திரு மௌலவி
பாஜில் ஸிராஜ்
அவர்கள் இயற்றிய
நெஞ்சில் நிறைந்த
நபிமணி என்ற
காவியத்தை
முழுதும் படித்து
மிகவும் சுவைத்தேன்.
என்னுடைய இளம்
பிராயத்திலேயே
நபிநாயகத்தின்
சரித்திரத்தை
அறியும் வாய்ப்பு
கிடைத்தது. எப்படியெனில்
:
என் தந்தை ஒரு
போலீஸ் உத்தியோகஸ்தர்.
அவருக்கு மேல்
அதிகாரியாக
இருந்தவர் ரஸாக்
ஹுஸைன் என்ற
முகம்மதிய கனவான்.
அவருடைய மனைவி
ஆர்க்காட்டு
நவாப் வம்சத்தைச்
சேர்ந்தவர்.
வெள்ளைக்காரப்
பெண்போல் இருப்பார்.
அவருக்குக் குழந்தை
கிடையாது. என்தாயார்
மூன்று வயதுக்
குழந்தையான என்னைத்
தூக்கிக்கொண்டு
அடிக்கடி அந்த
அம்மாளைப் பார்க்கப்போவார்.
போனவுடன் அந்த
அம்மாள் என்னை
வாரி எடுத்து
அணைத்துக் கொள்வார்.
என்னை மடியில்
வைத்துக் கொண்டு
தின்பண்டங்களோ
அல்லது பாலும்
சோறுமோ ஊட்டுவார்.
இது அடிக்கடி நடக்கும்
நிகழ்ச்சி.
என்தாயார்
அங்கே போகமுடியாத
சமயங்களிலும்
ஜவான்கள் அனுப்பி
என்னைக் கொண்டுவரச்
செய்து சோறூட்டிக்
கொஞ்சிக் குலவித்
தன் பக்கத்திலேயே
படுக்க வைத்துக்
கொள்வார்.
சிலசமயங்களில்
இரண்டு மூன்று
நாட்கள் அவருடனே
தங்கிவிடநேரும்.
தான் பெற்ற குழந்தையைப்
போல் என்னைச்
சீராட்டிய அவரை
நானும் என்தாயைப்போல்
நேசித்தேன்.
அவர் அடிக்கடி
நமாஸ் படிப்பார்.
நானும் அவரைப்
போல் அசைந்தாடுவேன்.
அவர் தொழுகை
செய்யும்போது
நானும் அதைப்போல்
செய்வேன். இப்படி
ஆரம்பமான பாசம்
என்னுடைய இருபதாவது
வயதுவரை நாங்கள்
வெவ்வேறு ஊர்களில்
பிரிந்திருந்த
போதும் இடையுறாது
தொடர்ந்தது.
மிகவும் கண்டிப்பான
கோஷா முறையைக்
கடைப்பிடிக்கும்
அவர் நான் மேஜரான
பிறகும் தன் மகனைப்போல்
என்னை ஜனானாவுக்குள்
அழைத்து விருந்தூட்டிப்
பேசுவார். நான்
முதன் முதல் படித்த
நபிகளின் சரித்திரம்
அந்த என் வளர்ப்புத்
தாய் பரிசளித்த
புத்தகத்தில்
தான். அத்துடன்
அந்த அன்னை நபிகளின்
பொன் மொழிகள்
அடிக்கடி சொல்லுவார்.
திரு மௌலவி
பாஜில் ஸிராஜ்
அவர்கள் இயற்றியுள்ள
காவியத்தில்
அந்தப்பொன்
மொழிகளைப்
படித்தபோது அந்தப்
பழைய நினைவுகள்
என் நெஞ்சில்
உதித்து நெஞ்சில்
நிறைந்த நபிமணியை
மிகவும் ரசிக்கச்
செய்தது.
மக்கள் சமுதாயத்தின்
மாபெரும் சீர்திருத்த
வாதியான நபிமணியின்
சரித்திரத்தை
எளிய பதங்களும்
ஆழ்ந்த கருத்துக்களும்
அடங்கிய சிறு
சிறு கவிதைகளில்
பாமர மக்களுக்கும்
பயன் தரக்கூடிய
முறையில் பாடியுள்ள
ஸிராஜ் அவர்கள்
மிகவும் பாராட்டத்
தக்கவர்.
அவருடைய கவித்திறன்
மேலும் மேலும்
வளர்ந்து சீரும்
சிறப்பும் செல்வமும்
பெருகி, நீடூழி
சுகித்திருக்க
அல்லாஹ்வை வணங்கி
மனமார வாழ்த்தி
மங்களம் பாடுவோம்.
|