பக்கம் எண் :

Yasodara Kavium

- 16 -

9.  அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர்1
  மருவு மானுயர் வானவர் போகமும்
  பொருவில் வீடு புணர்திற மும்மிவை
  தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால்.

(இ-ள்.) அந்நகர் - முற்கூறப்பட்டநகரமாகிய இராசமாபுரத்தில், அரசன் - அரசனாகிய, அவன் தன்னொடும்-அம் மாரிதத்தனுடனே, மருவும் - பொருந்தி வாழ்கின்ற மானுயர் - குடிமக்கள் (ஒன்று பட்டவராய் ), செல்வம்மயக்கினால் - தங்கள் செல்வக் களிப்பினால்,வானவர் போகமும் -(மறுமையிலடையும்) தேவருலக இன்பமும், பொருவு இல் வீடு புணர்திறமும் - ஒப்பில்லாத வீடுபேற்றை அடைதற்குக் காரணமான திருவறத்தினது தன்மையும், இவை-ஆகிய இவற்றை, தெரிவதுஒன்று இலர்-ஆராய்வது சிறிதும் இலராயினர். (எ-று.)

மன்னனும் நகரமாந்தரும் செல்வக் களிப்பால் அறத்தை ஆராயாது விட்டனர் என்க.

போகத்திலீடுபட்ட மன்னனும் மக்களும் உண்மை உணரார் என்க. அரசனெவ்வழி குடிகள் அவ்வழி யராதலின் அரசனைப்போலவே மக்களும் செல்வச் செருக்கினால் போகத்திலீடுபட்டு, மறுமையில் புண்ணியத்தாலடையும் தேவ சுகத்தையும், திருவறத்தா லடையும் அனந்த சுகத்தையும், மறந்தனரென்க.  ‘அந்நகர்‘ என்பதும், ‘அவன்’ என்பதும் முற்கூறிப் போந்த ராஜமா புரத்தையும் மாரிதத்தனையும் குறிப்பிடும் சுட்டுப் பெயர்கள். மற்று - அசை. மருவுதல்-பொருந்துதல். மக்கள் நுகரும் இன்பத்தைவிட வானவர் நுகரும் இன்பமும் வீட்டின்பமாகிய கடையிலா வின்பமும்  ஒன்றுக்கொன்று மிக்கதாதலின், ‘வானவர்......திறமும’ என்றார்‘. துன்பத்திற்குக்காரணமாகியுள்ள நான்கு கதியினையும் வேறுபடுத்த வேண்டி, ‘பொருவில் வீடு என்றார்’. அறம் பொருள்இன்பம் வீடு என்ற நான்கனுள் அறத்தினையும் வீடுபேற்றினையும் அறவே மறந்தனரென்க. ஒன்றிலர் என்னுமிடத்து விவகாரத்தால் உம்மை தொக்கது.  மானுயர்-வடசொல்.

 

1 மன்னகர்.