பக்கம் எண் :

பக்கம் எண் :592

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை

கூறிட்டு வினாவி மொழிதலென்னாது, "மொழிதல்" என்றதனால் ஏற்புடைய மொழிகள் வருவிக்கப்பட்டன. இனித் தெய்வச்சிலை யார், "கூறிட்டு மொழிதலாவது செத்தவன் பிறப்பானோ என்ற வழி, பற்றறத் துறந்தானோ பிறனோ என்றல்," என்று வினா வாய்பாட்டாற் கூறிட்டு மொழிதல் கூறுவர்.

244--6.வினாவின் விடுத்தல் - வினாவெதில் வினாவி விடையிறுத்தலாவது ; முட்டை முந்திற்றோ பனை முந்திற்றோ எனக் கட்டுரை செய் என்றால் - முட்டையாகிய விதை முந்தியதோ பனை முந்தியதோ இன்னது முந்தியது என விடையிறுக்க என்று ஒருவன் வினாவினால்; எம்முட்டைக்கு எப்பனை என்றல்-எந்த முட்டைக்கு எந்தப் பனை காட்டுக என விடையிறுத்தலாம் எ - று.

பனையின் விதையை முட்டை யென்றல் வழக்கு. பனைவிதையின் கூடு கொண்டு எண்ணெய் விற்பார் அதனை முட்டை யென்று வழங்குமாறு காண்க. முட்டையைக் காட்டியவழி, அதனைப் பயந்த பனை முந்திற்றாதலும், பனையைக் காட்டியவழி முட்டை முந்தியதாதலும் இனிது விளங்குதலின், எதிர் வினாவும் விடையாதல் கண்டு, "வினாவின் விடுத்தல்" என்றார். "வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே" (சொல். 14) என்பது தொல்காப்பியம். தெய்வச்சிலையாரும் இதுவே கூறினர்.

247--9.வாய் வாளாமை - ஒன்றும் விடை கூறாதொழிதலாவது ; ஆகாயப்பூ பழைதோ புதிதோ என்று புகல்வான் உரைக்கு-ஆகாயப் பூ பழமையானதோ புதியதோ என்று கேட்க விரும்புவோன் வினாவிற்கு ; மாற்றம் உரையாதிருத்தல் - விடையொன்றும் கூறாதொழிதலாம் எ -று.

ஆகாயத்தில் பூ இல்லாமையின், அது இல் பொருளாதலின் அதனைக் குறித்து வினாதலும் விடுத்தலும் பயனில மொழிதலாய்க் குற்றம் பயத்தலின், வாய் வாளாமை வேண்டுவதாயிற்று. தெய்வச் சிலையாரும் "ஆகாயப் பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை" யென்றார். விடை யொன்றும் கூறாது அவனோடு வேறு உரையாடலும் கூடாதென்றற்கு, "மாற்றம்" என்றும், அவன் பயனில் சொல் பாராட்டுவோ னென்பார், "புகல்வோன்" என்றும் கூறினார்.

250--3.கட்டும் வீடும் - கட்டும் வீடுமாகிய இரண்டினையும் ; அதன் காரணத்ததும் - ஒவ்வொன்றன் காரணத்தினையும் ; ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை-கூடியிருந்து பெறுவித்தற் குரியவர் பிறர் யாருமில்லை ; யாம் மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் - யாம் முன்னே சொல்லியுள்ள துக்கங்க ளெல்லாவற்றிற்கும் ; காமம் வெகுளி மயக்கம் காரணம் - காமமும் வெகுளியும் மயக்கமும் என்ற மூன்றுங் காரணமாம் எ - று.