பக்கம் எண் :

48

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

புனித நகர் காத்த போரியல் தந்திரி

அன்புறு வள்ளல் வாழ்வில்
    அமைந்தஒர் திருப்பம் தன்னை
இன்புடன் விளக்கிக் காட்டி
    இயம்புவன் கேளாய் நெஞ்சே


பொறுமையின் உருவ மாகிப்
    பொலிந்த நம் அண்ணல் இன்று
செறுபகை எதிர்த்து நிற்கத்
    திருவுளம் கொண்டார் நெஞ்சே


இறைவனின் ஆட்சி தன்னை
    இப்புவி தன்னில் நாட்ட
நிறைவுறு வள்ள லாரும்
    நின்றிட லானார் நெஞ்சே


அதர்மத்தின் கொடுமை தன்னை
    அவனியில் ஒட்டு தற்கே
இதயத்தில் துணிவு கொண்டு
    இறங்கிட லானார் நெஞ்சே

 

தன்வழிப் பட்டோர் தம்மைத்
    தக்கநல் முறையில் காக்க
வன்முறைப் பகைவர் நோக்கி
    வாளேந்த லானார் நெஞ்சே


பகைவர்கள் சூழ்ச்சி தன்னைப்
    பாழ்படச் செய்தே நல்ல
தகைமைசேர் தலைவ ராகச்
    சமைந்திட லானார் நெஞ்சே


அறத்தினைக் காக்கும் நல்ல
    அரசியல் தலைவ ராகி
மறத்தினை வீழ்த்த வந்த
    மாண்பைஎன் சொல்வேன்! நெஞ்சே


அருள்உரு வான அண்ணல்
    அமர்க்களத் தலைவ ராகி
மருள்உரு மாயும் மார்க்கம்
    மாந்தர்க்குத் தருவ தானார்

 

வேண்டிய பொழுதில் வேண்டும்
    வியத்தகு மதியைக் கொண்டே
தூண்டிய விளக்கைப் போலத்
    துலங்கிட லானார் நெஞ்சே


பலத்தினைக் காட்டும் போது
    பலமதாய் நிற்பார்; அன்பின்
நலத்தினைக் காட்டும் போதோ
    நன்கனி யாவார் நெஞ்சே


எண்ணரும் ஆற்ற லோடு
    எஃகுளம் கொண்டே அண்ணல்
கண்ணுறு இமையைப் போலக்
    காத்திட லானார் நெஞ்சே


மதினாவில் வாழும் மக்கள்
    மதிப்பென்ன ? அறிக ! என்றே
அதிநுட்பக் கணக்கெ டுக்க
    அறிஞர்பால் சொன்னார் நெஞ்சே

 

மாமதி உடைய நால்வர்
    *மக்களின் குறிப்பெ டுத்தே
மாமண மலராம் அண்ணல்
    மணிக்கரம் சேர்த்தார் நெஞ்சே

* மக்கள் குறிப்பு -Census


கணக்கினை அண்ணல் கண்டே
    களித்திட லானார் பின்பு
இணக்கமாய் நகரைப் பற்றி
    எண்ணிட லானார் நெஞ்சே


மதினாவின் *வரைப டத்தை
    மற்றும்சில் லோர் வரைந்தார்
அதனதன் எல்லை மற்ற
    அமைப்பினைக் கண்டார் நெஞ்சே

* வரைபடம் - பெருமானார் விருப்பினுக்கேற்ப மதீனாவின்
அமைப்புப் படத்தை(Map) தோழர்கள் ‘குர்தூம்’ என்னும்
எகிப்தியப் பகுதியில் தயாரிக்கப் பெற்ற தோலில் வரைந்து
அளித்தனர்.


மக்களின் தொகையை மற்றும்
    மாநகர் அமைப்பு தன்னை
அக்கணம் கூர்ந்து நோக்கி
    அகமிசை வைத்தார் நெஞ்சே


தொல்லைகள் சூழு முன்னே
    துடிப்புடன் இருந்து சொந்த
*எல்லை காப் பதற்கே ஆங்கே
    எண்ணிட லானார் நெஞ்சே

* எல்லை காப்பு - Border Protection.


அந்நகர்த் திசைகள் தோறும்
    அடையாளத் தூண்கள் நட்டே
எந்நேர மதிலும் காவல்
    இருந்திடச் செய்தார் நெஞ்சே


போரானால் முடியா தென்றே
    போருக்கு முன்னர் நல்ல
பேராயத் தங்கள் தம்மைப்
    பெருக்கிட லானார் நெஞ்சே


முரண்படு பகைவர் தம்பால்
    முழிப்புடன் இருத்தற் கென்றே
இரவெலாம் கண்வி ழித்தே
    இருந்திட லானார் நெஞ்சே


தான்தூங்கச் செல்லும் போதும்
    தக்கவர் தமைநி றுத்திக்
காண்க!என் றோதிச் செல்லும்
    கவனிப்பும் என்னே நெஞ்சே


குறைஷியர் எல்லாம் கூடி
    கொட்டிடும் முரசி னோடு
விரைகின்றார் என்ப தைநம்
    வேந்தரும் அறிந்தார் நெஞ்சே


செய்தியைக் கேட்ட அண்ணல்
    சிந்தனை செய்த பின்னர்
உய்வினைக் கண்ட தைப்போல்
    ஒளிமுகங் கொண்டார் நெஞ்சே


நகரத்தின் உள்ளி ருந்தே
    நாம்சண்டை செய்தல் தீதே ;
நகரத்தின் வெளியே செல்லல்
    நன்றெனக் கண்டார் நெஞ்சே

 

முன்னேற்பா டாக அண்ணல்
    மதினாவின் முன்பு செல்ல-
அன்புடன் முஸ்லிம் வீரர்
    அனைவரும் சேர்ந்தார் நெஞ்சே

படைகளை அழைத்துக் கொண்டு
    *பத்ரென்னும் இடத்தை நோக்கி
அடலரி ஏறு போல
    அண்ணலும் சென்றார் நெஞ்சே

*பத்ர்-(Badr)-பரந்த வெளிகளைக் கொண்ட பள்ளத்தாக்கான ஒரு சிறிய ஊர். மதீனா நகரத்திலிருந்து சிரியா போகும் வழியில்-80 மைல் தொலைவில்-உள்ளது.

படைகள்தாம் எழுந்த வேளை
    பரிவுடன் மழையும் பெய்ய
உடன் நீரைச் சேக ரிக்க
    உரைத்திட லானார் நெஞ்சே


படைகளின் பசியைப் போக்கி
    பக்கத்தில் இருந்தே அண்ணல்
உடல்நலங் கருதி நீங்கள்
    உறங்குக! என்றார் நெஞ்சே


வளமிகு வாழ்வை நல்க
    வந்தநம் வள்ளல் ஆங்கே
தளபதி யாகி நின்ற
    தன்மையும் என்னே நெஞ்சே


தன்னுயிர் போன்றே ஆங்கே
    தமையடுத் துள்ளோர் தம்மை
எண்ணியே காத்து நின்ற
    எழிலதும் பெரிதே நெஞ்சே


இமைக்காத நிலையில் அந்த
    இரவினில் காத்தி ருந்த
அமைதியை, ஆண்மை தன்னை
    அறைந்திடல் எளிதோ? நெஞ்சே


புரவியில் அமர்ந்த வண்ணம்
    புனிதனை வழுத்திக் கொண்டே
இரவெலாம் அண்ணல் நின்ற
    இருஞ்செயல் என்னே நெஞ்சே

 

குறைஷியர் எல்லாம் ஆங்கே
    கொஞ்சமும் தீர்க்க மின்றி,
முறையின்றி, திட்ட மின்றி
    மூர்க்கமாய் நின்றார் நெஞ்சே


குறைஷியர் தொகையை இங்கு
    கூறவும் வேண்டு மாமோ?
நிறைந்தஓர் ஆயி ரம்பேர்
    நின்றிட லானார் நெஞ்சே


இருக்கின்றோம் ஆயி ரம்பேர்
    என்றஓர் எண்ணந் தன்னில்
இரவெலாம் அவர்கள் கொண்ட
    இன்பமும் என்னே நெஞ்சே


ஆடியும் மதுவை உண்டும்
    ஆர்த்துமே அடைவே இன்றி
பாடியும் அவர்கள் கொண்ட
    பரவசம் என்னே நெஞ்சே

 

உறங்கவும் எண்ணா வண்ணம்
    உல்லாச மதிலே நீந்தி
இறங்கிடும் நிலையில் நின்ற
    இழிவதும் என்னே நெஞ்சே


தேகத்தின் நலத்தைக் கூடத்
    தேடாமல் இருந்தோ ருள்ளே
தாகத்தால் சிலர்தாம் ஆங்கே
    தவித்திட லானார் நெஞ்சே


நீரினை வேண்டி ஆங்கே
    நெடுநேரம் அலைந்தே எங்கும்
நீரில்லா நிலையால் சோர்ந்து
    நின்றிட லானார் நெஞ்சே


அவருளே ஒருவன் தோன்றி
    அன்புடன் சொல்வேன் என்றே
உவகையால் எடுத்து ரைத்த
    உரையதைக் கேளாய் நெஞ்சே

 

முகம்மதின் தோழர் கள்பால்
    முயன்றுநாம் பார்த்தால் ஆங்கே
மிகவும்நீர் இருக்கும் என்று
    விளம்பிட லானான் நெஞ்சே


அபுஜஹில் உடன் எழுந்து,
    “அவர்களின் பகைவ ரானோம்;
உபகாரம் செய்வா ராமோ?”
    என்றவன் உரைத்தான் நெஞ்சே

“அருளினைப் பொழிய வல்ல
    அன்புறு முஹம்ம துந்தான்
தருவதில் தயங்கார்” என்றே
    ஒருவன்சொல் தந்தான் நெஞ்சே


முயலுக; முயன்ற போதும்
    முகம்மது நமக்க ளித்தல்
ஐயமே-என்றே ஆங்கே
    அபுஜஹில் சொன்னான் நெஞ்சே

 

அம்மொழி கேட்ட சில்லோர்
    ஆர்வமாய் பெருமா னார்பால்
விம்மித மாக வந்த
    விந்தையும் என்னே நெஞ்சே


தாகத்தால் தவிக்க லானோம்
    தயைகூர்ந்து தண்ணீர் கொள்ள
மேகத்தை அனையீர்! ஆணை
    பிறப்பிப்பீர்! என்றார் நெஞ்சே


குறைஷியர் சிலர்தாம் தண்ணீர்
    கொள்ளவே வினவும் போது
நிறைவுடை நாய கத்தை
    நண்பர்கள் சூழ்ந்தார் நெஞ்சே


ஒருவரின் முகத்தை மற்றோர்
    உருக்கமாய்ப் பார்த்த வண்ணம்
வரும்பதில் எதுவோ? என்று
    வாய்மூடி நின்றார் நெஞ்சே

 

தன்னையும் வழங்க வல்ல
    தயைமிகு அண்ணல் ஆங்கு
புன்னகை பூத்த வண்ணம்
    புகன்றதைக் கேளாய் நெஞ்சே


இறைவன்தான் அளித்த வற்றை
    இல்லைஎன் பேனோ? அன்பீர்!
நிறைய நீர் கொள்க! என்றே
    உரைத்திட லானார் நெஞ்சே


குறைஷியர் அதனைக் கேட்டே
    கொண்டஓர் இன்பம் என்னே
நிறையநீர் உண்ட தோடு
    மொண்டுசென் றிட்டார் நெஞ்சே

நீரினை அறித்த தோடு
    நேசத்தில் சிறந்த அண்ணல்
சீரினை எடுத்து ரைத்தே
    “சிந்திப்பீர்!” என்றார் நெஞ்சே

 

அம்மொழி கேட்ட போது
    அபுஜஹில் சீற்றங் கொண்டே
எம்மொழி சொன்னீர்? என்றே
    எழுந்திட லானான் நெஞ்சே


போரிட வந்தே, அன்னார்
    புகழை,நற் கொடையை, அன்பை,
சீரினைப் புகழ்ந்து நிற்றல்
    சிறப்பதோ? என்றான் நெஞ்சே


பகைகொண்ட முகம்ம தைத்தான்
    பாங்கின்றிப் போற்றி அன்னார்
தகைமையை எடுத்து ரைக்கும்
    தருணம்தான் இவோ? என்றான்


எதிரியாய் நிற்போர் தம்மை
    ஏத்தியே புகழ்வ தாமோ?
உதிரத்தை அருந்து தற்கே
    ஒன்றாவீர்! என்றான் நெஞ்சே

 

அணிவகுத் திடவே ஆங்கே
    அபுஜஹில் ஆணை நல்க
அணி,அணி யாக ஆங்கே
    அனைவரும் சேர்ந்தார் நெஞ்சே


முரசுகள் முகிலைப் போல
    முழங்கின; கோபங் கொண்ட
அரவெனக் குறைஷி யர்தாம்
    ஆர்த்தெழுந் தாரே நெஞ்சே


சத்தியம் பிரார்த்தனை புரிந்தது

விழித்தனர் முஸ்லிம் மக்கள்
    வெடித்தது முரசம்; வெள்ளிக்
கிழமையின் விடியற் காலை
    மலர்ந்திடக் கண்டார் நெஞ்சே


தளபதி நாய கம்தான்
    தலைவனை நெஞ்சில் வைத்து
வளமிலாப் பாலை தன்னில்
    வாழ்த்திட லானார் நெஞ்சே

 

இறைவா!நின் கருணை யின்றி
    எவ்வாறு வெல்வோம் ? என்றே
முறையிட்ட வண்ணம் அண்ணல்.
    மொழிந்ததைக் கேளாய் நெஞ்சே


சிரசினைத் தரையில் வைத்துச்
    சிந்திய கண்ணீ ரோடு
முரசொலிக் கிடையில் அண்ணல்
    முதல்வனைத் தொழுதார் நெஞ்சே


உன்னையே தொழுது வாழும்
    உள்ளத்தைக் கொண்ட எங்கள்
முன்நிற்கும் பகையை வீழ்த்த
    முன்நிற்பாய்! என்றார் நெஞ்சே


படைபலம் ஏதும் இல்லை ;
    பேரருள் வெள்ள மாக
உடையோய்!நின் துணைதான் வெற்றி
    நல்காதோ? என்றார் நெஞ்சே

 

வாழ்வையும் உனக்க ளித்தோம்
    வாழ்வின்றி மரணம் வந்தால்
ஆழ்அன்பில் அதையும் ஈவோம்
    ஆண்டவா! என்றார் நெஞ்சே


நாட்டினை இழந்து, யாக்கை
    நலத்தையும் இழந்த எம்மை
வாட்டிடும் பகைமை யாலே
    வாள்கொண்டோம் என்றார் நெஞ்சே


தற்காத்துக் கொள்ளு கின்ற
    தன்மையில் வாளெடுத்தோம்
பொற்புறு இறைவா! எம்மைப்
    புரக்க!என் றாரே நெஞ்சே


பகைவர்கள் சூழ்ந்துள் ளார்கள்
    பறை கொட்டி எதிர்க்கின் றார்கள்
தொகையினில் குறைந்த நாங்கள்
    தொழுதோம்என் றுரைத்தார் நெஞ்சே

 

வாழ்கின்ற நிலைவந் தாலும்
    வாள்எடுக் கின்ற போரில்
வீழ்கின்ற நிலைவந் தாலும்
    வருந்தோம்என் றுரைத்தார் நெஞ்சே


வெற்றியைக் கொண்டால் நின்றன்
    வியன்நெறி அதனைக் காப்போம்
வெற்றியை அருள்வாய்! என்றே
    வேண்டிட லானார் நெஞ்சே


சத்தியம் தன்னை அந்தோ
    சூழ்ச்சியும் பகையும் வீழ்த்த
எத்தனிப் பதுவோ? என்றே
    இறைஞ்சிட லானார் நெஞ்சே


நெஞ்சம்நெக் குருகு வண்ணம்
    நின்றங்கு தொழுத மாண்பைச்
செஞ்சொல்லில் வடிப்ப தாமோ ?
    செப்பிடு வாயென் நெஞ்சே

 

ஆடைதான் நெகிழ்ந்து வீழ
    அண்ணலோ அதைம றந்து
பீடுடை இறையை வேண்டி
    பிரார்த்தித்த தென்னே நெஞ்சே


அசத்தியம் ஏளனம் செய்தது

குறைஷியர் படையில் அங்கு
    குதித்தனர் வீரர் எல்லாம்
அறைபறை கொட்ட ஆங்கே
    ஆர்த்தெழுந் தாரே நெஞ்சே


ஆர்த்தெழுந் திட்ட அந்த
    அலைகடல் படையி னுள்ளே
போர்வெறி அபுஜ ஹில்தான்
    பொங்கிட லானான் நெஞ்சே


வீங்கிடும் தோளு யர்த்தி
    வீரர்காள்! எழுமின்! அந்தப்
பாங்கிலாப் படையை வீழ்த்த
    எழும்! எழும்! என்றான் நெஞ்சே

 

ஆணையின் வண்ணம் ஆங்கே
    அணியணி யாக அந்தச்
சேனைதாம் நின்ற தைத்தான்
    செப்பிட லாமோ! நெஞ்சே


அதிகமாய்ப் படையைக் கொண்ட
    அபுஜஹில் நடுவில் வந்தே
எதிர்நிற்கும் படையை நோக்கி
    ஏளனம் செய்தான் நெஞ்சே


வீரர்கள் ஆயி ரம்பேர்
    விம்மித மாக நிற்கத்
தீரமாய் அபுஜ ஹில்தான்
    தினவுடன் நின்றான் நெஞ்சே


எழுநூறு ஒட்ட கங்கள்
    எழில்பரி நூறும் நிற்க
எழுந்திடும் ஆர்வத் தோடு
    ஏளனம் செய்தான் நெஞ்சே

 

முன்னூற்றிப் பதிமூன் றேபேர்
    முஸ்லிம்கள் முன்னே நிற்க
முன்னிலும் பன்ம டங்கு
    முழங்கிட லானான் நெஞ்சே

ஏழெட்டு வாட்க ளோடு
    எழுபது குதிரை நிற்க
வாழுமோ இவைகள் என்றே
    வருணிக்க லானான் நெஞ்சே


கந்தலை, கிழிசல் தன்னைக்
    காலிலே சுற்றிக் கொண்டு
வந்தஇப் படைதான் போரில்
    வாகைசூ டிடுமோ? என்றான்


தன்படை பெரிய தென்றும்
    தன்படை யை எதிர்த்தே
முன்நின்றால் முஸ்லிம் வீரர்
    முடிவார்என் றுரைத்தான் நெஞ்சே

 

ஆயுதம் எதுவும் இல்லை;
    அதிகமோ படைகள் இல்லை;
ஓயுமிப் படைதான் என்றே
    உறுமிட லானான் நெஞ்சே


அற்பமாய் நிற்கும் முஸ்லிம்
    அத்துணை பேரும் பாவம்
புற்பூண்டு போன்றே தேய்ந்து
    போவாரே என்றான் நெஞ்சே


வாளில்லை; உடைக ளில்லை;
    வலிமையும் உண்டோ? என்றே
கேலியாய் அவனும் ஆங்கே
    முழங்கிய தென்னே நெஞ்சே


புயலின்முன் பஞ்சைப் போலப்
    பறக்கும்இப் படைகள் என்றே
நயமிலா அபுஜ ஹில்தான்
    நவின்றிட லானான் நெஞ்சே

 

அபுஜஹில் சிரித்து நிற்க
    அனைவரும் சிரிக்க லானார்
அபயமாய் வருவார் என்றே
    ஆடிட லானார் நெஞ்சே


அடங்காத தருக்கி னோடே
    ஆயத்த மாமோ? என்றே
இடிஎன அபுஜ ஹில்தான்
    எதிர்வர லானான் நெஞ்சே


போர் நெறி புகன்ற பூலோக வள்ளலார்

அக்குரல் கேட்ட அண்ணல்
    அன்புறு தோழர் கள்முன்
பக்குவ மாகச் செய்த
    செயலினைப் பாராய் நெஞ்சே

 

தன்கரம் கொண்டே அண்ணல்
    தரையினில் கோடி ழுத்தே
நின்றதில் போர்செய் தல்தான்
    நீதிஎன் றுரைத்தார் நெஞ்சே

அன்பினைக் கொண்ட மக்காள்!
    அமர்க்களம் ஏற்க லானோம்
இன்புடன் என்வ ரம்பில்
    இயங்குக! என்றார் நெஞ்சே


தோழர்கள் சூழ அண்ணல்
    தூயவாய் மலர்ந்து ஆங்கே
ஆழன்பின் “புனித யுத்த”
    அறமதை உரைத்தார் நெஞ்சே


கூச்சல்கள் போட வேண்டாம்
    கோட்டினை மீற வேண்டாம்
ஏச்சுக்கள் எதுவும் வேண்டாம்
    என்றிட லானார் நெஞ்சே

 


எழும்பகைக் கூட்டந் தன்னில்
    இயலாத முதியோர், பெண்கள்,
குழந்தைகள் இருந்தா ரென்றால்
    கொல்லாதீர்! என்றார் நெஞ்சே

கன்றுகள் கால்ந டைகள்
    கண்டிடு வீர்கள் என்றால்
ஒன்றையும் மாய்க்க வேண்டாம்
    என்றவர் உரைத்தார் நெஞ்சே

 


பொநலக் கேணி, சோலை
    போன்றஎப் பொருளுக் கும்நீர்
விதிமுறை தவறித் தீங்கு
    விளைத்திடீர் என்றார் நெஞ்சே


விளைநிலத் தையும் நீவிர்
    வீணாக்கக் கூடா தென்றே
விளம்பிய மாண்பும் என்னே!
    விளங்கிக்கொள் வாயென் நெஞ்சே

அடுத்தவர் உருக்க மாக
    ஆற்றிய உரைப்பெ ருக்கைத்
தொடுத்துநான் தருவேன் நெஞ்சே
    தொடர்பொருள் பாராய்! நெஞ்சே


குறைஷியர் தாக்கு முன்னம்
    கோபத்தால் நம்மில் யாரும்
விரைந்துமே தாக்கி வீழ்த்த
    வேண்டாமென் றுரைத்தார் நெஞ்சே

 


அரபதன் வழக்கம் போல
    அவர்களே முன்கூ றட்டும்
இறைவனின் துணையால் நாமும்
    இறங்குவோம் என்றார் நெஞ்சே


அண்ணலாரின் போர் நெறியினைக் கண்ட அன்புத் தோழர்கள் அதிசயித்து நின்றனர்.

தூதர்தாம் உரைத்த வற்றைத்
    தோழர்கள் கூர்ந்து கேட்டு,
நீதத்தைக் கண்டோம் - என்றே
    வியப்புடன் நின்றார் நெஞ்சே


அண்ணலின் வழியில் நின்றே
    ஆற்றுவோம் கடமை என்றே
எண்ணியே வீரர் எல்லாம்
    எழுச்சியைக் கொண்டார் நெஞ்சே

 

தற்காப்புப் போரில் கூட
    தலைவர்நம் நபிகள் நாதர்
பொற்புறு நெறியை ஏந்தும்
    பொலிவினைக் கண்டார் நெஞ்சே


கண்டஅவ் வீரர் எல்லாம்
    களியுடன் தீரங் கொண்டே
அண்ணலின் ஆணைக் காக
    ஆர்வமாய் நின்றார் நெஞ்சே


போரினில் மாய்ந்த போதும்
    புகழுண்டாம் சுவனில் என்றே
நேர்மையாய் எண்ணி ஆங்கே
    நின்றிட லானார் நெஞ்சே


நம்படை குறைந்த தேனும்
    நாமொன்றாய் நின்றே அந்த
வெம்பகை ஒழிப்போம் என்றே
    வீரர்கள் நின்றார் நெஞ்சே

 

உயிர்களை மதியா வண்ணம்
    ஒன்றித்தே போர்செய் வோம்நாம்
பயமில்லை என்றே அன்னார்
    பலமுடன் நின்றார் நெஞ்சே


சீர்மிகு அண்ணல் சொன்ன
    சிறப்புறு மொழியின் வண்ணம்
ஆர்வமாய்ப் போர்செய் யத்தான்
    ஆயத்த மானார் நெஞ்சே