பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 79
79

அழைத்தனர். அவற்றில் அளவிறந்த ஆரியர் சொற்கள் கலந்து சிதைந்த வடிவிற் காணப்படுவதுபற்றி, பிற்காலத்தார் அம் மொழிகளை வடமொழி (சமற்கிருத) வழியினவாகப் பிறழ வுணர்ந்தனர். இதே காரணம்பற்றி, பழஞ்சேர நாட்டுத் தமிழ்த் திரிபாகிய மலையாளத்தை வடமொழியினின்று வந்ததாக இன்று சிலர் கூறுவது காண்க.

கி. மு. 3ஆம் நூற்றாண்டினராகக் கருதப்படும் காத்தியாயனர், பைசாசி, சௌரசேனி, மாகதி, மகாராட்டிரி எனப் பிராகிருத மொழிகளை நான்காகவே கொண்டனர். திராவிடத்தை அவர் கொள்ளாதது அறியாமையோ புறக்கணிப்போ அறிகிலம்.

ஒருகால் மகாராட்டிரியில் அதை அடக்கினர் போலும். பிற்காலத் தாசிரியர் சிலர் திராவிடி என்பது ஒரு சிறுதரப் பிராகிருதம் என்றனர். ஆயின் 19ஆம் நூற்றாண்டிலிருந்த பாபு ராசேந்திரலால் மித்திரா என்னும் வங்காளர், அதை சூரசேனியோடொத்த பெரும் பிராகிருதம் எனக் கூறினர்.

தமிழினின்று முதலாவது பிரிந்த திரவிட மொழி., தெலுங்காகும். அது வட திசையில் தோன்றியமைபற்றி வடுகு எனப்பட்டது. குமரில பட்டர் காலத்தில் தெலுங்கு தனித்துக் கூறப்படுமளவு வளர்ச்சியடைந்து விட்டதனால், அவர் அதுவரை திராவிடம் என்னும் பொதுப் பெயராலேயே வழங்கிய செந்தமிழையும் கொடுந்தமிழ்களையும், தெலுங்கு தமிழ் மொழி என்னும் பொருள்பட ஆந்திர திராவிட ''பாசை'' என்றனர். தெலுங்கிற்குப்பின் தமிழினின்று பிரிந்த பெருமொழி கன்னடம். அதனால் வடகலை தென்கலை வடுகு கன்னடம் எனக் கம்பராமாயணச் சிறப்புப்பாயிரச் செய்யுளொன்றில் கன்னடமும் சேர்க்கப்பெற்றது. 12ஆம் நூற்றாண்டிற்குப்பின், மலையாளம், துளு, குடகம் முதலிய பிற கொடுந்தமிழ்களும் பிரிந்து போயின. சென்ற நூற்றாண்டில் கால்டுவெல் திரவிட மொழிகள் பதின்மூன்றெனக் கணக்கிட்டார். இன்றோ அவை பத்தொன்பதெனப் பரோ, எமனோ என்னும் இரு மேலை மொழிநூல் வல்லாரால் கணக்கிடப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் இந்தியா முழுதும் திரவிடம் பரவியிருந்த தென்பதற்கு, இன்றும் பெலுச்சித்தானத்தில் பிராகுவியும், வங்காளத்தில் இராசமகாலும் வழங்கிவருவதே போதிய சான்றாம். ஆரியர் வந்து வட இந்தியா முழுதும் பரவியபின், விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள மொழிகளெல்லாம் திரவிடம் என்னுங் கொள் கையிருந்தது. அதனாலேயே, தெலுங்கு, கருநாடகம், மராத்தி, கூர்ச்சரம் (குசராத்தி), திராவிடம் என்னும் ஐந்தும் பஞ்ச திராவிடம் என்று வட நூல்களும் கூறின. இப் பட்டியில் திராவிடம் என்னும் பெயர் தமிழைமட்டுங் குறித்தல் கவனிக்கத்தக்கது. திராவிட(ம்) என்பது சில வட நூல்களில் திராவிர(ம்) என்றும் திரிந்தது. டகரம் ரகரமானது போலி.

இதுகாறுங் கூறியவற்றால், தொன்று தொட்டுத் தமிழையே தனிப்படவும் தலைமையாகவும் குறித்துவந்த திரவிடம் என்னும் சொல், தமிழம் என்பதன் திரிபே என்பது, வரலாற்றுணர்ச்சியுடையார்க் கெல்லாம் தெற்றென விளங்குதல்