையும் படைப்போன் ஆகலின் ‘பழையோன்’ என்க. கிழங்கினின்றும் தோன்றிய தாமரையை அதற்கு ஆதாரமாகிய சேற்றிலும், நீரிலும் வைத்துப் பங்கயம், அம்புயம் என்றாற் போல மாயையில் தோன்றிய உலகத்தை அதற்கு ஆதாரமாகிய சிவசத்தி சங்கற்பித்த வழித் தோன்றுதலின் அச்சிவ சத்தி மேல் வைத்துப் பேசுதலென்க. சிவசத்தியொடு சிவத்திற்கு வேற்றுமையின்மையின் ‘அவன்பால் உதித்த’ அகிலம் என்றனர். ‘காரணப் பொருளின் தன்மை காரியத் துளதாம்’. ஆகலின், ‘மண்ணின் வலியே கடாதி வலி’ என்றனர். அறிவுள் பொருளும், அறிவில் பொருளுமாகிய எப்பொருளின் ஆற்றலும் இறைவன் ஆற்றல் (சத்தி) தொழிற் படுத்தாத வழித் தொழிற்படா ஆதலின் ஆற்றல் இருந்தும் இன்மைப் பற்றியும், மேலும் வேறாய் நின்று விளக்கியும் உடனாய் நின்று விளங்கியும் உபகரித்தலின் இங்ஙனம் கூறினர். இறைவன் உலகிற்கு நிமித்த காரணனாவன்; மண் குடத்திற்கு முதற்காரணம் ஆகும். ஆகலின் ஒரு புடை கொள்க. |