7. |
இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது |
|
மஞ்சு லாமதி சூடின மாளிகை |
|
அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால் |
|
விஞ்சை யாருல கத்தினை 1வெல்லுமே. |
(இ-ள்.)
(அவ்விராசமாபுரத்தின்), இஞ்சி - மதில், மஞ்சினை எய்தி நிமிர்ந்தது - மேகமண்டலத்தை
அடைந்து(அதற்கு மேலும்) உயர்ந்துளது; மாளிகை - அந்நகர மாளிகைகள், மஞ்சு உலாம் மதி
சூடின-மேகங்களின் இடையில் தவழ்ந்து காணப்படுகின்ற சந்திரனைத் தமக்கு உச்சிச் சூட்டாகச்
சூடிக்கொண்டிருந்தன, (அந்நகரம்), அஞ்சொலாரவர் பாடலொடு ஆடலால் - அழகிய இன்சொல்லினையுடைய
பெண்களின் இசைப் பாட்டுக்களோடு கூடிய பரத நாட்டியத்தால், விஞ்சையார் உலகத்தினை
வெல்லும் - வித்யாதரருலகத்தினையே வெல்வதாகும். (எ-று)
ராஜமாபுரம் தன் அழகால் விஞ்சையருலகினும் மிஞ்சிநின்றது
என்க.
மதில் மேகமண்டலத்தின் மேலும் உயர்ந்துளது என்றதனை,
‘இஞ்சிமாக நெஞ்சுபோழ்ந் தெல்லை காண வேகலின், மஞ்சு சூழ்ந்து கொண்டணிந்து
மாக நீண்ட (சீவக.143.) என்ற திருத்தக்க தேவர் வாக்கிலும் காண்க.
மதிலினும் மாளிகை உயர்ந்தன வென்பதற்கு மதி சூடின மாளிகை
என்றார். மஞ்சுலாம்மாளிகை மதிசூடின‘ எனலுமாம் இதனை‘ வண்கொண்டல் விட்டுமதி முட்டு
வன மாடம்‘ என்ற கம்பர் வாக்கிலு மறிக. மதில் மாடம்’ முதலியவற்றாலும் மாதர்தம் ஆடல் பாடலாலும் மேம்பட்டிருத்தலால்
விஞ்சையருலகினை வெல்லும் என்றார். ‘அஞ்சொலாரவர்’; என்பதில் அவர், பகுதிப்பொருள்
விகுதி-வெல்லுதல் - மிக்கிருத்தல்.
|