|
[கதிரவன் உதித்தவுடன் கந்திற் பாவையையும்
சம்பாபதியையும் வழிபட்டவர்கள் அங்கே உதயகுமரனுக்கு நேர்ந்ததனைச் சக்கரவாளக்
கோட்டத்திலுள்ள முனிவர்களுக்குக் கூறினர். அம்முனிவர்கள் ''நீ இதனை அறிந்த
துண்டோ ?'' என்று மணிமேகலையைக் கேட்ப, அவள் நிகழ்ந்தவற்றை உரைக்க,
அன்னோர் மன்னவன் மகன் உடம்பையும் மணிமேகலையையும் வேறிடத்தில் ஒளித்துவைத்து
விட்டு, அரசன் கோயிலை யடைந்து தம்முடைய வரவை வாயில்காப்போரால் அறிவித்து
உள்ளேசென்று அரசனைக்கண்டு வாழ்த்தினர்.அவர்களுள் ஒரு முனிவர், ''அரசே !
இன்று மட்டு மன்று; இப்பதியிலே காமமாகிய கள்ளினைப் பருகிப் பத்தினிப்
பெண்டிரை நெருங்கியும், தவமகளிரை விரும்பியும் ஒறுக்கப்பட்டிறந்தோர் முன்னாளிலும்
பலருளர்'' என்று தொடங்கி, பண்டு காந்தன் என்னும் சோழமன்னனுக்குக் கணிகை
வயிற்றுதித்த ககந்தன் என்பவன், பரசுராமனுக்கு அஞ்சிப் புகார் நகரை விடுத்துச்
செல்லலுற்ற தந்தையின் கட்டளையால் அப்பதியைப் பாதுகாத்து வரும் நாளில்,
ககந்தன் மக்களுள் இளையவன் மருதி என்னும் பார்ப்பனியைக் கண்டு காமுற்றுத்
தாதையின் வாளால் தடியப்பட்ட வரலாற்றையும், அந்நகரிலிருந்த விசாகை யென்னும்
கற்பிற் சிறந்த வணிகமாதை முன்பு மருதியால் மடிந்தவனுக்கு மூத்தோன் கண்டு
காமுற்றுத் தந்தையால் வெட்டுண்டிறந்த வரலாற்றையும் உரைத்தனர். கேட்ட அரசன்
''இன்று மட்டுமன்று என்று தொடங்கிப் பலவற்றையும் கூறினீர் ; முன்பு நிகழ்ந்ததாகக்
கூறிய அத் தீய வொழுக்கம் இந்நாளிலும் உளதோ ? இயம்புமின்'' என்று கேட்ப,
அம்முனிவர்களுள் ஒருவர், ''தன் கணவனாகிய கோவலன் கொலையுண்டது பொறாமல்
மாதவி உலக வாழ்வை வெறுத்து முனிவர்களுடைய தவப்பள்ளியை அடைந்தனள்'' அவள்
பெற்ற மணிமேகலை யென்பவள், இளம் பருவத்தே தானே தவஞ்செய்யத் துணிந்து
இல்லந்தோறுஞ் சென்று ஐயமேற்கொண்டு ஊரம்பலமடைந்தாள் ; அவள் அவ்வியல்பினளாகவும்,
உதயகுமரன் அவளை விழைந்து காமம் காழ்கொள் நிழல்போல் விட்டுநீங்காது
நள்ளிருளில் அவ் வம்பலத்தைடைந்தான் ; அது தெரிந்த மணிமேகலை அவன் தன்னை
நலியாதிருக்க வேண்டிக் காயசண்டிகை வடிவம் பூண்டனள் ; காயசண்டிகையை அழைத்துச்செல்லுதற்கு
வந்து அங்கு முன்னமிருந்த அவள் கணவனாகிய காஞ்சனன் என்னும் விஞ்சையன் கண்டு,
அவள் மணிமேகலை யென்பதை அறியாமல், அவளைத் தன் மனைவியாகிய காயசண்டிகையென்றும்,
அங்கு வந்த உதயகுமரனைத் தன் மனைவியை விரும்பி வந்தவனென்றும் தானே அறுதியிட்டுக்கொண்டு
முறுகிய சினத்துடன் உடனே. அவனை வாளால் எறிந்து வீழ்த்தினன்'' என்று கூறினர்
அதுகேட்ட அரசன் தன்
|