பக்கம் எண் :

47

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

யுத்தத்திற்கு வித்திட்டனர் மக்கத்துப் பகைவர்கள்

மதினாவில் குடிபு குந்த
     மாண்புடை வள்ளல் தூய்மை
இதயத்தால் செய்து வந்த
     இன்பணி பலவாம் நெஞ்சே


இஸ்லாத்தின் வளர்ச்சி தன்னை
     இன்புடன் கண்ட அண்ணல்
விஸ்வாச அன்பி யக்கம்
     வென்றதே என்றார் நெஞ்சே


யுத்தத்திற்கு வித்திட்டனர்
     மக்கத்துப் பகைவர்கள்

அண்ணல்தாம் அகன்ற பின்பே
     அளவிலாப் பகைமை கொண்டே
எண்ணத்தில் குறைஷி யர்தாம்
     ஏங்கிட லானார் நெஞ்சே


புகழ்பெற்றே அண்ணல் வாழும்
     புழுக்கத்தில் இதயம் சோர்ந்தே
அகமெலாம் கருக்க நின்ற
     அவலமும் என்னே நெஞ்சே

 

முகம்மதை வீழ்த்து தற்கு
     முனைந்துநாம் வீழ்ந்து விட்டோம்
மிகமிக இழிவென் றோதி
     மிகப்பலர் சோர்ந்தார் நெஞ்சே


முக்கியத் தலைவர் எல்லாம்
     முயற்சிகள் தோற்ற தென்றே
துக்கத்தில் வீழ்ந்து நின்ற
     துயரமும் சிறிதோ? நெஞ்சே


இப்படி யாக ஆங்கே
     இருந்தவர் எல்லாம் கூடி
எப்படி நாய கத்தை
     எதிர்ப்பதென் றுரைத்தார் நெஞ்சே


அப்பெரும் கூட்டத் தின்கண்
     ஆர்த்தஅவ் வபுஜ ஹில்தான்
செப்பரும் துன்பத் தோடு
     சினந்தெழ லானான் நெஞ்சே

 

அந்தஓர் நேரந் தன்னில்
     அபுஜஹில் இடத்தில் வந்தோன்
உந்தன்சிற் றப்பா வுக்கோ
     உயிரில்லை என்றான் நெஞ்சே

படுக்கையில் கிடக்கும் அன்னார்
     பரிதாப மாக உள்ளார்
வெடுக்கென எழுந்து நீங்கள்
     விரைக!என் றுரைத்தான் நெஞ்சே


அம்மொழி கேட்டோ ரெல்லாம்
     அபுஜஹில் வீட்டை நோக்கி
கும்பலாய்ச் சென்றே ஒன்றாய்க்
     கூடிட லானார் நெஞ்சே

அந்தநோ யாளி முன்பு
     அபுசுப்யான் போன்றோர் சூழ
வந்திட்ட *அபுஜ ஹில்தான்
     வருந்திட லானான் நெஞ்சே

* அபுஜஹில் - சரியான உச்சரிப்பு அபூஜஹல். அபுசுப்யான் - சரியான உச்சரிப்பு Aboo Sufyan


சிற்றப்பன் தேம்பித் தேம்பிச்
     சிந்திய நீரைக் கண்டு
மற்றவர் கேட்க, அன்னோன்
     வசனித்த தைக்கேள் நெஞ்சே


இறப்பிற்குப் பயந்து நானும்
     இப்படி அழுதேன் இல்லை ;
அறைகின்றேன் உண்மை தன்ைனை
     அதனைக்கேள் என்றான் நெஞ்சே


இத்தனை முயற்சி செய்தும்
     இன்னலே கண்டீர்; நான்தான்
சித்தத்தில் எண்ணி எண்ணி
     சிதைகின்றேன் என்றான் நெஞ்சே


ஓதிப்ப டிக்கா வண்ணம்
     உள்ளவர் முன்னம் உங்கள்
சாதனை எல்லாம் தோற்றல்
     சஞ்சலம் அன்றோ? என்றான்

 

முகம்மதின் நெறிதான் எங்கும்
     முழங்கினால் செய்வ தென்ன?
அகமதில் இதனை எண்ணி
     அழுகின்றேன் என்றான் நெஞ்சே


குறைஷியர் இதனைக் கேட்டே
     குருதியில் கோபம் பொங்க
அறைந்ததைக் கேட்பாய் அந்த
     ஆத்திரம் என்னே நெஞ்சே


அபுசுப்யான் எழுந்தி ருந்தே
     ஆருயிர் உள்ள மட்டும்
நபிமதம் சேரோம் என்றே
     நவின்றிட லானார் நெஞ்சே


அவர்மதம் பரவு தற்கிங்(கு)
     அணுவுமே இசையோ மென்றே
அவரவர் கொதித்தெ ழுந்தே
     ஆர்த்திட லானார் நெஞ்சே

 

மன்றத்தில் அவர்கள் எல்லாம்
     மகிழ்வுடன் ஒன்று கூடி
என்றைக்கு நாய கத்தை
     ஒழிப்போம்நாம் என்றார் நெஞ்சே


இறுதியில் அவர்கள் எல்லாம்
     இயற்றிய முடிவு தன்னை
உறுதியாய் நின்முன் இங்கண்
     உரைத்திடக் கேளாய் நெஞ்சே


ஆண்மையாய் அபுஜ ஹில்தான்
     அவையின்முன் நிமிர்ந்தெ ழுந்து
வேண்டும்நம் முடிவு தன்னை
     விளக்குவோம் என்றான் நெஞ்சே


மதினாவாழ் நபியை மக்கள்
     அனுப்பிட வேண்டும் ; இன்றேல்
எதிர்த்துமே போர்தொ டுப்போம்
     என்றிட லானான் நெஞ்சே

 

இவைகளைக் கடிதம் மூலம்
     எழுதியே அனுப்பி வைத்தே
அவர்களைப் பார்ப்போம் என்றான் ;
     அனைவரும் சென்றார் நெஞ்சே


கடிதத்தை அனுப்பி வைத்தான்
     கணக்கிலா ஆர்வத் தோடு
துடித்தெழும் நிலையில் ஆங்கே
     தூதும்சென் றவே நெஞ்சே


மதினாவாழ் தலைவர் எல்லாம்
     மறுபதில் கொடுக்க வில்லை
மதித்திலர் அவர்கள் என்றே
     மனம்புகைந் தானே நெஞ்சே


முகம்மதைத் தருவோ மென்றே
     மொழிந்திடு வாரென் றெண்ணி
அகமெலாம் தீயாய் மாறி
     அலைந்திட லானான் நெஞ்சே

 

பறைகொட்டித் தலைவர் தம்மை
     பாங்குடன் அழைக்க ‘கஅபா’
நிறைந்திட அபுஜ ஹில்தான்
     நெருப்பென ஆனான் நெஞ்சே


குவிந்தஅம் மக்கள் எல்லாம்
     கூடினர் கோபங் கொண்டே
அவிந்திடும் மதினா என்றே
     ஆர்த்திட லானார் நெஞ்சே


நொடியினில் அவ்வி டத்தில்
     நோக்கவே அச்சம் ஊட்டும்
படையைப்போல் பகைவர் சேர்ந்த
     பயங்கரம் என்னே நெஞ்சே


கனல் கக்கும் கண்க ளோடு
     கண்டஅம் மக்க ளின்பால்
தினவெழு அபுஜ ஹில்தான்.
     தீக்கக்க லானான் நெஞ்சே

 

மக்காவைக் காக்க அந்த
     முகம்மதைத் தொலைக்க வேண்டும்
மக்களே! பொருள்கொ டுத்தே
     மகிழுக என்றான் நெஞ்சே


வீட்டுக்கு வீடு சென்று
     வீரர்கள் வருவீ ரென்றே
நாட்டமாய் குறைஷி யர்தாம்
     நவின்றிட லானார் நெஞ்சே


கண்ணின்றி யுத்தம் செய்ய
     கருவிகள் சேர்க்க லானார் ;
விண்டிட முடியா வண்ணம்
     வீரர்கள் சேர்த்தார் நெஞ்சே


ஆயுதம் குவித்த தோடு
     அவைகளைத் தீட்டு தற்கும்
ஓயுதல் இல்லா வண்ணம்
     உழைத்திட லானார் நெஞ்சே

 

அபுஜஹி லோடு அந்த
     அபுசுப்யான் மனைவி “ஹிந்தா”
குபுகுபு என்றே மக்காள்
     குவிக!என் றாளே நெஞ்சே


விழி!எழு! வீரத் தோழ!
     வீழ்த்துவோம் நபியை என்றே
பழியுரு வான அந்தப்
     பாவைகூ விட்டாள் நெஞ்சே


முரசுகள் இடியைப் போன்றே
     முழங்கின; மக்கள் எல்லாம்
சரசர வெனவே வந்து
     சார்ந்திட லானார் நெஞ்சே


போருக்குக் கோலம் பூண்டோர்
     பொறுக்கொணா கோபம் கொண்டார்
ஆருக்கும் அஞ்சா வண்ணம்
     ஆர்ப்பாட்டம் செய்தார் நெஞ்சே

 

பயங்கர ஒலிகள் எங்கும்
     படைகளின் ஆர்ப்பு வீரர்
புயங்களைத் தூக்கிச் சென்ற
     புதுமையும் என்னே நெஞ்சே


குதிரைகள் குதித்துச் சென்ற
     கோலத்தைச் சொல்வ தாமோ ?
அதிரொலிக் கிடையில் வீரர்
     அணிகொண்ட தென்னே நெஞ்சே


வெறிகொண்ட நிலையில் அன்னார்
     விரைந்திட லானார் நல்ல
குறியற்ற அவர்கள் கொண்ட
     குதிப்பதும் பெரிதே நெஞ்சே


மக்கா போர்க் களமாய் ஆக
     மனத்தினில் பகைமை கொண்டே
மிக்கவும் கோபத் தோடு
     குறைஷியர் நின்றார் நெஞ்சே

 

இவைகளைக் கண்டு கண்டு
     இதயத்தில் முனைப்பு பொங்க
எவர்நம்மை வெல்வார் என்றே
     எண்ணிட லானார் நெஞ்சே


அபுஜஹில் உள்ளந் தன்னில்
     ஆனந்தம் அதிகம் ஆமாம்
நபியுமே அழிவார் என்றே
     நம்பிட லானான் நெஞ்சே


அதிர்ந்தன முரசம்; வீரர்
     ஆர்த்தனர்; கடலைப்போல
எதிர்ப்படும் பகையை நோக்கி
     எழுந்திட லானார் நெஞ்சே


ஆர்ப்பாட்ட நடையி னோடு
     அப்படை மதினம் நோக்கி
போர்ப்பாட்டு முழக்கத் தோடு
     புறப்பட்ட தென்னே நெஞ்சே

 

மாநபி வாழ்வில் மாபெரும் திருப்பம்

படைவரும் செய்தி தன்னைப்
     பார்த்த தம் ஒற்றர் மூலம்
கொடைவள்ளல் நாய கந்தான்
     குறிப்பறிந் திட்டார் நெஞ்சே


தோழர்கள் தமைய ழைத்தார்
     துயரிதைத் தீர்ப்ப தற்கே
ஆழ்ந்தஓர் திட்டம் தேவை
     என்றிட லானார் நெஞ்சே


உரமிகு முஸ்லிம் மக்கள்
     உவப்புடன் அண்ண லின்கீழ்
வரும்துயர் தீர்ப்ப தற்கு
     யோசனை செய்தார் நெஞ்சே


அண்ணல்அக் கூட்டந் தன்னில்
     அன்புடன் எடுத் ரைத்த
வண்மொழி தன்னை இங்கு
     வடிக்கின்றேன் கேளாய் நெஞ்சே

 

நல்லதை எடுத்துச் சொல்ல
     நானிங்கு வந்தேன் மற்றும்
அல்லல்கள் இல்லா வண்ணம்
     அழைத்தனன் என்றார் நெஞ்சே


ஆத்மார்த்த இன்பை மக்கள்
     அடைந்திட வேண்டி இங்கு
சாத்வீக மறைகொ ணர்ந்தேன்
     சாட்சிநீர் என்றார் நெஞ்சே


அமைதியை, அன்பை, நல்ல
     ஆற்றலை வேண்டும் நம்மை
அமைதியில் லாத வண்ணம்
     ஆக்கினார் என்றார் நெஞ்சே


மக்களைத் திருத்த வேண்டி
     மனங்கொண்ட நம்மை அந்த
மக்கத்துப் பகைவர் கள்தாம்
     வதைக்கின்றார் என்றார் நெஞ்சே

 


அறியாமைக் குழியில் வீழ்ந்தே
     அல்லலுள் ஆழ்ந்து நின்று
தெரியாமல் நம்மை வீழ்த்தத்
     திரிகின்றார் என்றார் நெஞ்சே


நமையெலாம் அழிப்ப தற்கே
     நஞ்சுடை வஞ்சங் கொண்டே
மமதைசேர் நெஞ்சத் தோடு
     வருகின்றார் என்றார் நெஞ்சே


இன்னும்சின் னாளுக் குள்ளே
     இங்கவர் வந் சேர்வர்
பின்னர்நாம் வீழ்வ தாமோ ?
     பேசுக! என்றார் நெஞ்சே


தோழர்கள் கருத்துரை வழங்கினர்

அண்ணலிவ் வாறு கூற
     அமர்ந்திருந் தோர்க ளெல்லாம்
எண்ணமாம் சிறக டித்தே
     எங்கெங்கோ சென்றார் நெஞ்சே

 

அமைதியின் இடயே ஆங்கே
     அலியவர் எழுந்து பேச
இமையாது பெருமா னாரும்
     இன்புடன் கேட்டார் நெஞ்சே


தாயகம் துறந்த பின்னும்
     தருமமே இன்றி வந்தால்
ஓய்வதோ? எதிர்ப்போ மென்றே
     அலியவர் உரைத்தார் நெஞ்சே


பொங்கிடும் வீரத் தோடு
     போருரை யாற்றக் கேட்டே
அங்குளார் அனைவர் தாமும்
     ஆவேசங் கொண்டார் நெஞ்சே


அலியவர் பேச்சில் கொண்ட
     ஆவேசம் பொங்கி யோட
வலியுள அபுபக் கர்தான்
     வடித்ததைக் கேளாய் நெஞ்சே

 

போர்! என்றால் மக்கா வுக்குள்
     போர்செய்தி ருப்போ மன்றோ?
போர் வேண்டாம்! என்றே ஆங்கே
     புகன்றிட லானார் நெஞ்சே


உமரவர் கோபங் கொண்டே
     உண்மையில் அவர்கள் வந்தால்
சமர்செய்வோம்; வெல்வோம் என்று
     சாற்றிட லானார் நெஞ்சே


நம்முடைக் கொள்கை தன்னில்
     நாமூன்றி நிற்கக் கண்டே
செம்மனம் இல்லா வண்ணம்
     சீறினார் என்றார் நெஞ்சே


நம்முடைத் தோழர் பல்லோர்
     நல்லுயிர் தனைக்கு டித்தும்
இம்மியும் இரங்கா வண்ணம்
     எதிர்க்கின்றார் என்றார் நெஞ்சே

 

பொறுமையின் எல்லை கண்டே
     பொற்புடன் வாழும் நம்மை
மருளகம் எதிர்ப்ப தற்கு
     வருவதோ? என்றார் நெஞ்சே


மக்கத்தை விட்டு நாமே
     மதினாவைக் கொண்ட பின்னும்
துக்கத்தை ஊட்டும் வண்ணம்
     தொடர்வதோ? என்றார் நெஞ்சே


பிறந்தஊர் தனையி ழந்தும்
     பெருமையை இழந்த பின்னும்
அறமதைக் கொல்வோர்க் காக
     அமைவதோ? என்றார் நெஞ்சே


தற்காப்பில் லாத வாழ்க்கை
     தரணியில் எதற்கும் இல்லை ;
தற்காத்துக் கொள்வ தற்குத்
     தயக்கம்ஏன் ? என்றார் நெஞ்சே

 

இறுதியில் அபுபக் கர்தான்
     இறைதூதர் ஆணை யிட்டால்
உறுதியாய்ப் போரில் மாள
     உள்ளேனென் றாரே நெஞ்சே


நாயகம் முகத்தில் மெல்ல
     நகையது மலர, நோக்கி
தூயதம் எண்ணம் தன்னைத்
     தொடுத்துரைத் திட்டார் நெஞ்சே


உண்மையின் வழியில் நாமே
     உள்ளதால் பகைவர் கொள்ளும்
வன்மத்திற் கஞ்சி இங்கு
     வாழ்வமோ? என்றார் நெஞ்சே


அங்குள்ள தலைவர், எல்லாம்
     ஆர்வத்தால் ஒன்று பட்டே
இங்குமைப் பிரியோம் என்றே
     இயம்பிட லானார் நெஞ்சே

இறை கட்டளை பிறந்தது

இவ்வாறே இருக்குங் காலை
     இறைவள்ளல் நடுந டுங்க
அவ்விறை வசனம் தந்த
     அதிசயம் என்னே நெஞ்சே


வானவர் ஜிப்ரீல் வந்தே
     வள்ளல்பால் மறைய ளித்துப்
போனபின் நாய கந்தான்
     புகன்றதைக் கேளாய் நெஞ்சே


அநியாயம் தன்னில் சிக்கி
     அயர்ந்தநாம் பகையை வீழ்த்த
அனுமதி என்னும் வாக்கை
     அறைகின்றேன் என்றார் நெஞ்சே


“உங்களைப் பகைவர் தாக்கின்
     உங்களைக் காத்துக் கொள்ள
செங்களம் சேர்வீர்” என்ற
     செம்மறை சொன்னார் நெஞ்சே

 

வாளேந்தும் போது நீவிர்
     வரம்புடன் நிற்க ! மீறின்
ஆள்கின்றோன் அன்பெ வர்க்கும்
     அமையாதென் றுரைத்தார் நெஞ்சே


இறைவனின் ‘இசைவு’ தன்னை
     இன்னபி எடுத்து ரைத்து
நிறைவுறும் மகிழ்வு கொண்டே
     நின்றிட லானார் நெஞ்சே


தயைமிகு வள்ள லுந்தான்
     தற்காப்பை ஏற்க லானார்
இயைபுறு நண்பர் கள்பால்
     எடுத்துரைத் தாரே நெஞ்சே


நம்மைநாம் பாது காக்க
     நாம்போரில் இறங்க லானோம்
இம்மியும் பகைவர் நெஞ்சம்
     இரங்கிடா தென்றார் நெஞ்சே