பக்கம் எண் :

16

Malaysia_Radio
நெஞ்சில் நிறைந்த நபிமணி
விமர்சனங்கள்
 
நெஞ்சில் நிறைந்த நபிமணி என்னும்
நினைவில் நிற்கும் நூலுக்கு
மலேசிய வானொலி நிலையத்தார் அளித்த
பெரிய விமர்சனத்தின் ஒரு பகுதி

இந்த நூற்றாண்டின் சிறந்த இலக்கியச் சாதனை என்று கூறத்தக்கது இச்சீரிய செந்தமிழ் நூல். வீரமும் விவேகமும், பண்பும் பாசமும், அன்பும் அறமும், சோகமும் சாந்தமும், பொற்பும் பொறையும், கனிவும் கருணையும், அடக்கமும் இரக்கமும் இன்னோரன்ன நன்னெறிச் சிறப்பின் கூட்டுச் சுவையாகத் திகழ்ந்து - குவலயத்தைத் திருத்திக் குன்றொளிர் விளக்கென வாழ்ந்து நிற்கும் பூமானின் வரலாற்றைக் கற்பவர் இன்பம் அடைவர்; ஏற்றம் பெறுவர் என்பது உண்மை. நூலை நுவன்றளிக்கும் ஆலிம் கவிஞர் அவர்களின் மொழியிலேயே சொல்வதென்றால்,

வள்ளல் திருநபியின் வாழ்வதனைக் கற்போரின்
       உள்ளம் இனிக்கும் உயிரினிக்கும் - விள்ளும் நூல்
  பாவினிக்கும் ஆய்வோர் அறிவினிக்கும் பாடிடுவோர்
நாவினிக்கும் ................”      

என்று சொல்லலாம். எல்லாம் ஒரே இனிமை மயம். இந்த இனிமையைச் சுவைத்த ஆலிம் கவிஞர் அவர்கள் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ...” என்னும் நன்னோக்குடன் இந்நூல் வழி நமக்கு இன்பம் தருகின்றார். சிறுவரும் சிறுமியரும் கூடப் புரிந்துகொள்ளும் வண்ணம் நபிமணி அவர்களின் வாழ்க்கையை இக் காவியத்தின் மூலம் ஓவியமாக்கிப் படிப்பவர் கண்முன் நிறுத்திடவும் அவர்கள் அருளிய அருமொழிகளையும் செய்துகாட்டிய திருச்செயல்களையும் தித்திக்கும் தீம்பாக்களில் எத்திக்கும் முழங்கும் எளிமை நயத்தோடு எடுத்துக் காட்டுகிறது இந்நூல். நூலின் சிறப்பிற்கு இது ஒன்றே பெருந்துணை போகின்றது எனலாம். நானிலத்தில் நிறைந்துள்ள நபிமணி அவர்கள் நம் நெஞ்சில் நிறையவைக்கும் இந்நூலும் நெஞ்சில் நிலைத்து, நினைவினில் நிற்கும் நேர்மையைப் பெற்றுள்ளது..

22-7-68
கோலாலம்பூர்

ரேடியோ மலேசியா
இந்தியப் பகுதி