பக்கம் எண் :

46

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

மதீனா வாசிகளின் வரவேற்பு

அன்னவர் வாயில் எல்லாம்
     ஆனந்த மாக வந்த
பண்ணிசைப் பெருமை தன்னைப்
     பகர்ந்திடக் கேளாய் நெஞ்சே

முழுமதி எழுந்த தென்றும்
     மூடிருள் அகன்ற தென்றும்
எழிலிசை யோடு அன்னார்
     இசைத்ததும் என்னே நெஞ்சே


உங்களின் வருகைக் காக
     உள்ளத்து நன்றி என்றே
செங்கனி வாயால் அன்னார்
     சேர்ந்திசைத் தாரே நெஞ்சே

 

மெய்யான இறைவ னைத்தான்
     மேன்மையாய்க் காட்டித் தந்த
வையப்பே ரொளியே! எங்கள்
     வாழ்த்துக்கள்! என்றார் நெஞ்சே


எங்களின் நலத்திற் கென்றே
     எம்மினின் றெழுந்தோய்! நீங்கள்
மங்களம் கொணர்ந்தீ ரென்றே
     மகிழ்ந்திட லானார் நெஞ்சே


பயனிலாக் கொள்கை தன்னைப்
     பாரினில் நீக்கி, உங்கள்
உயர்வுடை நெறியைப் போற்றி
     உறைகின்றோம் என்றார் நெஞ்சே


வானகம் மகிழ்ச்சி கொள்ளும்
     வையகம் செழிக்கு மென்றே
கானத்தால் அவர்ம கிழ்ந்த
     காட்சியும் பெரிதே நெஞ்சே

 

சிறியவர் பண்ணைக் கேட்டுச்
     சிந்தையில் இன்பங் கொண்ட
நெறியுடைப் பெரியோர் தாமும்
     நின்றிசைத் தாரே நெஞ்சே


சாரளம் தோறும் பெண்கள்
     சாற்றொணா ஆர்வத் தோடு
வீரர்நம் நாய கத்தை
     விளித்திட லானார் நெஞ்சே


அன்புடன் மக்கள் கூடி
     அளித்தஅவ் வரவேற் பாலே
இன்புறல் கண்டே வள்ளல்
     இன்புற லானார் நெஞ்சே


ஒட்டகம் இரண்டும் ஆங்கே
     ஒய்யார மாகச் சென்ற
கட்டெழில் கோலந் தன்னைக்
     கழறுதல் எளிதோ! நெஞ்சே

 

தங்கள்தாம் இல்லத் திற்குத்
     தலைவரை அழைக்க நாடி
பொங்கவா உந்த முந்திப்
     போந்திட லானார் நெஞ்சே


யார்அழைப் பதனை எற்றங்
     கேகுவ தென்றே அண்ணல்
ஓர்முடி வதனைக் காண
     உன்னிட லானார் நெஞ்சே


இறுதியில் மக்கள் நோக்கம்
     இன்நபி யோசித் தேதான்
உறுதியாய் உரைத்த வற்றை
     உரைக்கின்றேன் கேளாய் நெஞ்சே


என்னுடை முடிவை என்றன்
     எழில்ஒட்ட கத்தின் பாலே
இன்புடன் தருவ தானேன்
     என்றுரை தந்தார் நெஞ்சே

 

இந்தஒட் டகந்தான் எந்த
     இல்லத்தில் நிற்கு மாமோ
அந்தஇல் லத்தில் நானும்
     அமருவேன் என்றார் நெஞ்சே


அண்ணலின் முடிவைக் கேட்டோர்
     அமைதியாய் ஏற்க லானார்
அண்ணலும் ஒட்டை மீதே
     அமர்ந்துசென் றாரே நெஞ்சே


சென்றஅவ் வொட்ட கந்தான்
     சிந்தனை செய்த தைப்போல்
நின்றேஓர் இல்லின் முன்னே
     படுத்ததும் என்னே நெஞ்சே


ஒட்டகம் வீட்டின் முன்பு
     ஓய்வுறப் படுக்கக் கண்டே
மட்டிலா இன்ப முற்று
     மகிழ்ந்திட லானார் நெஞ்சே

 

தம்முடைய வீட்டைத் தேடி
     தருமமே வந்த தென்று
விம்மித முற்றே வீட்டார்
     விளங்கிய தென்னே நெஞ்சே


அகமெலாம் உவகை கொண்டே
     அண்ணலும் இறங்கி வந்து
மிகவுமே மகிழ்ச்சி என்று
     விளம்பிட லானார் நெஞ்சே


மதினாவாழ் தலைவ ரெல்லாம்
     மகிழ்ச்சியால் ஒன்று சேர்ந்து
மதிக்கொணாத் தலைவர் தம்மை
     மகிழ்ந்தழைத் தாரே நெஞ்சே


வீட்டவர் நெஞ்சங் கொண்ட
     விம்மித மதனை நீதான்
கேட்டிடத் துடிது டிப்பாப்
     கிளத்துவன் கேளாய் நெஞ்சே

 

அண்ணலை வரவேற் கின்ற
     அரியதோர் வாய்ப்பைப் பெற்ற
அன்புறு அபுஅய் யூபாம்
     அன்சாரி களித்தார் நெஞ்சே


அன்சாரி அகத்திற் கொண்ட
     அளவிலா மகிழ்ச்சி தன்னை
இன்புறு பணிக ளாலே
     இயற்றிட லானார் நெஞ்சே


மாடியில் நாய கத்தை
     மகிழ்வுடன் வைக்க வேண்டி
நாடினார்; ஆனால் வள்ளல்
     மறுத்திட லானார் நெஞ்சே


வருபவர் தம்மைப் பார்க்க
     வசதியாய் இருக்க வேண்டி
இருக்கின்றேன் கீழே என்றே
     இயம்பிட லானார் நெஞ்சே

 

பார்க்கவே வந்தோர்க் கெல்லாம்
     பரிவுடன் காட்சி தந்து
ஈர்த்துமே நின்ற அண்ணல்
     இன்னொளி என்னே நெஞ்சே


மக்கள்தம் நகரத் திற்கு
     *மாநபி வந்தா ரென்றே
மிக்கவும் இன்ப முற்று
     மிதந்திட லானார் நெஞ்சே

* புனிதமான கொள்கைக்காகப் பிறந்தகத்தைத் துறந்து வேற்றிடம் குடி புகுவதற்கு “ஹிஜ்ரத்” செய்தல் என்று பெயர். பெருமானாரவர்கள் விரோதிகளின் தொல்லைகளைத் தாங்காது மக்காவைவிட்டு மதீனா குடி பெயர்ந்து சென்றார்களல்லவா? அந்நிகழ்ச்சியின் நினைவாகவும் உயிரினும் இனிய கொள்கைக்காக எதனையும் தியாகம் செய்யும் மனப்பான்மை கொள்வதற்காகவும் உள்ள தத்துவத்தைக்கொண்டு ஹிஜ்ரீ ஆண்டு அன்று முதல் துவங்கப்படலானது.


அன்பெனும் வெள்ளந் தன்னில்
     அண்ணலை ஆழ்த்தி மக்கள்
இன்புற லானார்; மற்றும்
     இன்பணி செய்தார் நெஞ்சே


அளவற்ற அன்பு கொண்டே
     அனைவரும் பணிகள் செய்தே
உளமெலாம் களிது ளும்ப
     உவந்திட லானார் நெஞ்சே


அரபினில் உங்க ளுக்கு
     அன்பில்ல மாக இந்தப்
பெருமைசேர் மதினா தன்னைப்
     பெறுகவென் றுரைத்தார் நெஞ்சே


மக்கள்தாம் அண்ணலின் பால்
     மனமகிழ் வுற்றோம்; என்றும்
தக்கநல் உதவி செய்யத்
     தவறிடோம் என்றார் நெஞ்சே


தனியாகத் தாங்கள் இங்கு
     இருக்கின்றீர் குடும்பந் தன்னை
இனியேனும் அழைப்ப தற்கு
     இசைக!என் றுரைத்தார் நெஞ்சே

 

வள்ளலும் இசைவு தந்தார்;
     வந்தனர் குடும்பத் தார்கள்.
எல்லோரும் மகிழ்ந்தி ருந்த
     ஏற்றமும் என்னே நெஞ்சே


அண்ணலின் குடும்ப மான
     ஆயிஷா, சௌதா மற்றும்
கண்ணனை பாத்தி மாவும்
     களிப்பொடு வந்தார் நெஞ்சே


பெருமானார் குறையொன் றின்றிப்
     பெட்புடன் இருக்க லானார்
அருங்குண மக்க ளுந்தான்
     ஆனந்தங் கொண்டார் நெஞ்சே


நகரத்தின் பொலிவை மற்றும்
     நல்லுள மக்கள் மாண்பை
அகத்தினில் எண்ணி எண்ணி
     அவர்மகிழ்ந் துறைந்தார் நெஞ்சே

 

மதினாவின் எழிலை நாதர்
     மனத்தினில் நினைக்கும் போது
அதுஅன்று ஜிப்ரீல் வானில்
     அறிவித்த தென்பார் நெஞ்சே


அமைதிசேர் இறைவ னாட்சி
     ஆலென ஊன்றும் மாண்பு
அமையுமோ இவ்வி டத்தில்
     என்றிட லானார் நெஞ்சே


மதினாவின் மக்கள் எல்லாம்
     மன்னர்பால் அன்பு கொண்டு
புதுப்புது உபதே சத்தைப்
     பொற்புடன் கேட்டார் நெஞ்சே

 

மதினாவில் இஸ்லாம் மார்க்கம்
     மாண்புடன் நாளும் ஓங்க
அதிஇன்பம் தன்னை வள்ளல்
     அடைந்திட லானார் நெஞ்சே

திருமறை ஓசை ஊரின்
     திக்கெலாம் மேவ அண்ணல்
ஒருவனின் மாண்பை எண்ணி
     உவந்திட லானார் நெஞ்சே


மதினாவில் பள்ளி ஒன்றை
     மாண்புடன் அமைக்க ஒட்டை
முதன்முதல் படுத்த அந்த
     இடத்தைவாங் கிட்டார் நெஞ்சே


அழகான பள்ளி ஒன்றை
     அங்கமைத் திடவே மக்கள்
பழகியே ஒன்று பட்டுப்
     பரமனைத் தொழுக லானார்.


எதிரிகள் தொல்லை யாவும்
     ஏகின ; எனவே அண்ணல்
இதயத்து இறைவ னாட்சி
     இயற்றஎண் ணிட்டார் நெஞ்சே

 

பள்ளியில் குவிந்த மக்கள்
     பான்நபி அமுத வாக்கை
அள்ளியே சென்று சென்று
     அருந்திட லானார் நெஞ்சே


மக்கத்தைத் துறந்தோர் தம்மை
     மனமுவந் துடன்பி றந்த
மக்களாய் மதித்தன் புற்றார்
     மதினம்வாழ் மக்கள் நெஞ்சே


மக்கத்து முஸ்லிம் மக்கள்
     மதினாவின் மக்க ளோடு
மிக்கவே ஒன்ற லான
     மேன்மையும் என்னே நெஞ்சே

மக்கத்தை விட்டும் வந்தும்
     மனத்தினில் வணிகர் என்றே
மிக்கவும் களியோ டன்னார்
     மிதந்திட லானார் நெஞ்சே

 

அங்குவாழ் முஸ்லி மின்பால்
     அன்புறு அலிதான் சந்தை
எங்குள தென்று கேட்டே
     ஏகிட லானார் நெஞ்சே


அழைத்தஅவ் வீர ருந்தான்
     அங்காடி இடத்தைக் காட்ட
நுழைந்தவர் கடைகள் தம்மை
     நோக்கிட லானார் நெஞ்சே


தாமும்இந் நகரந் தன்னில்
     தகுந்தஓர் முதலைக் கொண்டே
ஆம்!தொழில் செய்வோம் என்றே
     அவர்மனம் துணிந்தார் நெஞ்சே


வர்த்தகம் செய்வ தற்கோ
     வாய்த்தகைப் பொருளொன் றில்லை ;
இத்தகை வறுமை யெண்ணி
     இருந்துயர் அடந்தார் நெஞ்சே

 

இல்லாத நிலையில் உருக்குச்
     சட்டைநம் கையில் இங்கே
உள்ளதே என்றே எண்ணி
     உவந்திட லானார் நெஞ்சே


அப்பெரும் சட்டை தன்னை
     விற்றிட அவரும் கொஞ்சம்
கைப்பொருள் கொண்டே அங்கு
     கொள்முதல் செய்தார் நெஞ்சே


கொண்டஅப் பொருளை விற்கக்
     கருதியே அவரும் தூக்கிக்
கொண்டுமே விற்றார்; கொஞ்சம்
     லாபத்தைக் கண்டார் நெஞ்சே


வந்தகைப் பொருளால் ஆங்கு
     வைத்தஅச் சட்டை தன்னைச்
சொந்தமாய் மீட்டுக் கொண்ட
     சோபிதம் என்னே நெஞ்சே

 

ஊதியம் நாளும் ஓங்க
     உற்றநற் பணிய நாளில்
பாதியில் செய்யும் பண்பைப்
     போற்றிட லானார் நெஞ்சே


புடவைகள் விற்கும் நல்ல
     புனிதமாம் வாணி பத்தில்
சுடர்முக அபுபக் கர்தான்
     சுகித்திட லானார் நெஞ்சே


உமரும்நல் உதுமா னுந்தான்
     உவந்துபே ரீச்சை விற்றே
அமைதியைக் கண்டா ரென்றால்
     அவரெழில் என்னே நெஞ்சே


மிகுபொருள் சேர்த்தோர் மீதம்
     மிகுந்ததை ஏழை கட்குத்
தகுந்தநல் உதவி யாகத்
     தந்திட லானார் நெஞ்சே

 

ஆயிரம் தொழில்செய் தாலும்
     அண்ணலின் மாண்பைக் காக்கும்
நேயத்தைப் போற்றி செய்து
     நெகிழ்ந்திட லானார் நெஞ்சே


அண்ணலார் விருப்பைக் கொண்டே
     அன்புடன் தொழில்கள் செய்தோர்
கண்ணியத் தோடு நல்ல
     களிப்பையும் பெற்றார் நெஞ்சே


தம்வழி ஏற்ற மக்கள்
     தருமத்தைப் போற்றி வாழ
விம்மித முற்றே வள்ளல்
     விளங்கிட லானார் நெஞ்சே


அகதிக ளாக வந்தே
     அருந்தொழில் செய்வோ ராலே
மிகமிக இன்பந் தன்னை
     மேல்நபி கண்டார் நெஞ்சே

 

மதினாவில் அமைந்த அந்த
     மாண்புறு பள்ளி தன்னில்
புதியநல் அன்புக் கூட்டம்
     பெருகக்கண் டாரே நெஞ்சே

தொழுகைக்குக் கூடும் மக்கள்
     தோளெல்லாம் ஒன்றாய் ஆக
கெழுதகை அன்பும் ஊன்ற
     கிளர்ந்திட லானார் நெஞ்சே


ஒற்றுமை யோடு மக்கள்
     உளம்மகிழ்ந் திடவே அண்ணல்
வெற்றிமேல் வெற்றி என்றே
     விளம்பிட லானார் நெஞ்சே


மதினாவாழ் மக்கள் எல்லாம்
     மனத்தினில், செய்கை தன்னில்
எதிலுமே ஒன்றாய் ஆகி
     எழில்கொள்வ தானார் நெஞ்சே