பக்கம் எண் :

பக்கம் எண் :439

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

சீவன் என்றும் சாங்கிய நூல்கள் கூறுகின்றன. ஆன்மா வென்பது உபநிடத வழக்கு. உயிரென்பது தமிழ்வழக்கு. ஈண்டுக்கூறியசாங்கிய நெறிக்குரிய கருத்துக்களெல்லாம், அந்நெறி வழங்கும் நூற்பொருளைத் தெளியக் கொண்டு கூறியன வென்றற்கு, "செயிரறச் செப்பியதிறம்" என்றார். "கேட்டு என்றதனால், அக்கேள்வியால் மணிமேகலை யமையாளாயினமை பெறப்பட்டது. இயைபுடைய சொற்கள் வருவிக்கப்பட்டன.

வைசேடிகவாதி

241--4.  வைசேடிக - ஆங்குப்போந்த வைசேடிகவாதியைக் கண்டு வைசேடிகனே; நின்வழக்குரை என்ன - உன்னுடைய நூல்வழக்கினைக் கூறுக என்று மணிமேகலை கேட்க; பொய்தீர் பொருளும்-கெடாத பொருளென்றும்; குணமும் - குணமென்றும்; கருமம் - தொழிலென்றும்; சாமானியமும்-பொதுவென்றும்; விசேடமும்-சிறப்பென்றும்; கூட்டமும் ஆம் ஆறுகூறாம் - சமவாயமென்றும் பொருள்கள் அறுவகைப்படும் எ - று.

பொருளைத் திரவிய மென்றும், பொதுவைச் சாமானியமென்றும், சிறப்பை விசேடமென்றும், கூட்டத்தைச் சமவாயமென்றும் வைசேடிகர் கூறுவர். பிற்கால வைசேடிகர் இவ்வாறனோடு இன்மை கூறும் அபாவத்தைக் கூட்டிப் பொருள் ஏழென்பாராயினர். இவர்கள் கூட்டத்தை அகக் கூட்டம் புறக்கூட்டமெனப் பகுத்து அவற்றைமுறையே சமவாயமென்றும் சம்யோகமென்றும் கூறுப. இவற்றின் விரிவைப் பதார்த்த தரும சங்கிரகம், சத்தபதார்த்தி முதலிய வடநூல்களுட் காண்க.

244--6.  அதிற் பொருள் என்பது-அப்பொருட் கூறுபாட்டில் ஒன்றாகிய பொருளெனப்படுவது; குணமும் தொழிலும் உடைத்தாய்-குணஞ் செயல்களையுடையதாய்; எத்தொகைப் பொருளுக்கும் ஏதுவாம் - தொகுதிப் பொருள்வகை யெல்லாவற்றிற்கும் காரணமாம் எ - று.

குணஞ்செயல்களின் வேறாய் அவற்றை யவாவி நிற்பதும் எவ்வகைத் தொகுதிப் பொருட்கும் காரணமாய் நிற்பதும் பொருளென்றவாறு. இவற்றின் இயல்பை நித்தியம், அநாசிருதம், அந்தியவிசேடமென மூன்று வகையாகப் பகுத்துக் கூறுவதுமுண்டு. முதலும் சார்புமெனக் கொண்டு, முதற்பொருள் நித்தமெனவும், சார்பெல்லாம் அழிதன்மாலைய வென்றும் கூறுப. சார்பு, அவயவி திரவியம் எனப்படும்.

246--51.  அப்பொருள் ஒன்பான்-அப்பொருள்கள் ஒன்பது வகைப்படும்; ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை காலம் ஆன்மா மனம் - (அவை) நிலமும் நீரும் தீயும் காற்றும் விண்ணும் திசையும் காலமும்