விளங்குகின்ற திருநீற்றினை அணியாது ஊர்த்துவ புண்டரம் முதலிய அணிந்த வேதியர் முகங்களை மறந்தும் பார்த்தல் குற்றமாகும். கயணலுறின் திருவேகம்பரைத் தரிசனம் செய்து தூய்மை அடைக. மறையுடன் ஏனை நூல்களை எச்சந் தன்னுடன் மற்றைநல்வினையைக், கறையறும் பார்ப்பா ரோடுஞ்சூத் திரரைக் காஞ்சியினொடும்பிற் நகரைப், பிறைமுடிக் கடவு ளோடரி யயனை ஒப்பெனப் பேசற்க பேசிற், குறைவரு நிரயக் குழியில்நீ டூழி குளிப்பதற்கையமொன் றிலையே. 47 வேதத்தொடு பிற நூல்களையும், யாகத்தொடு பிற அறச் செயல்களையும், களங்கமற்ற பார்ப்பாருடன் சூத்திரரையும், காஞ்சி நகரொடு பிற நகர்களையும், சிவபிரானொடு திருமால் பிரமரையும் ஒப்பாக வைத்துப் பேசற்க. ஒப்பாகப் பேசில் பல்லூழிக் காலம் நிறைந்த நரகக் குழிகளில் மூழ்குவதற்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. இன்னன பிறவும் மறைமுதல் நூல்கள் விலக்கிடும் இவற்றினையொழிக, பன்னரு மறையின் புறத்துநூ லனைத்துங் கெடுதியே பயக்குமா தலினால், அன்னவை விடுத்து மறைநெறி வழுவா தொழுகிநீள் அலர்பொழிற் காஞ்சி, தன்னில்ஏ கம்ப நாயகன் அடியார் தம்மொடுங் குலாவுதல் முறையே. 48 இவை போல்வன வாக வேதங்கள் விலக்கிய யாவும் விலக்குக. புறச் சமய நூல்கள் தீங்கையே விளக்குமாகலின் அவற்றைக் கைவிட்டு வேதாகம விதிவழிப் பிறழாது ஒழுகித் திருவேகம்ப நாயகர் அடியவரொடும் கூடியிருத்தல் முறையாகும், இருமுது குரவர் இறந்திடு மதிநாள் ஆண்டுதோ றெய்துழி யுகாதி, வருமனு வாதி உவாமுதல் தினத்தின் வயங்குதென புலத்தவர்க் குறித்து திருமறை யவர்க்கு முறையின்ஊட் டிடுக ஏனைமாத் தலங்களிற் செய்யும், பெருநலம் அனைத்துங் காஞ்சியின் ஊட்டும் பேற்றினைச் சிறிதும் ஒவ் வாவால். 49 தாய் தந்தையர் இறந்த நாளாகிய ஆண்டுதோறும் அம்மாதத்தில் வரும் அப் பட்சத்துத் திதியிலும், யுகாதி மனுவாதி, அமாவாசை, பருவம் எனப்படும் நாட்களிலும் விளங்குகின்ற பிதிரரை நோக்கி அந்தணரை முறைப்படி உண்பிக்க. பிற பெருந் தலங்களிற் செய்யப்படும் தருப்பணாதிகளால் வரும் பெரு நன்மைகள் யாவும் காஞ்சியில் உண்பிக்கும் பேற்றினுக்குச் சிறிதும் ஒவ்வா வாகும். |