பக்கம் எண் :

18

Munnurai
நெஞ்சில் நிறைந்த நபிமணி

முன்னுரை

காயிதெ மில்லத் ஹாஜில் ஹரமனிஷ் ஷரீபன்,
ஜனாப் M. முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப், M.P.
அவர்கள்

எல்லாப் புகழும் பெருமையும் கருணையாளனாகிய அல்லாஹுத்தஆலாவுக்கே யாகும். சிறப்புக்குரிய அவன் மெய்த்தூதர்மீது அவன் பேரன்பும் ஆசியும் என்றுமிருப்பதாக!

‘நெஞ்சில் நிறைந்த நபிமணி’ என்ற இந்த அரிய நூலையாத்த நல்லறிஞர் மௌலவி பாஜில் G.M. சதக்கத்துல்லாஹ் சிராஜ் பாக்கவி அவர்களுக்கும், அக்கருணையாளன் தன் அருளையும் அழகிய நற்கொடைகளையும் நிறையக் கொடுத்தருள்வானாக! அவர் நூலுக்கு அறிவு ஒளி பரப்பும் வெற்றியை ஈந்தருள்வானாக! அதனாலாகும் நற்பயனை அன்புக்குரிய பொது மக்கள் அடைந்து, எல்லா நலன்களையும் பெற்று, உயரிய வாழ்வு வாழும்படி அருள் புரிவானாக! ஆமீன்.

உலகங்களுக்கெல்லாம் நற்கருணையாய் அனுப்பப்பெற்ற திருத்தூதுவர் அவர்கள் பற்றி மதிப்பு மிக்க நண்பர் ஆலிம் கவிஞர் சிராஜ் பாக்கவியவர்கள் பாடியிருக்கும் “நெஞ்சில் நிறைந்த நபிமணி” சிறப்பு மிகுந்ததோர் நற்காவியமாக உருவெடுத்திருக்கிறது. வரலாற்றுக்கும் இலக்கியத்திற்கும் அழகியதொரு அணிகலனாய் அமைந்திருக்கிறது.

சரிதை வரலாறும், செய்யுள் வளமும் ஒன்று சேராவெனப் பகருவர் பலர். ஆனால் நம் சிராஜ் அறிஞர் அவ்விரண்டையும் இந்நூலில் அருமையாக ஒன்றுபடச் செய்திருக்கிறார். திரு நபியவர்களின் வாழ்க்கை வரலாறும், கொள்கை நலமும் உருமாறிடா வண்ணம் அரிய திறமையுடன் இனிய செய்யுளில் கோத்து யாத்தளித்துத் தருகிறார்.

கவிதையில் அடங்கிய கருத்துக்களையும், உண்மைகளையும் புரிந்து அறிவு பெற வேண்டுமாயின் அதற்காகச் சிரமமும் நேரமும் செலவு செய்துதான் பெறல் வேண்டும் என்பது பழங்காலத்துச் சித்தாந்தம்; அதுவே ஒருவர் பெறும் அறிவுக்கு மதிப்பையும், சிறப்பையும் தருமென நினைத்தார்கள் அக்காலத்தில். கவிதை எவ்வளவுக் கெவ்வளவு கடினமாக இருந்ததோ, சாமானியமாகப் புரியாதிருந்ததோ அவ்வளவுக் கவ்வளவு கவிதையின் மதிப்பு உயர்வதாயிருந்தது. அதனால் கவிதை பாடுவது மட்டுமின்றி, அதைப் புரிந்துகொள்வதும் ஒரு சில மேதாவிகளுக்கு மட்டுமே சாத்தியமாயிருந்தது. இது அன்றைய நாளின் நிலைமை். இன்றோ நிலைமை அவ்வாறில்லை; மாறுபட்டுள்ளது.

இன்று செய்யுளின் கருத்து எவ்வளவுக்கெவ்வளவு எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்துகொள்ளக்கூடியதாகவும், பொது அறிவுத் தன்மைக்கும் போக்குக்கும் தொடர்புகொண்டதாகவும் அதன் மேன்மையையும் இனிமையையும் பொது மக்கள் தாங்களாகவே சுவைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதற்கு மதிப்பு உயர்கிறது.

இந்தப் புதுக்காலத் தன்மையின் அழகியதோர் இனிய உருப்போன்று கவிஞர் சிராஜ் அவர்கள் “நெஞ்சில் நிறைந்த நபிமணி”யை அரிய வெற்றியுடன் ஆக்கியிருக்கின்றார்.

உயர்ந்த கருத்துக்கள், உண்மை விஷய அறிவு, அவைகளைப் பளிச்சென்று காட்டும் எளிய மொழி, சொற்கள் அழகாகவும் இனிமையாகவும் இருத்தல், அச்சொற்களும் இணக்கமாகச் சேர்ந்து சரளமாக இயங்கும் நடையழகு ஆகிய இவை இன்று ஒரு அழகிய நூலின் முக்கியச் சிறப்புக்கள் - என்று கருதப்படுகின்றன.

மொழி, சொல், வார்த்தை என்பனவெல்லாம் கருத்தின் ஊர்தியாகும். ஒருவர் கருத்தை மற்றொருவர்பால் சேர்க்கும் சாதனம் அவைகளே.

ஒரு தலைவன் ஓர் ஊர்தியில் அமர்ந்து ஊர்வலம் செல்லுகின்றான் என்றால் அந்த ஊர்தி தலைவனை உயர்த்திக் காட்டுவதற்கு உறுதுணையாக அமைந்திருக்க வேண்டும்; பலரும் எளிதில் காண அந்த ஊர்தி-வாகனம்-பயன்படவேண்டும்.

அதுபோன்றே காவியமியற்றும்போது கருத்தாகிய தலைவன் வெளிக்காட்டும் காம்பீரியமும் அழகும் கவர்ச்சியும் கொண்ட ஊர்தியாக கவிதை இருக்க வேண்டும்.

காரணம், கருத்தே கவிதைக்கு உயிர். ஊர்வலத்திற்குத் தலைவனை உயர்த்திக் காட்ட வாகனம் எப்படி பயன்படுகிறதோ அதேபோன்று காவியக் கருத்தை எடுப்பான நிலையில் காட்ட கவிதையாகிய வாகனம் பயன்பட வேண்டும். அந்த அரிய முறையை ‘நெஞ்சில் நிறைந்த நபிமணி’ என்னும் இந்தக் காப்பியம் முழுவதிலும் காண்கின்றேன். எளிய சொற்களில் அந்த வெற்றிகரமான சாதனையை நாம் எதிர்பார்க்கின்ற அளவுக்குமேல் மௌலவி கவிஞர் அவர்கள் சாதித்திருக்கின்றார்.

இதைச் சாதித்த பெருந்திறனுக்கும், கவிஞரின் செய்யுளின் அரிய அழகுக்கும், கருத்தின் சிறப்புக்கும் அவரது காவியமே நற்சாட்சி பகர்ந்து நிற்கின்றது.

‘நாயகம்’ என்ற சொல்லை 
நாமிங்கு நவிலும் போது
வாயெலாம் இனிக்கும் அந்தச்
   சுவையதும் என்னே நெஞ்சே !

என்று கவிஞர் பாடும்போது நாயகத் திருமேனியைப் பற்றி அவர் யாத்தளித்த இச்செய்யுளின் இனிமையையும் உணர்த்துவதாக இருக்கிறது.
அறிவுக்கு எட்டாத அல்லாஹுத்தஆலாவை -

அங்கிங்கெ னாத வண்ணம்  
   அனைத்திலும் அனைத்து மாகி
தங்கியே காக்கும் அந்தத்   
     தலைவனே தலைவன் நெஞ்சே !

என்று இக்காவியம் வர்ணிப்பதன் எளிமை காரணமாக அந்த வல்லோனின் மகிமை இருதயத்தில் பதிந்து உணர்ச்சியால் பளிச்சிடுகின்றது.

‘இஸ்லாம்’ என்றால் என்ன? கவிஞர் தரும் அழகிய விளக்கத்தைப் பாருங்கள் :

அறிவதை முடியாய்க் கொண்டு
   அன்பதை அகமாய்க் கொண்டு
உறவதை உயிராய்க் கொள்ளும்
      உயர்இஸ்லாம் என்றார் நெஞ்சே !

பகுத்தறிவுக்கு, இஸ்லாம்’ தரும் உயர் பதவியைக் கேளுங்கள் :

பகுத்தறி வுக்கும் மேலாய்ப்  
     படைத்திலன் இறைவன் ஒன்றை;
பகுத்திதை அறிவீர் என்று   
   பகர்ந்தவர் நபியே நெஞ்சே !

சிருஷ்டிகளும் மக்களும் யாவர்? என்பதைப்பற்றி.

‘உலகத்துப் படைப்பு யாவும்  
   உயரிறைக் குடும்பம் என்றே
அலகிலா அன்பு செய்வோன்  
     உயர்ந்தவன்’ என்றார் நெஞ்சே !

உலகத்து மக்க ளெல்லாம்   
ஓர்குடும் பத்தார் என்ற
நிலையன்பு நேச வாழ்வில்  
   இறங்குக ! என்றார் நெஞ்சே !

என்ற திருநபி அவர்களின் திருவாய்மொழியை யாவரும் எளிதில் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இந்நூல் எடுத்தியம்பி அன்பின் ஆழத்தையும் விசாலத்தையும் காட்டுகின்றது.

மாநபியின் நிறைவுத் தன்மையை -

இறைமறை குர்ஆ னுக்கோர்  
  இயைந்தநல் விளக்க மாகிக்
 குறையெலாம் களைந்த அண்ணல்
  குணமிகு நபியே நெஞ்சே !

என்றும், அவர்கள் அன்பின் பெருமையை -

அன்பதற் கன்பே என்றே   
   அகிலத்தை அணைத்து நின்றே
இன்பத்தைத் தந்த அண்ணல் 
    இதயத்தைப் பாராய் நெஞ்சே !

என்றும் கவிஞர் பாடுவது எவ்வளவு குழைவாகவும் ஈர்ப்புடையதாகவும் இருக்கின்றது!

‘தாயிப்’ என்ற ஊரில் அருள்மேனியைக் கொடுமைப்படுத்திவிட்ட மக்களைச் சபிக்கும்படி கூறப்பட்ட போது அவ்வாறு செய்ய விரும்பாமல்

மக்களை அழிக்க என்னை  
  மண்ணதற் கனுப்ப வில்லை
 துக்கத்தைப் பொறுப்போ மென்றே
   தூயவர் சொன்னார் நெஞ்சே ;

என்றும் -

கடுமையை அவர்கள் கொண்டால்
   கனிவதைக் கொள்வோம் நாமே
 கொடுமையை அன்பால் வெல்லும்
     குணம்வேண்டும் என்றார் நெஞ்சே !

என்றும் அண்ணலார் அருளும் பதில் உலக அமைதிக்குத் தவறாத வழியைக் காட்டி நிற்கின்றது.

அன்னை கதீஜா நாயகியார் உலகு நீத்த பொழுது குழந்தைப் பருவத்தில் இருந்த சுவர்க்க நாயகி பாத்திமா நாச்சியார் அவர்கள் தம்மரும் பிதாவைப் பார்த்து -

எந்தையே ! எங்கள் அன்னை 
எங்குளார் என்று கேட்க
சிந்தையில் கலங்கி அண்ணல்  
   செயலிழந் திட்டார் நெஞ்சே!

வாடிய நிலையில் நின்ற    
வனப்புறு பாத்தி மாவை
நாடியே எடுத்த ணைத்து    
    ‘நானுளேன்’ என்றார் நெஞ்சே !

ஒரே ஒரு வார்த்தையில் எவ்வளவு உயிர்த் துடிப்பு! ‘நானுளேன்’ என்று அன்று சொன்ன பதில் பாத்திமாவுக்கு மட்டும் சொன்ன பதிலா? இல்லை; இல்லை; இல்லை.

அன்புக் குழந்தைக்கும் அன்புத் தந்தையார்க்கும் இடையில் அன்று நடந்த இச்சம்பவத்தின் சோகத்தை நமது மௌலவி கவிஞர் எடுத்துக் காட்டும் விதம் 1400 வருடங்களுக்குப் பின் இன்றும் நம் உள்ளத்தில் சோகத்தை எழுப்பிவிடுகின்றது தல்லவா?

இங்கே எடுத்துக் காட்டிய கவிதைகள் மட்டுமல்ல. “நெஞ்சில் நிறைந்த நபிமணி”யின் மூவாயிரத்து அறுநூற்று அறுபத்து மூன்று கவிதைகளும் அழகிலும் எளிமையிலும் இனிமையிலும் சிறந்து விளங்குகின்றன. உதாரணத்திற்காக அவைகளில் சிலவற்றைப் பொறுக்கி எடுப்பதே கஷ்டமாக இருக்கிறது. அத்தனையும் அறிவுக் கருவூலங்களாகவும் ஒளிரும் முத்து மொழிகளாகவும் இருக்கின்றது.

இக்காவியத்தைப் பற்றித் திரும்பத் திரும்ப மனம் கூற விழையும் விஷயம் என்னவென்றால் மக்களிடயே வழங்கும் சாதாரணத் தமிழில், வளமான சொற்களில், எளிமையை அலங்காரமாக்கும் எழில் ததும்ப, பொருள் தெற்றென விளங்க பெருமானாரின் பெருவாழ்வினை நமக்கு கவி அமுதமாகவும் உண்மைப் படப்பிடிப்பாகவும் வழங்குவதேயாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நபிபெருமானாரின் அதிஅற்புத வாழ்வினை அப்படியே அழைத்து வந்து - இதோ! நபிகளின் நல்வாழ்வு என்று நம் எதிரே காட்டி நம்மை எல்லாம் பெருமிதம் கொள்ளவைக்கும் பெரும் பணியாற்றியுள்ளார் அருமைப் பாக்கவி சாஹிப். வல்ல நாயனின் அருள் அவர்மீது அளவில்லாது இருப்பதாக! அல்லாஹுத்தஆலா அனைவருக்கும் அருள்புரிவானாக! ஆமீன்! எல்லாப் புகழும் அவனுக்கே.

20-10-65
சென்னை-44

அவன் அடியான்
M. முஹம்மது இஸ்மாயீல் (M.P.)