பக்கம் எண் :

13

Thaninayagam
நெஞ்சில் நிறைந்த நபிமணி
மதிப்புரைகள் வழங்கிய மாமேதைகள்
ரெவரென்ட் சேவியர் S. தனிநாயக அடிகளார் அவர்கள்,
D.D.(Rome), M.A., M.Litt., Ph. D., B.D.
Professor of Indian Studies
University of Malaya
KUALA LUMPUR-MALAYSIA


மதிப்பிற்குரிய நண்பர் திரு. மௌலவி பாஜில் சிராஜ் அவர்களைப்பற்றி வாசகப் பெருமக்கள் நன்கறிவர். அவர்கள் பன்னூல்களாம் நன்னூல்களைத் தமிழகத்திற்கு வழங்கி வாசகப் பெருமக்கள் மனத்தில் தமக்கொரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளார்கள்.

மதத் துறையில் ஈடுபாடும் நபிகள் நாயகத்தின் பால் பெரும் பக்தியும் தெளிந்த உணர்வும் சிறந்த அறிவும் வாய்க்கப்பெற்ற சிராஜ் அவர்கள் நபிமணியின்மேல் அடுத்துத் தொடுத்துள்ள தமிழ்ப் பாமாலையே “நெஞ்சில் நிறைந்த நபிமணி” யாகும்.

இந்நூலை முழுவதும் படித்து அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்நூல் அளவால் மட்டும் பெரிய நூலன்று; கருத்தாழத்தாலும், கவிநயத்தாலும் மிகவும் பெருமையுடைய “பெரியநூல்” என்பதை உணர்ந்தேன்.

அறுசீர் ஈரடி கொண்ட 3663 பாக்களால் இந்நூலைப் பாடி முடித்துள்ளார் திரு சிராஜ். பாடல்கள் எளிமையாயும் தங்கு தடையின்றிப் படித்து எவரும் பொருளுணர்ந்து கொள்ளக்கூடிய முறையுடன் இனிமையும் கருத்தாழமும் உள்ள பான்மையிலும் பாடப்பட்டுள்ளன,

நெஞ்சை முன்னிலையாக்கி அழகாகச் செய்யப்பட்டுள்ள இப்பாமாலையை அனைவரும் பயின்று இன்புறுவார்களாக.

28-9-65
கோலாலம்பூர்

சே. தனிநாயகம்,
(தலைவர், இந்திய மொழிப் பகுதி-
மலாயா பல்கலைக் கழகம்)