பக்கம் எண் :

பக்கம் எண் :302

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை

மணிமேகலா தெய்வம், சாதுசக்கரற்கு ஆரமுது ஈத்தோய் ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே - சாதுசக்கரன் என்னும் முனிவனுக்கு உணவளித்த நினது பிறப்பு இஃது என்பதை உணர்ந்தே, உவவனமருங்கில் உன்பால் தோன்றி - உவவனத்தில் நின்னிடம் தோன்றி, மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என - மணிபல்லவமென்னுந் தீவின்கன் கொண்டுசேர்த்தது கேள் என்று, துவதிகன் உரைத்தலும் - துவதிகன் கூறுதலும், துயர்க்கடல் நீங்கி - துன்பக்கடலினின்றும் நீங்கி, அவதி அறிந்த அணியிழை நல்லாள் - எல்லையை அறிந்த மெல்லியலாகிய மணிமேகலை, வலையொழி மஞ்ஞையின் மனமயக்கு ஒழிதலும் - வழையினின்றும் நீங்கிய மயிலைப்போல மனக்கவலை நீங்குதலும், உலகுதுயில் எழுப்பினன் மலர்கதிரோன்என் - உலகத்தை உறக்கத்தினின்றும் எழுப்பினன் பரந்த கதிர்களையுடைய பரிதிவானவன் என்க.

ஊங்கண்-முன்பு; 1''''தூங்கெயி லெறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்'''' என்பது காண்க. திரை-கடல்: ஆகுபெயர். முன்னோனொருவனை மணிமேகலா தெய்வம் கடலினின் றெடுத்ததைச் சிலப்பதிகாரத்து அடைக்கலக் காதையில் 2''''இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல், உடைகலப் பட்ட வெங்கோன் முன்னாள், புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்,......விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த, எங்குல தெய்வம்'''' என வருவதனாலறிக. சாதுசக்கரனுக்கு அமுது ஈந்ததனை இந் நூலின் மந்திரங் கொடுத்த காதையில் 3;''''சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன்,......அந் நாளவனுண்டருளிய அவ்வறம்'''' எனப்போந்தமையா லறிக. கேள் எனப் பின் வந்தது அசை. அவதி - தான் வீடுபெறும் எல்லை. துயிலெழுப்பினன் என்பது பரியாயம்; உதித்தான் என்றபடி.

குழலி எழுந்து கேட்டு எழுந்து நீங்கி வெப்துயிர்த்துப் புலம்பி அழுதேங்கி அயாவுயிர்த் தெழுதலும், இருந்தெய்வம் உரைத்தலும், பூங்கொடி பொருந்தி, ''நின் பேரருள் பெறுவேன்'' என, தெய்வங் கூறும் ; அங்ஙனங் கூறுந் தெய்வம். ''என்சொல் தேறு'' என, மணிமேகலை, ''எனக்கு அருள்'' என்றலும் துவதிகன் உரைக்கும் ; உரைப்பவன் உரைத்தலும், நல்லாள் நீங்கி மயக்கொழிதலும், கதிரோன் உலகு துயிலெழுப்பினன் என, வினை முடிவு செய்க.

கந்திற்பாவை வருவதுரைத்த காதை முற்றிற்று.


1 புறம். 39.  2 சிலப். 15: 28-37.  3 மணி 10: 24-40.