பக்கம் எண் :

Yasodara Kavium


- 322 -

பொறை - பாரம். ‘அரசபாரமவை பொறை‘ (சூளா: மந். 37.) ‘பொன்செய் மாமுடிப் புதல்வருள்‘ என்பதற்கு, பொன்னாற் செய்த சிறந்த முடியைச் சூடுதற்குரிய புதல்வர்கட்குள் என்று நேரே பொருள் கூறவும் அமையும்.   (95)

315.  வெய்ய தீவினை வெருவுறு மாதவம
 
       விதியினின் றுதிகொண்டான்
  ஐய தாமதி சயமுற வடங்கின
 
       னுடம்பினை யிவணிட்டே
  மையல் வானிடை யனசனர் குழாங்களுள்
 
       வானவன் றானாகித்
  தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம்
 
       தொகுதியின் மகிழ்வுற்றான்.

(இ-ள்.) (மாரிதத்த முனிவன்), வெய்ய தீவினைவெருவு உறும் மாதவம் விதியினின் - கொடிய வினைகளும் அஞ்சத் தக்க சிறந்த தவத்தினது முறைப்படி, துதி கொண்டான் - துதி செய்தவனாகி, அனசனர் குழாங்களுள் - உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் சிராவகர் கூட்டத்திலுள்ளவரும், ஐயதுஆம் - வியக்கத்தக்கதாகிய, அதிசயம்உற - (ஏழுவிதருத்தியாகிய) அதிசயம் உண்டாக, அடங்கினன் - (ஐம்புலன்களும்) அடங்கினவனாகி, உடம்பினை இவண் இட்டு -(தன்) பூதவுடலை இவ்வுலகத்தில் போகட்டு,  வான் இடை - தேவருலகில், வானவன் ஆகி - தேவப்பிறவி யெய்தி, மையல் - (இன்பத்து) மயங்கச் செய்யும், தொய்யில் மாமுலை - அழகிய ஸ்தானங்களையுடைய, சுரவரர் மகளிர்தம் தொகுதியில் - தேவமாதர்களின் கூட்டத்தில், மகிழ்வு உற்றான் - கூடி இன்புற்றான்.

மாரிதத்த முனிவன் தேவனாகித் தேவியருடன் இன்புற்றா னென்க.

விதியினின்று உதி கொண்டான் என்று பிரித்தும் பொருள் கொள்ளலாம்.  உதிதல்-உதித்தல். ‘உதிதர வுணர்வல்‘ என்றார் (சீவக. 1340) திருத்தக்கதேவர். ஐ: ‘ஐ வியப்பாகும்‘. (தொல்)தரம், அசை.  ஏழுவித ருத்தியாவன: புத்தி, விக்ரியா, தப, பல, ஒளஷத, ரஸ, அக்ஷீணம் என்பன.