அரசனியல்பு
8. |
பாரி தத்தினைப் பண்டையின்
மும்மடி |
|
பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை |
|
வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன் |
|
மாரி தத்தனென் பானுளன் மன்னவன். |
(இ-ள்.)
பார் - உலகிற்கு வேண்டிய, இதத்தினை-நன்மைகளை, பண்டையின் - முன்னையினும் (தனக்கு
முன்ஆண்டிருந்த அரசர்களைக்காட்டிலும்) மும்மடி-மும்மடங்கு, பூரிதத்து - மிகுதலுடனே (ஆட்சி
புரிகின்ற), ஒளிர் -விளங்குகின்ற, மாலை-மாலையினையும், வெண்பொற் குடை. - வெண்பொன்
குடையினையும், வாரிதத்தின்-மேகத்தின் தன்மையைப்போல, மலர்ந்த கொடைக்கரன்-விரிந்த
ஈகைசான்ற கைகளையுமுடையனாகிய, மன்னவன்-அரசன், மாரிதத்தன் என்பான்-மாரிதத்தன்
என்னும் பெயரை யுடையவன் ஒருவன், உளன்-இருந்தான். (எ-று.)
அந்நாட்டை மாண்புற ஆண்டுவந்த மன்னவன் மாரிதத்த னெனப்படுவான்
என்க.
பார் - பூமி; இடவாகுபெயராய் மக்களை யுணர்த்ததிற்று. இதம்-ஹிதம்;
வடசொல். மக்களின் பொருள் முதலிய வருவாயைக் கவர்தலின்றி, அம்மக்கள் மிக்க நலனடையுமாறு
ஆட்சிபுரிவதே சிறந்ததென்று குறிப்பிக்க, ‘பாரிதத்தினைப் பண்டையின் மும்மடி பூரிதத்து’
என்றார் அவன் முன்னோரும் அங்ஙனமே ஆண்டனர் என்பார், ‘பண்டையின்’ என்றார். பண்டையின்;
‘இன்’ எல்லைப் பொருள்.
பூரிதம்-நிரப்பப்பட்டது; அத்து, சாரியை. ஒளிரும் மாலை
- முத்துமாலை முதலியன. வாரிதம்-மழையைத் தரும் மேகம் ‘வாரிதத்தின’ என்பதிலுள்ள,
இன் ‘ஒப்புப் பொருள’. கைமாறு வேண்டாது சிறந்ததானம் அளிப்பதனால், மேகம் உவமையாயிற்று.
குணங்களின் சிறப்பைக் கொடையினாலறியலாமாதலின், ‘கொடைகாரன்‘ என்றார். மலர்தல்-விரிதல்;
ஈண்டு, மகிழ்ச்சியால் முகம் மலர்தல்.
|