பக்கம் எண் :

33

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

துன்பம் சுமந்த துணிவுடை வீரர்

இஸ்லாமிற்காக இன்னுயிரளித்த முதல் தியாகிகள் (யாஸிர், சுமய்யா)

   

கொள்கையைக் காப்ப தற்கே
     கொடுமையை ஏற்ற யாஸிர்
நல்வீரம் போன்று பாரில்
     நவிலஉண் டாமோ? நெஞ்சே

எல்லையில் வாதை யுற்றும்
     எள்ளள வும்மா றாது
நல்லுயிர் தந்த யாஸிர்
     நல்லுரம் பெரிதே நெஞ்சே


வரலாற்றில் இல்லா தந்த
     வன்மைசேர் கொடுமை தன்னைத்
திரளான மக்கள் முன்னர்
     செய்ததைச் சொல்வேன் நெஞ்சே


கால்களில் கயிற்றைக் கட்டிக்
     கயிற்றினை ஒட்ட கத்தின்
கால்களில் கட்டி அன்னார்
     களித்ததைச் சொல்வ தாமோ


வெவ்வேறு திசையில் ஓட்டி
     வேதனை தந்த தைத்தான்
எவ்வாறு எடுத்து ரைப்பேன்?
     என்னேஅத் துன்பம்! நெஞ்சே


இருவேறு திசையில் அந்த
     இருஒட்ட கங்கள் ஓடக்
குருதிகொட் டக்கி ழித்த
     கொடுமையும் சிறிதோ நெஞ்சே


துண்டாகக் கிழிக்கப் பட்டுத்
     துடிதுடித் திட்ட அந்தக்
கண்காணாக் காட்சி தன்னைக்
     கழறிட லாமோ? நெஞ்சே


உடலிரண் டாகும் வேளை
     “ஒருவனே இறைவன்” என்ற
திடமுரை பகர்ந்த யாஸிர்
     தீரமும் பெரிதே யன்றோ?


கிழித்தஅவ் வுடலைக் கண்டே
     கிளர்ந்துமே எழுந்தே யந்த
அழியாத பகைவர் எல்லாம்
     ஆனந்தம் கொண்டார் நெஞ்சே


சுவனம் கொண்ட சுமய்யா

கொண்டவர் கொண்ட துன்பைக்
     கூர்ந்துமே பார்க்க லான
பண்புடை சுமய்யா வும்தான்
     பதைத்திட லானார் நெஞ்சே


கணவரின் நிலையைக் கண்டு
     கண்களில் நீர்வ டித்தே
அனலில்வீழ் புழுவைப் போல
     அவர்துடித் தாரே நெஞ்சே


எழுந்துபின் வீழ்ந்தெ ழுந்தே
     ஏங்கியே குரலெ ழுப்பி
அழுததைச் சொல்வ தாமோ!
     அழுகையே பெருகும் நெஞ்சே


உணர்வின்றித் தரையில் வீழ்ந்தே
     உருண்டஅப் பெண்ணைத் தூக்கி
மனம்போன போக்கில் அன்னார்
     வதைத்ததும் என்னே நெஞ்சே


கொண்டவன் நிலையைக் கண்டாய்
     கொடிய‘இஸ் லாமை’ விட்டுப்
பெண்ணேநீ விலகே என்றே
     பகைவனும் பேச லானான்


உனக்குயிர் வேண்டு மாயின்
     உரைத்ததைக் கேட்பாய் மற்றும்
உனக்குயிர் வேண்டா மென்றால்
     உன்னிஷ்டம் என்றான் நெஞ்சே


கொடியஇவ் வார்த்தை தன்னைக்
     கூறவும், அயர்ந்தி டாமல்
இடியொலி போன்றே ‘இஸ்லாம்
     எனதுயிர்’ என்றார் நெஞ்சே


ஆயிரம் கொடுமை செய்தே
     அல்லலுள் ஆழ்த்தி னாலும்
நேயஎன் இஸ்லாம் விட்டு
     நெகிழ்ந்திடேன் என்றார் நெஞ்சே


ஆருயிர்த் துணயி யிழந்தே
     அல்லல்கள் உறினும் கொள்கை
சீருடன் ஊன்ற வைத்தே
     செல்லுவேன் என்றார் நெஞ்சே


அஞ்சாமல் பேசு கின்ற
     அரிவையின் துணிவைக் கண்டு
மிஞ்சிய வியப்பில் ஆழ்ந்தே
     மிடுக்கிழந் தாரே நெஞ்சே


பகைவரின் தலைவன் ஆங்கே
     பதட்டமாய்த் துடித்தெ ழுந்து
நகைத்துமே சுமய்யா வைத்தான்
     கொன்றதைக் கேளாய் நெஞ்சே


கொன்றஅம் முறையை இங்கு
     கூறுவ தாமோ! நெஞ்சே!
துன்பத்துள் துன்பம் நெஞ்சே!
     துக்கமே பெருகும் நெஞ்சே


அம்பொன்றை விரைந்தெ டுத்தே
     அவர்மறை விடத்தைத் தாக்கி
வெம்பியே வீழும் வண்ணம்
     விடுத்ததும் என்னே நெஞ்சே


அம்பினால் அவர டைந்த
     அல்லலை இங்கு நானும்
எம்மொழி கொண்டு ரைப்பேன்!
     எல்லையில் துன்பம் நெஞ்சே


ஆருயி ரைக்கு டிக்க
     அம்பது பாய்ந்த வேளை
பேரருள் ‘அல்லாஹ்’ வின்நல்
     பெயர்சொல்லி வீழ்ந்தார் நெஞ்சே


துள்ளியே துடி துடித்துத்
     துவண்டுமே உதிரந் தன்னில்
புள்ளிமான் கிடந்த தைப்போல்
     பொலிந்துயிர் தந்தார் நெஞ்சே


இஸ்லாமின் நெறியைக் காக்க
     இன்னுயிர் தனைய ளித்த
விஸ்வாசம் என்னே நெஞ்சே!
     வீரமும் என்னே நெஞ்சே


தூயஇஸ் லாமிற் காகத்
     துவக்கமாய் உயிர ளித்த
வாய்மைசேர் சுமய்யா, யாஸிர்
     வாழ்க்கையே வாழ்க்கை நெஞ்சே


இருவரும் ஒன்றாய் ஆங்கே
     இன்னுயி ரைய ளிக்க
கறுவிய பகைவர் நெஞ்சோ
     கனிந்திட வில்லை நெஞ்சே


இருவரும் இறந்தா ரென்ற
     இன்பத்தில் பகைவ ரெல்லாம்
பெருங்களி யாட்டம் ஆடிப்
     பிரிந்திட லானார் நெஞ்சே


குழந்தைகள் ஓடி வந்தே
     குருதியில் கிடந்த பெற்றோர்
அளியுடல் மீது வீழ்ந்தே
     அழுததும் என்னே நெஞ்சே


தந்தையே! தாயே! என்று
     தவித்தஅம் மக்கள் துன்பச்
சிந்தையில் எண்ண எண்ணச்
     செயலிழப் போமே நெஞ்சே


குழந்தைகள் துன்பந் தன்னைக்
     கூர்ந்துமே பார்த்த மக்கள்
அழுதனர் என்றே இங்கே
     அறைந்திட வோஎன் நெஞ்சே


பார்த்தவர் பதைத்து நின்று
     பரிதாபம்! என்று சொல்ல
சோர்ந்தவர் மக்கள் துன்பைச்
     சொல்லுவ தாமோ! நெஞ்சே


கண்ணீரை வடித்த வண்ணம்
     கதறிய மக்கள் தம்மை
எண்ணிலார் எடுத்து ரைத்தும்
     ஏங்கியே அழுவார் நெஞ்சே


ஆறுதல் சொல்லப் போன
     ஆண்மைசேர் மக்க ளுந்தான்
தேறுதல் இன்றித் தேம்பி
     அழுததும் என்னே நெஞ்சே


அன்னைதந் தையைப் பார்த்தே
     அழுதஅம் மக்க ளுக்கும்
எம்மொழி உரைப்ப தென்றே
     ஏங்கிட லானார் நெஞ்சே


பெற்றவர் கொள்கைக் காகப்
     போயினர் என்று ரைக்க-
சற்றவர் ஓய்வார் பின்பு
     சோர்ந்துமே அழுவார் நெஞ்சே


அண்ணல்அப் பீழை தன்னை
     அறிந்துமே அகத்தில் கொண்ட
எண்ணத்தைத் துன்பம் தன்னை
     எடுத்துரைப் பதுவோ! நெஞ்சே


யாசிரின் மகனார் அம்மார்
     யாதுசெய் வதுவென் றேங்கிப்
பாசத்தால் துடிக்க-அண்ணல்
     பகர்ந்ததைச் சொல்வேன் நெஞ்சே


அம்மாரே! ஒன்று சொல்வோம்
     அணுவேனும் கவலை வேண்டாம்;
செம்மைசேர் கொள்கைக் காகச்
     சென்றனர் என்றார் நெஞ்சே


ஆறுதல் எடுத் ரைத்தே
     அவருடைத் துன்பைப் போக்கத்
தேறுதல் உரைத்த அண்ணல்
     தெளிவுரை கேளாய் நெஞ்சே


யாசிரின் மக்காள்! நீங்கள்
     யாவைக்கும் பொறுமை கொள்க!
மாசிலா சொர்க்கம் தன்னை
     மகிமையாய்ப் பெறுவீ ரென்றார்


சோதனைக் கெல்லாம் பின்பு
     சொர்க்கத்தைப் பெறுவீர்; சொர்க்கம்
நீதமாய் உள்ள தென்றே
     இயம்பிட லானார் நெஞ்சே


ஆண்டவன் கொள்கைக் காக
     அகமொத்தே இருவ ருந்தான்
மாண்டுநம் மனத்தில் வாழ்தல்
     மகிமையே என்றார் நெஞ்சே


அறியாமை அதனை வீழ்த்தி
     அறிவுடை மார்க்கங் காண
பிரியமாய் உயிரைத் தந்தார்
     போற்றுவோம் என்றார் நெஞ்சே


கொள்கைக்கே உயிர ளித்த
     குணமிகு இருவ ருக்கும்
வள்ளல்தான் இறைவ னின்பால்
     வழுத்திய தென்னே நெஞ்சே

அண்ணலின் மொழியைக் கேட்டே
     அகமதில் அமைதி கொண்டு
கண்ணீரைத் துடைத்தே அம்மார்
     களிப்படைந் திட்டார் நெஞ்சே


வரலாற்றுப் பொன்னேட் டின்கண்
     வைரத்தால் பொறிக்க வல்ல
பெருவீரம் அன்றோ! என்றே
     பெருமக்கள் மொழிந்தார் நெஞ்சே


இப்பெரும் தியாகந் தன்னில்
     இறந்தோமா? என்றே சொல்லி
அப்பெரும் கூட்டம் சென்ற
     அதிசயம் என்னே நெஞ்சே


அண்ணலார் அன்பைப் பெற்ற
     அருமையில் அம்மார் நெஞ்சம்
புண்ணதை ஆற்றிக் கொண்டே
     புத்தொளி பெற்றார் நெஞ்சே