பக்கம் எண் :


அமரேசப்படலம் 309


     இனிநீவிர் உய்தி பெறுமா றுரைப்பல் இமையாத முக்கண் இறையோன்,
பனிவீசு கம்பை நளிநீர் துளிக்கும் ஒருமா நிழற்படியில்என், றனையாண்டு
கொண்டு மகிழ்காமர் கச்சி தனில்எய்தி வெள்ளை விடையோன், துனிதீர்
சரண்கள் சரணென் றடைந்து தொழுமின்கள் உம்ப ருலகீர்.

     இனி நீவிர் பிழை தவிர்த்துய்யும் வகையை உரைப்பேன்; மேலுலகீர்! 
இமைத்தல் இல்லாத முக்கண்களையுடைய முதல்வன் குளிர்ச்சி பரவுகின்ற
கம்பையின் பெருமை பொருந்திய நீர் துவற்றும் ஒற்றை மாமர நிழலிடத்தில்
அடியேனை ஆண்டு கொண்டு மகிழ்தற்கிடனாகிய அழகிய காஞ்சியை
அணுகி வெள்ளிய விடையூர் விமலன் துன்பத்தை நீக்குகின்ற திருவடிகளை
அடைக்கலமென்று தொழுமின்கள்.

தேவர்கள் சிவபூசை செய்தல்

கலி நிலைத் துறை

என்று கூறினள் மறைந்தனள் உலகம்ஈன் றெடுத்தாள்
அன்று மாலயன் தொடக்கமாம் அமரர்கள் எல்லாம்
நன்று நம்அறி விருந்தவா றென்றுளம் நாணிச்
சென்று சேர்ந்தனர் கச்சியந் திருநகர்த் தேத்து.      20

     உலகுயிர்களை ஈன்று வளர்க்கும் அன்னையார் இங்ஙனம் கூறி
மறைந்தனர். அன்று திருமால் பிரமன் முதலாம் தேவர்கள் யாவரும்
‘நம்முடைய அறிவு இருந்தவாறு நன்று’ என்று கூறி உள்ளம் நாண முற்றுக்
காஞ்சிமா நகர்க்கண் சென்று சேர்ந்தனர்.

திரித சேச்சரப் பெயரினாற் சிவக்குறி இருத்திக்
கரிய கண்டனை அருச்சனை கரிசற ஆற்றிப்
பெரிது மாமிடல் பெற்றனர் வரங்களும் பெற்றார்
அரிவை பாகனுக் கினியதாம் அத்திருக் கோயில். 21

     திரி தசேச்சரர் என்னும் பெயரினாற் சிவலிங்கம் தாபித்துத் 
திரு நீலகண்ட நாயகனைக் குற்றமறப் பூசனைப் புரிந்து பெரிதும்
பெருவன்மையையும் பெற்றுப் பிறவரங்களையும் பெற்றனர். மங்கை
பங்கனுக் கத்திருக்கோயில் இனிமை பயப்பதாம்.

அமரேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்-991