பக்கம் எண் :


62காஞ்சிப் புராணம்


     பழங்கள் முதலிய பல்பொருள்களைப் பகல் முழுதும், விற்கும் மகளிர்
நாடொறு மாலைக்காலத்தில் பாத்திரங்களைக் கழுவிய சேற்று நீரால் சூழ்ந்த
அகழி வழிபாடு செய்யும் காமாட்சி அம்மையார் எமக்குத் தந்தையாகிய
சிவபெருமானுக்குத் திருமுழுக்கு ஆட்டிய நீர்மாலியங்கள் சிறிதும் பெயராது
திரண்டு கிடத்தலை ஒக்கும்.

     இவ்விருபாடல்களானும் இறைவனுக்குச் செய்யும் பூசனையில்
பொருட்குறை (உலோபம்) இன்றிச் செய்க எனக்குறிப்பிலுணர்த்தினர்.

பாசடைக் கவயம் போர்த்துப் பகைஞரோ டிகலித் தானும்
பூசலை விளைப்ப அன்னோர் கணைபொரு புழைகள் தோறுந்
தேசுற எழுந்த சோரி யாமெனச் செய்ய கஞ்சம்
மூசுவண் டீயின் ஆர்ப்ப மொய்த்துள தகழித் தெண்ணீர்.    36

     அகழியிலுள்ள தெள்ளிய நீரானது பசிய இலையாகிய கவசப்
போர்வையிட்டுப் பகைவரொடு மாறுபட்டுத் தானும் போரைச் செய்ய,
அப்பகைவர் அம்பு பாய்ந்த துளைதொறும் ஒளி மிக எழுந்த செந்நீர்
(உதிரம்) ஆகுமெனச் செந்தாமரை மலர ஈப்போல மொய்க்கும் வண்டு
ஆரவாரிப்பச் செறிந்துளது.

     அகழித் தெண்ணீர் செய்ய கஞ்சம் மொய்த்து உளது. சினைவினை
முதலொடு முடிந்தது. ‘காலொடிந்து வீழ்ந்தான்’ என்பது போலக் கொள்க.
மதிலே அன்றி அகழியும் எனப்பொருள் தருதலின், ‘தானும்’ எனும் உம்மை
இறந்தது தழீஇயது.

அணிமலர் அழகே நோக்கி அகழியுள் இழிகின் றோருந்
திணியும்முட் கொடுமை நோக்கிச் சேயிடை விலகு வோருங்
கணிகையர் கோலம் நோக்கிக் காதலித் தகப்பட் டோரும்
பிணியும்உட் கருத்து நோக்கி வெரீஇப்பெயர்ந் தகல்கின் றோரும். 37

     நிரையாக உள்ள மலர்களின் அழகொன்றையே கருதிப்பெற அகழியுள்
இறங்குவோரும், (தாழ்வோரும்), செறிந்து நிற்கும் கொடியின் முள்ளாகிய
கொடுமையை எண்ணி நெடுந்தொலைவில் விலகிப்போவோரும் ஆகிய
இருதிறத்தரும், பொருட்பெண்டிர் அழகையேநோக்கிக்காமுற்றுத் தம்
வயமிழந்து அவர் வயப்பட்டோரையும், நோயையும், உள்ளக் கருத்தையும்
எண்ணி வெருவிப் புடை பெயர்ந்து அகல்கின்றோரையும் ஒப்பர்.

     ஏகாரம் பிரிநிலை. ‘உட்கொடுமை’ எனின் முதலை முதலியவாகக்
கொள்க. கணிகையர்-கருத்தினாற் சிறுமையர்; பரத்தையர், பிணியும்-தம்
வசப்படும் (மனத்தால் காமுறாமை). பெயர்ந்து அகலல்-உள்ளத்தானும்
உடம்பானும் பிரிதல்.