|
பசு என்பது முதற்காலத்தில், பொதுவாக, கட்டப்பட்ட ஒரு விலங்கை மட்டும் தனிப்படவும் தொகுதியாகவும் (இருபாற் பொதுப் பெயராகக்) குறித்து, பின்பு வேள்வி யுயிரிப் பெயராக வழங்கி, அதன்பின் ஆவிற்குச் சிறப்பாக வழங்கி வந்திருக்கின்றது.
ஆரிய வழக்கைத் தழுவியே, பசு என்னும் சொல் தமிழிலும், செய்யுள் வழக்கில் விலங்கு, காளை என்னும் பொருள்களில் வழங்கியிருக்கின்றது.
"பசுவேறித் திரிவானோர் பவன்" (தேவா. 760, 4) என்னுமிடத்திற் காளையையும், "பசுக்களைப் போலச் செல்லும் நடையால்" (பதினொ. பட்டினத். திருவேகம். 32) என்னுமிடத்தில் விலங்கையும், பசு என்னும் சொல் குறித்தல் காண்க. ஆன் என்னும் தூய பெண்பாற் சொல், தமிழ் மரபிற்கு மாறாக,
| |
ஆன்முகத்தன் அடற்கண்நாயகன் (கந்தபு. பானுகோ. 95)
|
|
என்னுமிடத்திற் காளையைக் குறிப்பதும் ஆரிய வழக்கைத் தழுவியே.
பசு என்பது ஆவை மட்டுங் குறிப்பது உலக வழக்காகும்.
வேத ஆரியர் தமிழரோடு தொடர்பு கொண்டு சிவநெறிக் கொண் முடிபு (சைவசித்தாந்தம்) கற்றபின்னரே, பாசம், பசு, பசுபதி என்னும் பெயர்கள், முறையே, தளை (மலம்), புலம்பன் (ஆன்மா). இறை என்னும் பொருள்களில் அணியியன் முறையில் ஆளப்பெற்றன.
பசு என்னும் சொற்கு இனமாக, இலத்தீனில், peck (cattle) bos என்னும் சொற்களும், கிரேக்கத்தில் bous என்னும் சொல்லும் உள்ளன. இவற்றுள் பின்னிரண்டையும் gaus என்னும் வட சொல்லோடிணைப்பர். மேலை மொழி நூலாரும் அகராதியாளரும். இது அத்துணைப் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆயினும் ககரத்திற்கும் பகரத்திற்கும் போலித் தொடர்பிருப்பதால், அதை முற்றும் மறுத்தற்கில்லை.
Pecu என்னும் இயற் சொல்லினின்று திரிந்து பணத்தைக் குறிக்கும் Pecunia (money) என்னும் இலத்தின் பெயர்ச் சொல்லும், Pecuniary என்னும் ஆங்கிலப் பெயரெச்சமும், செல்வத்தைக் குறிக்கும் மாடு என்னும் சொல்லொடு ஒப்புநோக்கற் குரியன.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை |
(குறள். 340) |
என்றார் திருவள்ளுவர்.
கோ (ஆன்) என்னும் தென்சொல் மேலையாரிய மொழிகளிலும் சென்று வழங்குவதும், pecunia என்னும் இலத்தீன் சொல் மாடு என்னும் தென்சொல்லொத்துச் செல்வத்தை யுணர்த்துவதும், பேராசிரியர் பி.டி.சீநிவாச ஐயங்காரும், பண்டாரகர் இராமச்சந்திர தீட்சிதரும் கூறியுள்ளவாறு, குமரிக்கண்டத் தமிழருள் ஒரு கூட்டத்தாரே மேலை நாடு சென்று ஆரியராக மாறியுள்ளமையை உணர்த்தும்.
|