பக்கம் எண் :

31

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இலட்சியம் வகுத்த இன்னருட் கொண்டல்

கிளர்ந்தெழும் இஸ்லாம்
 
உலகத்தை இணைக்க வந்த
     ஒப்பரும் நெறிவ ளர்த்தே
இலங்கிடும் குடும்ப மாக
     இருந்ததும் என்னே நெஞ்சே


இகவாழ்வு மட்டு மென்ன?
     இகபர வாழ்வை ஒன்றாய்
மகிமையோ டிணைக்க வந்த
     மாண்புதான் என்னே நெஞ்சே


கிளர்ந்தெழும் இஸ்லாம்

ஆற்றல்சேர் இருவ ருக்குள்
     அடங்கிய இஸ்லாம் அன்றோ
ஏற்றமாய் மக்க ளுள்ளம்
     புகுந்ததும் என்னே நெஞ்சே


தேற்றிடும் மக்க ளுக்குள்
     திகழ்ந்திட்ட இஸ்லாம் அன்று
போற்றிடும் வண்ண மாகப்
     பொலிந்ததும் என்னே நெஞ்சே


பாரெலாம் கவிந்து நிற்கும்
     பண்புடை இஸ்லாம் அன்றே
ஊரதன் இயக்க மாக
     ஒளிர்ந்ததும் என்னே நெஞ்சே


*அபுபக்கரி னோடு நல்ல
     *அலி,ஜஃப்ர் போன்ற மக்கள்
நபியின்நற் கொள்கை ஏந்தி
     நல்லிடம் பெற்றார் நெஞ்சே


மூன்றாண்டு பின்னர் அண்ணல்
     முன்னவன் பணித்த வண்ணம்
ஊன்றிய இஸ்லாம் பற்றி
     உரையாற்ற லானார் நெஞ்சே

* அபுபக்கர் - (அபூபக்கர்) - அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழரும் முதியவருள் முதல் முஸ்லிமான பெருவாய்ப்பினைப் பெற்றவருமாவார்.

* அலி - அண்ணலாரின் பெரிய தந்த அபூதாலி பின் திருமகனாரும் இளஞருள் முதல் முஸ்லிமான மாவீரருமாவார்.

* ஜாபர் - அபூதாலியின் இளய மகனாரும் திருக்குர்ஆன் மறையினை அரியஇசையில் ஓம் இன்குரல் உடைய காரியும் ஆவார்.


பாட்டாளி மக்கள் மற்றும்
     பற்பல ஏழை மக்கள்
நாட்டமாய் சேர்ந் ழைத்தே
     நம்பிக்கை கொண்டார் நெஞ்சே


தொழிலாளி மக்கள் கூட்டம்
     தொடர்ந்வந் தேஇஸ் லாமில்
அழிவுறா ஆக்கம் பெற்ற
     அதிசயம் பெரிதே நெஞ்சே


ஏழையர் அதிலி ருந்த
     ஏற்றத்தைக் கண்ணால் கண்டு
வாழையாய் வாழ்ந்த மக்கள்
     வாடிய தென்னே நெஞ்சே


இறைவழி நின்ற வள்ளல்
     இஸ்லாமை மக்க ளின்பால்
முறையாக எடுத்து ரைத்த
     முயற்சியைக் கேளாய் நெஞ்சே


அரபுக்கே அணியாய் நிற்கும்
     அன்புடை மக்காள்! வாரீர்!
முரணுடை நிலையில் மாறின்
     முன்னேற்றம் என்றார் நெஞ்சே


அறிவினைப் பெற்ற நீங்கள்
     அதன்பய னாலே பாரில்
அரியவை செய்வீர்! என்றே
     அறைந்திட லானார் நெஞ்சே


பகுத்தறி வதனைப் பெற்றும்
     பகுத்திடும் பான்மை யின்றி
நகைத்திட வாழ வேண்டாம்
     நலமுள தென்றார் நெஞ்சே


மனிதனை மனிதன் இங்கு
     மாண்பின்றி அடிமை யாக்கல்
புனிதமில் லாத தென்றே
     புகன்றிட லானார் நெஞ்சே


விலைப்பொரு ளைப்போல் மக்கள்
     விற்றிட மனிதர் தம்மைக்
கொள்வதும் நெறியோ? என்று
     கூறிட லானார் நெஞ்சே


பெண்களை அடிமை யாக்கிப்
     பீழைகள் செய்ய வேண்டாம்;
கண்ணிய மாய்ந டத்திக்
     காட்டுக! என்றார் நெஞ்சே


பெண்மையில் லாத வாழ்வு
     புவியினில் உண்டோ? பெண்ணைக்
கண்ணெனக் காப்பீர்! என்றே
     கருத்துரை தந்தார் நெஞ்சே


அற்பத்திற் கெல்லாம் இங்கே
     ஆண்டாண்டாய்ப் போர்கள் செய்து
பொற்புறு வாழ்வைப் போக்கல்
     பொலிவாமோ? என்றார் நெஞ்சே


விட்டுக்கொ டுப்ப தற்கு
     விருப்பதே இல்லா வண்ணம்
வெட்டதில் குத்தில் வாழ்வை
     வீழ்த்தாதீர்! என்றார் நெஞ்சே


மதிதனை மயக்கு கின்ற
     மதுவதை அருந்த வேண்டாம்
உதிரத்தைப் பெருக்கும் போரில்
     ஊன்றாதீர்! என்றார் நெஞ்சே


வழிப்பறி கொள்ளை செய்யும்
     வாழ்க்கையை நீக்கி நீவிர்
விழிப்புடன் வாழ்வீர்! என்றே
     விளக்கிட லானார் நெஞ்சே


வர்த்தக வாழ்வை விட்டு
     வஞ்சனை செய்தல் வாழ்வில்
பொற்பதைத் தருமோ? என்றும்
     புகன்றிட லானார் நெஞ்சே


குன்றேறி விறகொ டித்துக்
     கொணராமல் குந்தி வாழ்தல்
நன்றாமோ? என்ற அண்ணல்
     நல்லுளம் என்னே நெஞ்சே


உலகத்து மக்கள் எல்லாம்
     ஓர்குடும் பத்தார் என்ற
நிலையன்பு நேச வாழ்வில்
     இறங்குக! என்றார் நெஞ்சே


இனமொழி வெறிக டந்து
     எல்லோரும் ஒன்றாய்க் கூடி
மனமதில் ஒன்று பட்டு
     மகிழுக! என்றார் நெஞ்சே


எப்பொரு ளுக்கும் அஞ்சும்
     இழிவதை வாழ்வில் போக்கி
ஒப்புடன் உயர்வீர்! என்றே
     உரைத்திட லானார் நெஞ்சே


மாபெரி யோனுக் கஞ்சி
     மாண்புடன் வாழ்வீர்! மண்ணில்
மாபாவம் தவிர்க்க நீவிர்
     வணங்குக! என்றார் நெஞ்சே


மூடத்தில் அழுந்தி டா
     முதல்வனாம் அல்லாஹ் வின்முன்
கூடுவீர்; இணைகள் தம்மைக்
     கொள்ளற்க! என்றார் நெஞ்சே


இணைகளை அகற்ற வேண்டி
     இயம்பிய தால்ப கைவர்
கணைகளாய்ச் சொற்கள் வீசிக்
     கடிந்ததும் என்னே நெஞ்சே


இடர்கள்தாம் பெருகக் கண்டும்
     இதயத்தில் தளர்வு றாது
படர்ந்திடும் கொள்கைக் காகப்
     பரிந்துழைத் தாரே நெஞ்சே


நாயகம் அவர்கள் சொன்ன
     நன்மொழி உணர்ந்தி டாத
பேயனை மக்கள் தந்த
     பீழைகள் சிறிதோ? நெஞ்சே


இதயமில் மக்கள் செய்த
     இன்னல்கள் தம்மைச் சொன்னால்
பதைத்துமே பார கத்தோர்
     பதறிடு வாரே நெஞ்சே


கொடுமொழி பகர்வ தானால்
     கொடுமைகள் ஒன்றி ரண்டோ?
நடுங்கிடும் உடல மெல்லாம்
     நானதைச் சொல்லேன் நெஞ்சே


தொடர்ந்துநம் நாய கந்தான்
     தூய்மைசேர் கொள்கை யாலே
இடர்களை வென்று நின்ற
     இயல்பதும் என்னே நெஞ்சே


கணக்கிலாச் ‘சிலைகள்’ உள்ள
     ‘கஅபா’வின் முன்னெ ழுந்தே
வணக்கத்திற் குரியோன் ஏகன்;
     வருக!என் றழைத்தார் நெஞ்சே


இணைகளைக் குவித்துக் கொண்டே
     இருளிலே வீழ வேண்டாம்
மணலிலே புதைப்பீ ரென்ற
     மாண்பதும் என்னே நெஞ்சே


அயல்நாட்டு வணிக மக்கள்
     ஆர்த்திடும் இடத்தி லெல்லாம்
நயமுடன் சென்றே அண்ணல்
     நல்லுர செய்தார் நெஞ்சே


இவ்வாறே இருக்குங் கால்
     இணையிலா ஜிப்ரீல் தோன்றிச்
செவ்விய மறைய நல்கிச்
     செல்வம் என்னே நெஞ்சே


இறைமறை தன்னை அண்ணல்
     இனியதம் குரலால் சொல்ல
அறபிய மக்கள் கேட்டே
     அதிசயங் கொண்டார் நெஞ்சே


நாடொறும் மார்க்கம் தன்னில்
     நண்பர்கள் பெருக வைத்த
தேடரும் நாய கத்தின்
     திறமையும் பெரிதே நெஞ்சே


ஏகனின் நெறியில் நிற்போர்
     எண்ணிக்கை பெருகி வள்ளல்
தாகத்தைத் தணித்த தைத்தான்
     தனித்துரைப் பதுவோ? நெஞ்சே


பகைவர்கள் இதனைக் கண்டே
     பருவரற் கடலில் மூழ்கி
முகம்மதின் கொள்கை தன்னை
     முற்றிலும் எதிர்த்தார் நெஞ்சே


கொதித்தெழு உள்ளத் தோடு
     கூடியே அவர்கள் செய்த
எதிர்ப்புடைச் செயல்கள் பற்றி
     என்னநான் சொல்வேன் நெஞ்சே


பொறுமையின் உருவாய் வந்த
     பொற்புடை அண்ணல் அந்தச்
சிறுமைக ளைப்பொ றுத்தே
     சிரித்ததும் என்னே நெஞ்சே


எதிர்ப்பினுக் கஞ்சா வண்ணம்
     ஏகனின் வழியில் அண்ணல்
புதுப்புது வெற்றி கண்ட
     பொற்பதும் என்னே நெஞ்சே


பகைவர்கள் ஒன்று சேர்ந்தே
     பரவிடும் மார்க்கந் தன்னைத்
தகவின்றி அழிப்ப தற்குத்
     தருணம்பார்த் திருந்தார் நெஞ்சே

அபுதாலி பிடத்திற் சென்றே
     அண்ணலின் செயலைச் சொல்ல
அபுஸுப்யான் தலைமை கொண்ட
     அநீதியைக் கேளாய் நெஞ்சே


அன்னவர் இடத்திற் சென்றே
     ஆற்றொணாக் கோபத் தோடு
புன்னுரை பலவும் சொல்ல
     பொய்மையும் என்னே நெஞ்சே


முன்னவர் கொள்கை கட்கு
     முஹம்மது முரணாய் ஆனார்
அன்னவ ரைத்தி ருத்தி
     அடக்குக! என்றார் நெஞ்சே


இவ்வுரை கேட்ட அந்த
     இணையிலா அபுதா லிபும்
எவ்விதப் பேச்சு மின்றி
     ஏக்கத்தில் ஆழ்ந்தார் நெஞ்சே

தன்னரும் நாய கத்தைத்
     தனிமையில் அழைத்துச் சென்றே
இன்னலைப் பாராய்! என்றும்
     இயம்பிட லானார் நெஞ்சே


உன்னுடைக் கொள்கை யாலே
     ஊரெலாம் எதிர்ப்பைக் கண்டாய்
என்னுடை மொழியைக் கேட்டே
     இணைகஎன் றாரே நெஞ்சே


அவ்வுரை கேட்ட வள்ளல்
     அபுதாலி பிடத்திற் சொன்ன
ஒவ்விய உரைய தற்கே
     உவமயுண் டாமோ? நெஞ்சே


தந்தையே! ஒன்று சொல்வேன்
     தயையுடன் கேட்க வேண்டும்
நொந்துநான் மடிந்த போதும்
     மாறிடேன் என்றார் நெஞ்சே


என்னைஇந் நாட்டு மக்கள்
     எவ்விதம் வருத்தி னாலும்
முன்னவன் வழியில் நீங்க
     முடியுமோ? என்றார் நெஞ்சே


அரபதும் எதிர்த்து வந்தே
     ஆர்ப்பரித் திட்ட போதும்
உரமதில் மாறேன் என்ற
     ஊக்கமும் பெரிதே நெஞ்சே


கதிரைஎன் வலக்க ரத்தில்
     வைத்துப்பின் இடக்க ரத்தில்
மதியதை வைத்த போதும்
     மனமாறேன் என்றார் நெஞ்சே


மைந்தனின் உறுதி தன்னை
     மனமதிற் கொண்ட அந்தத்
தந்தையும் மகிழ்வு பொங்கத்
     தழுவியே சொன்னார் நெஞ்சே


அன்புறு மைந்தா! உன்றன்
     அகமதைக் கண்டேன்; உன்றன்
இன்புறு கொள்கை யில்நீ
     இறங்குக என்றார் நெஞ்சே


கொள்கயால் உம்மை நானும்
     கோபிக்க மாட்டேன்; மற்றும்
அல்லல்கள் சூழ்ந்த போதும்
     அயரற்க! என்றார் நெஞ்சே


பின்னர்நம் நாய கந்தான்
     பேரிறைக் கொள்கை தன்னில்
உன்னத ஆற்றல் பெற்றே
     உழைத்ததும் என்னே நெஞ்சே


வளர்ச்சியை, வாய்மை தன்னை,
     வாழ்வதற் குதவ வல்ல
இலட்சியங் கள்வ குத்த
     இனியராய் நின்றார் நெஞ்சே