பக்கம் எண் :

32

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

துன்பம் சுமந்த துணிவுடை வீரர்
துன்பம் படர்ந்தது


எதிர்ப்பெனும் நெய்யில் ஓங்கி
     எரிந்திடும் தீயைப் போல
அதிர்ச்சியில் நிலையில் வள்ளல்
     அரும்பணி செய்தார் நெஞ்சே


வள்ளலின் உறுதி தன்னை,
     வலிமையைக் கண்ட தீயோர்
எல்லையில் துன்பம் தந்தே
     ஏமாற்றம் கண்டார் நெஞ்சே


அண்ணலின் புதுமை மார்க்கம்
     ஆலென ஊன்றக் கண்டே
எண்ணரும் துன்பத் தாலே
     அபுஜஹில் ஏங்கி நின்றான்


கிளர்ந்தெழும் மார்க்கந் தன்னைக்
     கிள்ளியே எறியா விட்டால்
வளர்ந்தெழும் என்றே எண்ணி
     வாடிட லானான் நெஞ்சே


அபுஜஹில் தலைமை தன்னில்
     அமர்ந்திட்ட பகைவர், போற்றும்
நபிகளைச் சொல்லில் வெல்ல
     நாடிய தைக்கேள் நெஞ்சே


அண்ணலைச் சொல்லில் வெல்ல
     அருமைசேர் ‘உத்பா’ வைத்தான்
திண்ணமாய் வெல்வீர் என்றே
     தேற்றியே அனுப்ப லானார்


உத்பாவே! முகம்ம தின்பால்
     உயர்திறன் உண்டாம் உன்றன்
உத்வேகப் பேச்சால் வென்று
     வருக!என் றுரைத்தார் நெஞ்சே


வந்தனர் உத்பா ஆங்கே
     வள்ளலார் நபிகள் நாதர்
அந்தமில் மகிழ்ச்சி கொண்டே
     ‘அமருக!’ என்றார் நெஞ்சே


குறைஷியர் கூட்டத் தார்கள்
     கொண்டஅத் தலைவர் உத்பா
முறையின்றி அண்ண லின்பால்
     முழக்கிட லானார் நெஞ்சே


உயர்குடி யில்உ தித்த
     உத்தமப் பெரியோய்! நும்பால்
நயந்துநான் சொல்ப வற்றை
     நாடுக என்றார் நெஞ்சே

பல்லாண்டாய்ப் போற்றி வந்த
     பலதெய்வக் கொள்கை தம்மைத்
தள்ளுக! என்றே எம்மைத்
     தடுக்காதீர்! என்றார் நெஞ்சே


கட்டின்றி வாழ்ந்த எம்மைக்
     களிப்புடன் இருக்கும் எம்மைக்
கட்டுப்பாட் டுக்குள் ஆழ்த்தக்
     கருதாதீர்! என்றார் நெஞ்சே


புதுமையாய் உள்ள உங்கள்
     புரட்சியை மாற்றிக் கொண்டால்
எதுவேண்டு மாயின் ஈவோம்
     என்றுரைத் தாரே நெஞ்சே


பொன்னது வேண்டு மாயின்
     புகலுவீர்! மலையைப் போன்று
கண்முனே குவிப்போம் என்ற
     கட்டுரை தந்தார் நெஞ்சே


அரியணை ஆசை என்றால்
     அரபுக்கே அரச ராவீர்
உரியநும் ஆசை தன்னை
      உரைக்கவே என்றார் நெஞ்சே


உம்முடை உள்ளந் தன்னில்
     உள்ளது நோயென் றாலோ
செம்மையாய்த் தீர்த்து வைப்போம்
     செப்புக! என்றார் நெஞ்சே


பெண்ணாசை என்றால் சொல்வீர்
     பேரெழிற் பெண்கள் தம்மை
எண்ணிய வண்ணம் ஈவோம்
     இயம்புக! என்றார் நெஞ்சே


பொருந்தாஇவ் வுரைக ளாலே
     பொற்புறு வள்ள லுக்கோ
அரும்பிய நகையை யின்றி
     ஆத்திரம் உண்டோ? நெஞ்சே


கடல்மடை திறந்த தைப்போல்
     கடுமையாய் உத்பா பேச,
முடிந்ததா? என்றே அண்ணல்
     மொழிந்திட லானார் நெஞ்சே


அண்ணலே! என பேச்சை
     அதிகம்நான் விளக்க வில்லை
கண்ணிய மாய்அப் பேச்சைக்
     காணுக! என்றார் நெஞ்சே


உத்பாவின் இடத்தில் வள்ளல்
     உறுதியாய் உரைத்த அந்தப்
புத்தொளி சேர்க்க வல்ல
     பொன்மொழி கேட்பாய் நெஞ்சே


ஒப்பற்ற இறைவன் தந்த
     உயர்கொள்கை பற்றே யன்றி
எப்பற்றும் கொண்டே னில்லை
     என்றுரை தொடுத்தார் நெஞ்சே


நகைமுகத் தோடே அண்ணல்
     நயம்பட பேச உத்பா
தகைமையாய் அன்பு கொண்ட
     தன்மையும் என்னே நெஞ்சே


வாய்த்தவோர் தருணந் தன்னை
     வள்ளலார் பயன்ப டுத்தி
வாய்மையாய் எடுத்து ரைத்த
     வாசகம் கேட்பாய் நெஞ்சே


வந்தது வந்தீர் சற்று
     வாஞ்சையாய்க் கேட்பீர் உத்பா!
எந்தனின் இறைவன் வாக்கை
     இசைக்கின்றேன் என்றார் நெஞ்சே


அவ்வாறே தூதர் தாமும்
     அருமறை குர்ஆன் ஏட்டின்
செவ்விய உரைகள் தம்மைச்
     செப்பிட லானார் நெஞ்சே


இறைதூதர் இதயம் ஊன்றி
     இன்குரல் நயத்தி னோடு
மறையதை ஓதி நின்ற
     மாண்பதும் என்னே நெஞ்சே


கருப்பொருள் நிறைந்த தான
     கனிவுடை மறையை ஓத
விருப்புடன் கேட்ட உத்பா
     வியப்பினில் ஆழ்ந்தார் நெஞ்சே


அண்ணலார் ஓத ஓத
     ஆர்வமாய்க் கேட்ட உத்பா
எண்ணரும் இன்பங் கொண்ட
     எழிலதும் என்னே நெஞ்சே


வாழ்க்கையில் காணா இன்பை
     வளமுடன் கண்ட உத்பா
ஆழ்ந்திட்டார் இன்பில் என்றால்
     அதிசய மாமோ! நெஞ்சே


ஆங்கின்னும் சிறி நேரம்
     அமர்ந்திடின் உள்ளந் தன்னை
வாங்கியே கொள்வார் என்று
     வணங்கிட லானார் நெஞ்சே


அண்ணலின் திருவாய் தன்னில்
     அவருடைக் கரத்தை வைத்தே
உண்மைசேர் மறைய மீண்டும்
     ஓதாதீர்! என்றார் நெஞ்சே


போதுமே போதும்; இங்கு
     பொற்புடை மறைதான் தன்னை
போதையுள் ஆழ்த்து தென்றே
     புகன்றிட லானார் நெஞ்சே


மேற்கொண்டும் இனியும் நீங்கள்
     மெல்லிசை எழுப்பு வீரேல்
மாற்றமில் லாஎன் நெஞ்சம்
     மாறிடும் என்றார் நெஞ்சே


முகம்மதே! உங்கள் கொள்கை
     முற்றிலும் சரிய தாகும்;
பகையிடம் சொல்வேன் என்றே
     பகர்ந்தெழுந் தாரே நெஞ்சே


அண்ணல்பால் இருந்தால் அன்பில்
     அடிமையாய் ஆவோம் என்ற
எண்ணத்தால் எழுந்தே உத்பா
     ஏகிய தென்னே நெஞ்சே


அண்ணலை மாற்றச் சென்றே
     அவர்வழி நெஞ்சை விட்டும்
எண்ணத்தில் ஏக்க முற்றே
     ஏகிட லானார் நெஞ்சே


திரும்பிய உத்பா வின்பால்
     தீயனை அபுஜ ஹில்தான்
நெருங்கியே நடந்த வற்றின்
     நேருரை கேட்க லானான்


பகைவர்கள் அவரைப் பார்த்து
     போனஅச் செய்தி கேட்க
மிகவுமே துணிவு கொண்டு
     வீரமாய்ப் பேச லானார்


குறைஷிய மக்காள்! அந்தக்
     குணமிகு முஹம்ம தோநல்
நிறைவுடைக் கொள்கை ஏந்தி
     நிற்கின்றார் என்றார் நெஞ்சே


மூடத்தை மாற்று தற்கு
     முனைப்புடன் நிற்கும் அந்தப்
பீடுடை யாரின் கொள்கைப்
     பிடிப்பதும் என்னே என்றார்


தம்மிறை தமக்குத் தந்த
     தகுமறை அதனை அண்ணல்
செம்மையாய் உரைத்தார் என்றே
     செப்பிட லானார் நெஞ்சே


உயிரினைக் கொள்ளை கொள்ளும்
     ஒப்பரும் மறையை இன்றே
நயமிகு குரலில் ஓத
     நான்கேட்டேன் என்றார் நெஞ்சே


சத்திய மாகச் சொல்வேன்
     சால்புடை மறையைக் கேட்டேன்
நித்தியன் கூற்றே அந்த
     நேர்மறை என்றார் நெஞ்சே


தேனினும் இனிய அந்தத்
     திருமறை இன்ப நாதம்
ஊனெலாம் கலந்தி னித்த
     உயர்வதும் என்னே என்றார்


ஆயிரம் ஏட்டைச் சொல்ல
     அண்டையில் இருந்து கேட்டேன்;
தூயதாம் குர்ஆ னைப்போல்
     துய்த்திலேன் என்றார் நெஞ்சே


பாவுக்குப் பாவாய்ப் போற்றும்
     பண்புறு உரையாய் நெஞ்சில்
மேவிடும் மறையின் மாண்பை
     விளக்கவோ என்றார் நெஞ்சே


சொற்களின் கோவை தன்னைச்
     சொல்லவே இன்பம் தோன்றும்
அற்புத மறையின் மாண்போ
     அகங்கொளும் என்றார் நெஞ்சே


கல்லார்க்கும் கற்ற வர்க்கும்
     கருத்தினில் ஒளியை யூட்டி
எல்லார்க்கும் பொதுவாய் நிற்கும்
     எழில்மறை என்றார் நெஞ்சே


நாயகம் பேசும் பேச்சும்
     நன்றாகப் பழகும் பண்பும்
தூயதாய் உள்ள தென்று
     தொடுத்துரைத் தாரே நெஞ்சே


அவர்முக ஒளியைக் கண்டே
     அவரிடம் இருந்து மீள
எவருமே விரும்பா ரென்றே
     ஏற்றமாய்ச் சொன்னார் நெஞ்சே


சந்திப்போர் தம்மை எல்லாம்
     சற்குண முஹம்ம துந்தான்
சிந்திக்க வைப்போ ராகச்
     சிறந்துளார் என்றார் நெஞ்சே


உரையாடிப் பார்த்தேன் அந்த
     உத்தமர் இடத்தில் யானோ
குறையேதும் காணேன் என்றே
     கூறிட லானார் நெஞ்சே


சூனியக் காரர் என்று
     சொல்லுவோர் அவரைக் காணின்
ஞானியே ஆவார் என்று
     நம்புவார் என்றார் நெஞ்சே


செப்படி செய்வோர் என்றார்
     சென்றுநான் பார்த்தேன் ஆனால்
அப்படி ஒன்றுங் காணேன்
     அற்புதர் என்றார் நெஞ்சே


இதயத்தைப் பறிகொ டுத்தே
     இருக்கநான் விரும்பி டாமல்
அதிவிரை வாக வந்தேன்
     என்றவர் அறைந்தார் நெஞ்சே


அன்புடன் குறைஷி யர்காள்!
     அன்னவர் தம்மைப் போற்றி
இன்புறு நட்புக் கொள்ளல்
     இனியதே என்றார் நெஞ்சே


அன்புறு நாய கத்தை
     அவர்வழி விடுவோம் அன்னார்
இன்மொழி ஒன்றே நம்மை
     ஈர்த்திடும் என்றார் நெஞ்சே


அவர்வெற்றி கண்டா ரென்றால்
     அவருடை உறவாம் நாமும்
உவப்பது தவறா? என்ன?
     உரையுங்கள்! என்றார் நெஞ்சே


கொள்கையில் அவரும் தோற்றால்
     கொல்லாதோ அரபு நாடும்?
வள்ளல்தான் வீழ்ந்தா ரென்றே
     வாழுவோம் என்றார் நெஞ்சே


நான்இங்கு உரைப்ப வற்றை
     நன்றெனக் கொள்வீர்! இன்றேல்
ஈனத்தில் வீழ்ந்தோ ராவோம்
     என்றுரை முடித்தார் நெஞ்சே


பகைவர்இம் மொழியைக் கேட்டுப்
     பதைத்துமே உத்பா தன்னைப்
புகையுள்ள தீயாய்க் காய்ந்து
     புழுங்கியே நோக்க லானார்


பேச்சாற்றல் வாய்ந்த உத்பா
     பெருந்தோல்வி கண்டார் என்றால்
ஆச்சரி யந்தான் என்றே
     அனைவரும் சொன்னார் நெஞ்சே


அபுஜஹில் முகம்சி வக்க
     அனற்பொரி விழியில் வீழ
நபியவர் பெருமை கேட்டு
     நன்றாகப் புழுங்க லானான்


உத்பாவின் உரையைக் கேட்டே
     உதடுகள் துடிது டித்தே
மெத்தவும் கோபங் கொண்டு
     வெகுண்டெழுந் தானே நெஞ்சே


கொதித்தெழு பாலைப் போல
     கோபமும் உளத்தில் பொங்கக்
குதித்திட்ட அபுஜ ஹீலின்
     கொடுமைதான் என்னே நெஞ்சே


அடங்கொணாச் சீற்றங் கொண்டே
     அபுஜஹில் தீயைக் கக்கி
படபடப் பாகப் பேசப்
     பகைவர்கள் சோர்ந்தார் நெஞ்சே

உள்ளத்தை மாற்று தற்கே
     உத்பாவை அனுப்பி வைத்தோம்;
உள்ளத்தைப் பறிகொ டுத்தே
     ஒழிந்தானே என்றான் நெஞ்சே


முகம்மதின் மாய வார்த்தை
     முழுதுமே மாற்ற -- உத்பா
அகமதைக் கொடுத்தா னென்றும்
     ஆர்த்திட லானான் நெஞ்சே


தோற்றது மட்டு மின்றி
     தோல்வியை மறைப்ப தற்குப்
போற்றியே புகழ்வ துந்தான்
     புன்மையென் றுரைத்தான் நெஞ்சே


அபுஸுப்யான் தோற்று விட்டார்;
     ஆற்றல்சேர் உத்பா தோற்றார்
அபுதாலி பின்நல் பேச்சும்
     அழிந்ததே என்றான் நெஞ்சே


மாயமாய்ப் பேசிப் பேசி
     மாற்றுகின் றாரே என்று
நேயஞ்சேர் நபியின் மீது
     நிந்தனை செய்தான் நெஞ்சே


நமக்கெலாம் வழிவ குக்கும்
     நற்றிறம் இவருக் குண்டோ?
சுமக்கொணா சுமையே என்றே
     சொல்லிட லானான் நெஞ்சே


நம்மையெல் லாம் மயக்கி
     நாட்டினைப் பெறுவ தற்கோர்
செம்மைசேர் திட்டம் தானோ?
     சிந்திப்பீர்! என்றான் நெஞ்சே


நம்முடை முயற்சி யாவும்
     நசிந்தன முகம்ம துக்குச்
செம்மையாய் மதிபு கட்டச்
     செய்வோம்என் றானே நெஞ்சே


நாயகம் தன்னை நாமும்
     நாட்டினில் விடுவ தாமோ?
மாயவே வேண்டும் அந்த
     மனிதரும் என்றார் நெஞ்சே


புதுமையை வேண்டும் இந்தப்
     புதிருடை மனிதர் தம்மை
அதிரவே கொன்றால் அன்றி
     அடங்கிடோம் என்றான் நெஞ்சே


வாய்மைநல் நேர்மை என்றே
     வழக்கினை மாற்றச் சொல்லும்
தூயரைக் கொன்றா லும்தான்
     துயரிலை என்றான் நெஞ்சே


தனித்தஇம் மனிதர் தம்மைத்
     தட்டியே அடக்கு தற்கு
மனிதர்கள் இல்லை யாமோ?
     மானம்போம் என்றான் நெஞ்சே


முகம்மதை அடக்கு தற்கு
     முடியாதா? வெட்கம்! வெட்கம்!
பகைவன்நான் உள்ளேன் என்று
     பகர்ந்தே‘அக் பா’எ ழுந்தான்


குகையினுள் இருந்து வந்த
     கொடும்புலி போன்றெ ழுந்து
‘முகம்மதே! கொன்றேன்’ என்றே
     முழக்கிட லானான் நெஞ்சே


அப்பெரும் காட்சி தன்னைக்
     கண்டதால் அபுஜ ஹில்தான்
ஒப்பிலா இன்ப முற்றே
     உற்சாகம் தந்தான் நெஞ்சே


முகம்மதை வீழ்த்து தற்கு
     முறையென்ன? சொல்வாய்! என்ன
அகமதில் நினைத்த வற்றை
     அறைகின்றேன் என்றான் நெஞ்சே


தொழுகைக்கு முகம்ம துந்தான்
     தனிமையில் வருவார் ஆங்கே
அழுதுமே தவிக்கும் வண்ணம்
     ஆக்குவேன் என்றான் நெஞ்சே


பகைவர்கள் தொடர ஆங்கே
     பாதையில் அமர்ந்தி ருக்க,
முகம்நோக்கி அண்ணல் வந்தார்
     முரடன்எ ழுந்தான் நெஞ்சே


பேசாத வார்த்தை எல்லாம்
     பேசியே, முகம்ம துந்தான்
பேசுவார் என்று பார்த்தான்;
     பேதமை! என்னே நெஞ்சே


சாந்தமே உருவாய் ஆங்கே
     சாலையில் சென்ற அண்ணல்
ஏந்தெழில் கழுத்தைச் சுற்றி
     இழுத்திட லானான் நெஞ்சே


துணியினால் கழுத்தைப் பற்றித்
     துணுக்குற நெருக்கிக் கொண்டே
இனியும்நீர் இருப்ப தாமோ?
     என்றுகேட் டானே நெஞ்சே


தொழுகைக்கா வந்தீர்? என்றே
     துணியினை முறுக்கிக் கொண்டே
இழிமகன் செய்த தைத்தான்
     இயம்புவ தாமோ? நெஞ்சே


நானென்ன செய்தேன்? என்றே
     நாயகம் கேட்கக் கேட்க
வீணனோ விட்டா னில்லை;
     வேதனை தந்தான் நெஞ்சே


கண்கள்தாம் நீர்வ டிக்கக்
     காலதும் சோர்ந்து போக
மண்மிசை நபியைத் தள்ளி
     வதைத்தனன் கொடிதாய் நெஞ்சே


துணியினை முறுக்கி அண்ணல்
     துடித்திட, உயிர் குடிக்க
முனிவுடன் மேலும் மேலும்
     முறுக்கிட லானான் நெஞ்சே


தனிமையில் சிக்கிக் கொண்டே
     தவித்தஅவ் வேளை தன்னில்
இனிநம்மால் இயலா தென்றே
     இறையைநி னைந்தார் நெஞ்சே


வேதனை தாங்கா வண்ணம்
     விண்ணோக்கி அண்ண லாரும்
பாதகன் பிடியில் மீள
     பரிந்தழு தாரே நெஞ்சே


அப்பொழு தங்கு சென்ற
     அபுபக்கர் கூட்டங் கண்டே
அப்படி யென்ன? வென்றே
     அறிந்திட வந்தார் நெஞ்சே


அண்ணலார் தீயோன் கையில்
     அகப்பட்டுத் துடிக்கக் கண்டே
எண்ணிலாத் துன்ப முற்றே
     இதயம்நொந் தாரே நெஞ்சே


கொடியோனே! என்ன செய்தாய்?
     கொடுமை!வெங் கொடுமை! என்றே
விடுவித்த வீரம் தன்னை
     விளக்குவ தாமோ நெஞ்சே


இறைதூதே! இன்ன லுந்தான்
     இப்படி வருமோ? என்றே
நிறைந்தகண் ணீரைச் சிந்தி
     நின்றிட லானார் நெஞ்சே


அண்ணலே! அச்சம் வேண்டாம்
     அஞ்சாமற் செல்வீ ரென்றே
கண்ணிய மாக நின்ற
     காட்சியும் அரிதே நெஞ்சே


அண்ணலோ இறையை எண்ணி
     அமைதியாய்ச் சொல்ல லானார்
கண்ணிய மில்லா அந்தக்
     கசடனோ காய்ந்தான் நெஞ்சே


நபியினைக் கொல்லு தற்கு
     நமக்கிங்கு தடையாய் வந்த
அபுபக்கர் தம்மை யும்நாம்
     அழிப்போம்என் றானே நெஞ்சே


அண்ணலை மீட்ட தாலே
     அபுபக்கர் மீதி லந்த
கண்ணிலான் பாய்ந்து சென்று
     காய்ந்ததும் என்னே நெஞ்சே


கட்டுக்குள் அடங்கி டாத
     களிற்றினைப் போன்றே அந்தத்
துட்டனும் துடித்து நின்று
தென்னே நெஞ்சே


மதியினை இழந்த அந்த
     வம்பனோ காலில் உள்ள
மிதியடி யதனால் ஓங்கி
     மிதித்ததும் என்னே நெஞ்சே


அண்ணலின் தோழர் பட்ட
     அடிகளைச் சொல்வ தாமோ?
புண்பட அடித்த அந்தப்
     புலையதும் என்னே நெஞ்சே


உடலெலாம் புண்க ளாக
     உதிரமும் பெருகி யோட
அடையாளம் தெரியா வண்ணம்
     அபுபக்கர் ஆனார் நெஞ்சே


அடிபட்டே அவரும் வீழ
     ஆங்குள நண்ப ரெல்லாம்
நொடியினில் இல்லம் சேர்த்து
     நொந்திட லானார் நெஞ்சே


அடிபட்ட மகனைக் கண்ட
     அன்னையின் துயரந் தன்னை
வடிப்பதோ! துன்பம்! துன்பம்!
     வாயினால் சொல்லேன் நெஞ்சே


உணர்வற்ற மகனைப் பார்த்தே
     ‘உம்முல்கை ரும்’தான் ஆங்கே
இணர்விழி இரண்டும் நோக
     இன்னலைக் கொண்டார் நெஞ்சே


பெயர்சொல்லி அழைத்துப் பார்த்து
     பேச்சுமே இல்லா தாக
அயர்ந்தவர் கொண்ட துன்பை
     அறிவிப்ப தாமோ நெஞ்சே


உண்ணவும் முடியா வண்ணம்
     உணர்வினை இழந்த மைந்தன்
கண்களைத் திறக்கா வண்ணம்
     கலங்கிய தென்னே நெஞ்சே


கண்மூடிக் கிடந்த அந்தக்
     கருணைசேர் மகனைக் கண்டே
புண்ணுற்றே உள்ளம் நொந்து
     புலம்பிட லானார் நெஞ்சே


கண்ணிய அபுபக் கர்தாம்
     களைப்பினில் மீண்ட பின்னர்
கண்களைத் திறந்து பார்க்கக்
     களிப்பினில் அன்னை ஆழ்ந்தார்


சென்றிட்ட உயிர்தான் மீண்டும்
     சேர்ந்ததே பெரிதென் றெண்ணி
அன்னையார் கொண்ட இன்பை
     அளந்திட லாமோ நெஞ்சே


துயில்எழு நிலையில் உள்ள
     தூய்மைசேர் மகனி டத்தே
அயர்வுடன் அன்னை பேச
     அவர்பேச லானார் நெஞ்சே


உவப்பினால் உணவை மைந்த
     உண்ணுக! என்று சொல்ல
இவைகிடக் கட்டும் அண்ணல்
     நிலையென்ன? என்றார் நெஞ்சே


முன்மொழி யாக ஆமாம்
     முறுவலுக் கிடையே அன்னார்
தன்நிலை உணர்ந்து கேட்ட
     தகுவுரை சொல்வேன் நெஞ்சே


முகம்மது நபிகள் நாதர்
     முன்னவன் துணையால் நன்றே
சுகம்அடைந் தாரா? முன்னர்
     சொல்லுங்கள் என்றார் நெஞ்சே


அண்ணலால் அன்றோ இந்த
     அல்லல்கள் துயர மெல்லாம்!
இன்னுமா அவர்பால் அன்பு?
     என்றன்னை கேட்டார் நெஞ்சே


அண்ணலின் நலத்தைக் கேட்டே
     அதன்பினே கையால் நானும்
உண்ணுவேன் என்று ரைத்த
     உறுதியைப் பாராய் நெஞ்சே


செம்மலின் இடத்தில் கொண்ட
     சீர்மைசேர் அன்பை அன்னார்
இம்மியும் மாற்றார் என்ற
     இயல்பினை அன்னை கண்டார்


முஹம்மதின் மார்க்கந் தன்னை
     முழுமையாய்ச் சேரா நானோ
முஹம்மதின் இடத்திற் செல்ல
     முடியுமோ? என்று கேட்டார்


அகமதில் வருத்த முற்ற
     அபுபக்கர் அன்னை யின்பால்
முகம்மதைக் காண மார்க்கம்
     மொழிந்திட லானார் நெஞ்சே


உங்களின் தோழி யான
     உம்முஜ மீலுக் கண்ணல்
சங்கதி தெரியும், ஆங்கே
     சென்றுநீர் வருக ! என்றார்


தோழியின் இடத்திற் சென்றே
     துடித்திடும் மகனைப் பற்றி
ஆழிபோல் நீர்வ டித்தே
     அனைத்தையும் சொன்னார் நெஞ்சே


உற்றநல் உணவைக் கூட
     உண்ணவே இல்லை என்றே
பெற்றவர் சொல்லக் கேட்டுப்
     பெருந்துயர் வுற்றார் நெஞ்சே


அடிபட்ட செய்தி கேட்டே
     ஆற்றொணாத் துன்ப முற்றுத்
துடிதுடித் திட்டே தோழி
     துன்பினில் வீழ்ந்தார் நெஞ்சே


அண்ணலைப் பார்க்கு முன்னம்
     அபுபக்கர் தம்மைப் பார்க்க
எண்ணுகின் றேன்நீ வாவா
     என்றவர் வந்தார் நெஞ்சே


இருவரும் மகனின் முன்னே
     இன்னலால் வாடி நிற்க
பெருமகன் விழித்துப் பார்த்துப்
     பெருங்களிப் புற்றார் நெஞ்சே


விழிகளால் வருகை கூறி
     விருப்புடன் அமரச் சொன்ன
கழிவிரக் கத்தை இங்கு
     கவிதையால் சொல்வ தாமோ?


அபுபக்கர் உடலைக் கண்டே
     அம்மம்மா! கொடுமை! என்ற
அபிமானத் தாலே தோழி
     அழுதிட லானார் நெஞ்சே


இரக்கமில் லாத அந்த
     ஈனர்கள் செயலை எண்ணி
அரற்றிட லானார் என்றால்
     அதைவிளக் கிடவோ நெஞ்சே


இம்முறை யில்தான் நீரும்
     இருப்பதோ? உண்பீர்! என்றே
உம்முஜ மீல்உ ரைத்தே
     உருகிட லானார் நெஞ்சே


நாயக நலத்தைக் கேட்டு
     நானுளம் மகிழும் முன்னம்
வாயினால் எதையும் உண்ணேன்;
     வருத்தாதீர்! என்றார் நெஞ்சே


அல்லாஹ்வின் அருளால் அண்ணல்
     அர்க்கமின் மைந்தர் வீட்டில்
உள்ளனர் நலமாய் என்றே
     உம்முஜ மீலும் சொன்னார்


அண்ணலின் நலத்தைக் காதால்
     அபுபக்கர் கேட்ட துந்தான்
திண்ணென எழுந்த மர்ந்த
     தேசதும் என்னே நெஞ்சே


அன்பதன் அடித்த ளத்தில்
     ஆர்த்தெழும் மகிழ்வால் ஆங்கே
துன்பத்தில் மீட்சி யுற்றுத்
     தோன்றிட லானார் நெஞ்சே


உறுபசி தனைம றந்தும்
     உடல்வலி யதைம றந்தும்
முறுவலால் பொலிந்த அந்த
     மோகனம் என்னே நெஞ்சே


தருணத்தைப் பார்த் நின்ற
     தாயவர் மகனை நோக்கி
அருந்துக! உணவை என்றே
     அறைந்திட லானார் நெஞ்சே


அண்ணலைக் கண்ணால் கண்டே
     அகங்குளி ராமல் நானும்
உண்ணுவ தாமோ? என்றே
     உரைத்ததும் என்னே நெஞ்சே


தனையனின் உறுதி தன்னைத்
     தாயவர் அறிந்த தாலே
மனத்துளே பலவும் எண்ணி
     மயங்கிட லானார் நெஞ்சே


முகம்மதின் இடத்தில் அன்பை
     முழுமையாய் வைத்து விட்டான்
இகமதில் இவர்கட் கீடாய்
     எவருண்டாம்? என்றார் நெஞ்சே


இதயத்தால் ஒன்று பட்ட
     இவர்களின் நட்பில் ஏதோ
புதைந்துள தேஎன் றெண்ணி
     புளகமுற் றாரே நெஞ்சே


தன்மகன் நேர்மை, அன்பு,
     தயைமிக உடையோன் அந்த
அண்ணலின் அன்பைக் கொண்டான்
     ஆ!ஆ!ஆ! என்றார் நெஞ்சே


அண்ணலார் மார்க்கந் தன்னில்
     அற்புத சக்தி ஒன்று
திண்ணமாய் உள்ள தென்றே
     தீர்க்கமாய் உணர்வ தானார்


உம்முல்கை ருள்ளந் தன்னில்
     உத்தமர் தம்மைப் பார்க்கச்
செம்மைசேர் வேட்கை தானும்
     செழித்ததில் வியப்பு முண்டோ?


அண்ணலைக் காண்ப தற்கே
     ஆயத்தம் எல்லாம் செய்தே
அன்புறு மகனோ டேக
     அவர்எழுந் தாரே நெஞ்சே


அரவமில் லாத வேளை
     அபுபக்கர் தனையெ ழுப்பி
இரவினில் அழைத்துக் கொண்டே
     ஏகிட லானார் நெஞ்சே


நடக்கவே முடியா வண்ணம்
     நலிந்தவர் உடலைத் தாங்கி
நடந்தவர் சென்ற தைத்தான்
     நவிலுவ தாமோ? நெஞ்சே


அர்க்கமின் மைந்தர் வீட்ட
     அணுகிட லானார்; ஆங்கே
குர்ஆனைப் பற்றி அண்ணல்
     கூறிக்கொண் டிருந்தார் நெஞ்சே


அபுபக்கர் அதனைக் கண்டே
     ஆனந்த மாக நோக்க
அபுபக்கர்! தம்மைக் கண்டோர்
     ஆர்த்தெழுந் தாரே நெஞ்சே


ஆர்த்தெழும் மக்கள் பின்னே
     அண்ணலார் நோக்க ஆங்கு
நேர்த்திசேர் அபுபக் கர்தாம்
     நிற்பதைக் கண்டார் நெஞ்சே


நண்பரைக் கண்ட துந்தான்
     நடுங்கிய நிலையில் வந்தே
அண்ணலும் தழுவி நின்ற
     அன்பதும் என்னே நெஞ்சே


அண்ணலும் பார்த்தார் கண்ணில்
     அருவிபோல் நீர்வ டித்தார்
புண்ணிவை எதனால்? என்றே
     புண்பட்டுக் கேட்டார் நெஞ்சே


கண்களில் நீர்க லங்க
     கைகளால் உடலைத் தொட்டும்
புண்பட்டுப் பதைப தைத்தே
     புழுங்கிட லானார் நெஞ்சே


பரிதாபக் கோலந் தன்னைப்
     பார்த்தவர் நெஞ்ச மெல்லாம்
அருவிபோல் நீர்வ டிக்க
     அண்ணல்சோர்ந் தாரே நெஞ்சே


ஆருயிர்த் தோழர் தம்மின்
     அருகிலே அமர்ந்த வண்ணம்
தேறுதல் உரைத்தி ருந்த
     தேசதும் என்னே நெஞ்சே


அவையுளோர் எல்லாம் ஆங்கே
     அமைதியாய் நீர்பெ ருக்க
நவையிலா அபுபக் கர்தாம்
     நவின்றதைக் கேட்பாய் நெஞ்சே


களைப்பதால் சோர்வ டைந்த
     கடமைசெய் வீர ருந்தான்
நலம்தானா? என்றே ஆங்கு
     நபிகளைக் கேட்க லானார்


*அல்ஹம் லில்லாஹ்! என்றே
     அண்ணலார் சொல்ல--அன்னார்
நல்முகம் கொண்ட இன்பை
     நவிலுதல் எளிதோ? நெஞ்சே

*அல்ஹம் லில்லாஹ் - புகழனைத்துக்கும் உரிய இறைவனின் உதவியால் நான் நலத்துடன் உள்ளேன் என்று நாயகம் நவின்றார்கள்.


அன்புறு மகனும் போற்றும்
     அண்ணலும் கொண்டி ருக்கும்
அன்பினைக் கண்ட அன்னை
     ஆனந்தம் உரைப்ப தாமோ?


தன்னிலும் அன்பு காட்டும்
     தயைமிகு அண்ண லாரின்
அன்பினை நேரில் கண்டே
     அதிசயங் கொண்டார் நெஞ்சே


அல்லல்க ளுக்குள் இந்த
     அன்பதா? என்றே எண்ணி
உள்ளத்தால் ஒன்று பட்டோர்
     உயர்வினில் மகிழ்ந்தார் நெஞ்சே

 

இருவரின் அன்பின் ஆழம்
     இணையிலா தாமாம் என்றே
பெருகிடும் உவகை தன்னில்
     பேசிட லானார் நெஞ்சே


அகமதில் இன்பம் ஆமாம்
     அருமகன் பெருமை யாலே
முகமெலாம் ஒளியின் கூத்தாம்
     மொழியிலை; இல்லை நெஞ்சே

அன்னையின் மகிழ்வைக் கண்ட
     ஆனந்தத் தாலே பிள்ளை
இன்புடன் சொன்ன அந்த
     இன்னுரை கேளாய் நெஞ்சே


அன்னையர் உய்ய நல்ல
     அருளுரை தருவீர் என்றே
அண்ணல்பால் அவருங் கேட்ட
     ஆர்வமும் பெரிதே நெஞ்சே


அம்மொழிக் கேற்ப அண்ணல்
     அருமுறை ஆற்ற அந்தச்
செம்மைசேர் அன்னை இஸ்லாம்
     சேர்ந்ததும் வியப்பே நெஞ்சே


தாயின்பங் கண்ட அந்தத்
     தனயனின் இன்பந் தன்னை
வாயினால் உரைப்ப தாமோ?
     வாய்திற வாய்என் நெஞ்சே


வந்ததை மறந்தார்; பிள்ளை
     வருத்தங்க ளைம றந்தார்
சிந்தைதான் களியில் ஆழச்
     சேயென ஆனார் நெஞ்சே


பிள்ளைக்கோ பெரும்பே ரின்பம்
     பெற்றவ ருக்கும் இன்பம்
உள்ளத்தால் உணர்வ தன்றி
     உரைப்பதோ சொல்வாய் நெஞ்சே


தன்னுடைக் கொள்கை தன்னைத்
     தாயவர் ஏற்றார் என்ற
இன்பத்தில் உடல்ம றந்தே
     இருந்ததும் என்னே நெஞ்சே


அண்ணலின் அன்பு வெள்ளம்
     அபுபக்கர் துன்பை மாற்ற
எண்ணரும் நிலையில் மைந்தர்
     இருந்திட லானார் நெஞ்சே


தனயனால் உய்வு பெற்ற
     தாயரோ அன்பு கொண்டு
மனத்தினில் ஒளிய டைந்து
     மகிழ்ச்சியில் நீந்த லானார்


இப்பெரும் செய்தி தன்னை
     இருசெவி யாலே கேட்க
ஒப்பிலாப் பகைவர் கொண்ட
     உறுத்தலும் சிறிதோ! நெஞ்சே


அடுத்தவர் எல்லாம் அண்ணல்
     அன்பினில் மாறக் கண்டே
கடுத்திட்ட அபுஜ ஹில்தான்
     கலங்கிட லானான் நெஞ்சே


இவர்களின் நட்பைக் கண்ட
     இதயமில் பகைவ ரெல்லாம்
உவந்திடு வாரோ என்றே
     உட்பகை கொண்டார் நெஞ்சே

துன்பம் படர்ந்தது

அண்ணலின் புகழைக் கண்டே
     அப்பகை வர்கள் செய்த
எண்ணிலாத் துன்பம் தன்னை
     எடுத்துரைப் பதுவோ நெஞ்சே


வீதியில் அண்ணல் சென்றால்
     வசைமொழி வீசி அன்னார்
பாதியில் வழிம றித்தே
     படுத்திய துன்பம் கேளாய்!


குப்பையைக் கூளந் தன்னைக்
     கொண்டுவந் தண்ணல் மீதே
ஒப்புடன் கொட்டி அன்னார்
     உவந்ததும் என்னே நெஞ்சே


தொழுகைசெய் வள்ள லின்மேல்
     துட்டர்கள் ஒட்ட கத்தின்
கழிபொருள் தன்னை வீசிக்
     களித்ததைச் சொல்வ தாமோ!


சிறுவர்கள் அவர்கள் பேச்சால்
     சிந்தனை யில்லா வண்ணம்
பொறுக்கிய கற்கள் தம்மைப்
     போட்டதும் என்னே நெஞ்சே


வள்ளல்தான் நடந்து செல்லும்
     வழியினில் இரக்க மின்றி
முள்ளினைப் பரப்பி வைத்த
     மூர்க்கத்தை என்ன சொல்வேன்!


முஸ்லிம்கள் என்று கண்டால்
     மூர்க்கமாய்ப் பிடித்து வந்து
விஸ்வாச மின்றித் துன்பம்
     விளைத்திட லானார் நெஞ்சே


ஆடையை அவிழ்த்தே அன்னார்
     அனல்படு புழுவைப் போலக்
கோடையின் மணலில் வீழ்த்திக்
     குதித்தும கிழ்ந்து நின்றார்


நெஞ்சத்துக் கொள்கைக் காக
     நெஞ்சிலே கல்லை வைத்த
வஞ்சகச் செயலை இங்கு
     வாய்விட்டுச் சொல்லேன் நெஞ்சே


யாருக்கும் அஞ்சா அந்த
     அகமிலா மக்க ளும்தான்
நீருக்குள் பிடித்த ழுத்தி
     நீசங்கள் செய்தார் நெஞ்சே


இறைநெறி தன்னை ஏந்தி
     இன்புற்ற மக்க ளுக்கு
முறையிலாப் பகைவர் தந்த
     மூர்க்கங்கள் ஒன்றோ? நெஞ்சே


நீக்ரோமுஸ் லீம்தான் அந்த
     பிலால்எனும் நேயர் உற்ற
நீக்கரும் துன்பந் தன்னைச்
     சொல்லவே துன்பாம் நெஞ்சே


இறைநெறிக் கொள்கைக் காக
     இதயத்தைக் கொடுத்தா ரென்றே
குறையின்றி அவர்க்கி ழைத்த
     கொடுமைகள் சிறிதோ! நெஞ்சே


காலினில் கயிற்றைக் கட்டிக்
     கல்லிலே இழுத்துச் சென்றே
மேலினைப் புண்ப டுத்தி
     வேதனை செய்தார் நெஞ்சே


தெருத்தெரு வாய்பி லாலின்
     தேகத்தில் குருதி கொட்ட
வெறுப்புடன் இழுத்துச் சென்ற
     வேதனை சிறிதோ! நெஞ்சே


மேனிதான் அழிந்த போதும்
     மேன்மைசேர் கொள்கை தன்னை
நானிங்கு துறவேன் என்ற
     நல்லுளம் பெரிதே நெஞ்சே


பாவிகள் இரக்க மின்றிப்
     பல்வேறு துன்பம் தந்தும்
நாவினால் ஏகன் மாண்பை
     நவின்றதும் அரிதே நெஞ்சே


இரும்புறை மேலுக் கிட்டே
     எரிவெய்யி லில்கி டத்த
துரும்புமே மாறேன் என்ற
     துணிவதும் என்னே நெஞ்சே


தோலதை உடலில் சுற்றித்
     துண்டுதுண் டாகு வண்ணம்
கோலதால் அடித்த போதும்
     கொள்கையில் நின்றார் நெஞ்சே


அபுபக்கர் பிலாலுக் காக
     அதிவிரை வாகச் சென்றே
அபிமானத் தாலே மீட்டி
     ஆதரித் தாரே நெஞ்சே


‘கப்பாப்’என் றழைக்கப் பெற்ற
     கருணைசேர் முஸ்லி முக்கும்
அப்பப்பா! அவர்கள் செய்த
     அல்லலும் சிறிதோ! நெஞ்சே


நெருப்பிலே கிடத்திக் காலை
     நெஞ்சிலே வைத்த ழுத்த
விருப்புடை இஸ்லா மைநான்
     விட்டிடேன் என்றார் நெஞ்சே


கால்களைக் கட்டி அன்னார்
     கழியதில் வைத்துத் தூக்கி
வேல்களால் குத்திப் பார்த்து
     வேடிக்கை செய்தார் நெஞ்சே


மெய்யெலாம் சிலிர்க்கும் வண்ணம்
     மேனியைப் புண்ப டுத்திக்
கையோயும் வரைய டித்துக்
     களித்திட லானார் நெஞ்சே


தரையினில் தள்ளி விட்டுத்
     தலையதை மாறி மாறி
விரைவுடன் உதைத்த ளித்த
     வேதனை சிறிதோ! நெஞ்சே


சுடுமணல் மீது தள்ளிச்
     சூடுகள் போட்ட தோடு
சுடுகல்லை நெஞ்சில் வைத்துச்
     சுட்டதும் கொடிதே நெஞ்சே


வீதியின் மருங்கில் நின்று
     வேடிக்கை பார்த்த மக்கள்
ஓதிய மொழிகள் தம்மை
     உரைப்பதோ சொல்வாய்! நெஞ்சே


விழியெலாம் நீர்பெ ருக்கி
     வேதனை யுடனே அந்த
வழியெலாம் நிறைந்த மக்கள்
     வருந்திய தென்னே நெஞ்சே