உலகைத் திருத்திய
உத்தமர் முஹம்மது
நபி அவர்களின்
உன்னதமான வாழ்க்கை
வரலாற்றை நெஞ்சை
அள்ளும் தீந்தமிழில்
கவிதைகளாகப்
புனைந்து, நெஞ்சில்
நிறைந்த நபிமணி
என்ற இந்த காவியத்தின்
மூலம் தமிழ்
உலகிற்கு வழங்கியுள்ளார்
திரு. சிராஜ்
பாக்கவி.
இஸ்லாமிய
நெறிகள் அறிய
அரபிச் சொற்கள்
ஓரளவாக தெரிந்து
இருந்தால்தான்
முடியும் என்ற எண்ணம்
பரவலாக மக்கள்
உள்ளத்தில் இருந்துவந்தது.
அந்த எண்ணத்தை
மாற்றி, தமிழ்
மூலமும் இஸ்லாமிய
கோட்பாடுகளை
அறிய முடியும்
என்பதையும், பழகு
சொற்களைக்
கொண்டே பைந்தமிழ்
இலக்கியம்
படைக்க முடியும்
என்பதையும் இந்நூல்
மூலம் நிரூபித்துக்
காட்டியுள்ளார்,
பாக்கவி அவர்கள்.
நபிமணியின்
புகழ்பாடி நற்றமிழ்
வளர்த்திட
விழைகிறது கவிஞரின்
தமிழ் நெஞ்சம்.
அதற்கு சான்று
அளிப்பது உங்கள்
கைகளில் மிளிரும்
கருத்துச் செறிவும்
சொல்லழகும்
கவிதை நயமும்
தமிழின் இனிமையும்
அதன் எளிமையும்
ஒருங்கே அமைந்த
இந்த நாயகக்
காவியம்.
அரபிச் சொற்கள்
கலந்த, தமிழில்
எழுதப்பட்ட சில
இஸ்லாமிய நூல்கள்
நான் படித்திருக்கின்றேன்.
ஆனால், நெஞ்சில்
நிறைந்த நபிமணியில் செந்தமிழின்
இனிய ஓசையினை
இறுதிவரை கேட்டேன்,
இதயம் மகிழ்ந்தேன்.
சுருங்கக் கூறின்
பாக்கவியின்
இந்த ஆக்கம்
ஒரு தமிழ்த்
தேக்கமாகும்;
இப்பெருங்காப்பியம்
இஸ்லாமியத்
தனித் தமிழ்
இலக்கியத்தின்
தோற்றுவாய்
என்னல் மிகையன்று.
இத்தகு காவியத்தைப் படித்து முடித்ததும்
இஸ்லாமிய தத்துவத்தை
முழுக்க முழுக்கப்
புரிந்துகொண்ட
தெளிவான உணர்வினைப்
பெற்றேன். நான்
பெற்ற அந்த நல்ல
உணர்வினை எல்லோரும்
பெறவேண்டும்
என்பதே என் பேரவா. |