பக்கம் எண் :

49

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

பத்ருப் போர்க் களம்

அண்ணலின் அணிவ குப்பை
    அபுஜஹில் பார்த்துப் பார்த்தே
எண்ணரும் வீரர் தாமோ?
    என்றிட லானான் நெஞ்சே


இருப்பதோ சிலரே இங்கு,
    இதற்கும் ஒர்அணிவ குப்போ!
வெறும்படை வீழும் என்றே
    விளம்பிட லானான் நெஞ்சே

தமரென நின்றோ ருள்ளே
    தக்கதோர் வீர னைத்தான்
அமர்க்களம் அதில் குதிக்க
    ஆணைதான் இட்டான் நெஞ்சே


‘ஆமிர் ஹல் ரமி’-என் றோதும்
    ஆண்மைசேர் வீர னுந்தான்
ஆம்!அங்கே குதித்து நின்றே
    அழைத்திட லானான் நெஞ்சே

 


அறைகூவல் தன்னைக் கேட்டே
    அண்ணலின் படையில் உள்ள
நிறைபல ‘மஹ்ஜ ஆ’-தான்
    நேர்வந்து நின்றார் நெஞ்சே


இருவரும் பொருத லானார்
    இருவரில் எவர்தான் வெற்றி
பெறுவரோ? என்றே மற்றோர்
    பெருவேட்கை கொண்டார் நெஞ்சே

இறுதியில் நபியின் தோழர்
    இன்னுயிர் பிரிந்த போது
குறைஷியர் கூட்டம் கொண்ட
    குதிப்பதும் சிறிதோ ? நெஞ்சே

குதித்திட லானார்; கைகள்
    கொட்டிட லானார்; மண்ணை
மிதித்தெழ லானார் அந்த
    மமதையும் என்னே நெஞ்சே

 

அண்ணலின் பக்கம் சூழ்ந்த
    அமைதியின் பெருமை என்னே!
கண்ணீரில் மொழிகள் பேசிக்
    கட்டுண்டு நின்றார் நெஞ்சே

ஆயினும் தம்பால் உள்ள
    அன்புறு வீரர் தானே
போயினர்! அதுவும் நன்றே
    என்றண்ணல் புகன்றார் நெஞ்சே

முதலிலே அவர்தாம் வந்தார்
    முதலிலே நமையி ழந்தோம்
இதயத்தில் களிகொள் ளுங்கள்
    என்றிட லானார் நெஞ்சே


இறைவா!உன் துணையைக் கொண்டே
    இங்குயாம் போர்தொ டுத்தோம்
நிறைந்தஇவ் வனமே சான்றாய்
    நிற்கும்என் றுரைத்தார் நெஞ்சே

 


இவ்வாறே அண்ண லார்தாம்
    இறைவனை வழுத்தி நிற்க
அவ்வேளை அவர்கள் எல்லாம்
    அமர்க்களம் புகுந்தார் நெஞ்சே


தோளோடு தோள்தான் மோத
    தொடங்கிட லானார் போரை
வாளொடு வாள்தான் மோதும்
    வனப்பதும் என்னே நெஞ்சே

 

வெள்ளங்கள் கலந்த தைப்போல்
    வீரர்கள் சேர்வ தானார்
உள்ளத்தை வாட்டும் போரின்
    உக்ரமும் என்னே நெஞ்சே


மளமள என்றே மாற்றார்
    மடையிலா வெள்ளம் போலப்
பளபள என்னும் வாளால்
    பாய்ந்துபோ ரிட்டார் நெஞ்சே


குறைஷியர் சேனைக் கெல்லாம்
    தலைவனாய்க் கொள்ளும் அந்த
நிறையபல ‘உத்பா’ வந்த
    நிகழ்ச்சியைக் கேளாய் நெஞ்சே


தீக்கோழி இறக்கை தன்னைக்
    தேகத்தில் கட்டிக் கொண்டு
பார்க்கவே அஞ்சும் வண்ணம்
    பாய்ந்துவந் தானே நெஞ்சே

 

பயங்கர மாக ஆங்கே
    பாய்ந்தனன் உத்பா வீரன்
புயங்களைத் தூக்கித் தூக்கிப்
    போரிட்ட தென்னே நெஞ்சே


தனயனுக் கெதிர் தந்தையும்
    தந்தைக் கெதிர் தனயனும்

தந்தையார் அபுபக் கர்தாம்
    தவத்தினின் பயனாய் ஈன்ற
மைந்தனை நோக்கி ஆங்கே
    வாள்வீச லானார் நெஞ்சே


தம்கடன் பெரிய தென்று
    தனயனாம் ஹுதைபா வுந்தான்
அம்பினை அவர்தந் தைபால்
    விடுத்ததும் அரிதே நெஞ்சே


உமரவர் மாமன் என்ற
    உறவையும் பாரா வண்ணம்
சமர்க்களம் புகுந்து நின்ற
    சத்தியம் என்னே நெஞ்சே

 


இத்தகைத் தோழர் கள்தாம்
    இறைவழிப் போர்பு ரிந்த
சத்திய நிலையை இங்கு
    சாற்றிடல் எளிதோ? நெஞ்சே


அபிமான மாக ஆங்கே
    அறச்சமர் புரிந்த போது
உபைதாஎன் றோதும் முஸ்லிம்
    உடல்சோர்ந்து வீழ்ந்தார் நெஞ்சே


குணமிகு உபைதா ஆங்கே
    குற்றுயி ராக வீழ
மனமதில் கலக்கங் கொண்ட
    அலியவர் வந்தார் நெஞ்சே


அலியவர் உபைதா வைத்தான்
    அண்ணல்முன் தூக்கி வந்த
வலிமையும் என்னே நெஞ்சே
    வாஞ்சையும் என்னே நெஞ்சே

 

உயிர்போகும் தருணம் தன்னில்
    ‘உபைதா’ தான் அண்ண லின்பால்
நயமுடன் பகர்ந்த தைத்தான்
    நவிலுவேன் கேளாய் நெஞ்சே


அண்ணலே! இஸ்லாம் மார்க்க
    அரும்பணிப் பேற்றை நானும்
திண்ணமாய்ப் பெற்றே னாமோ?
    தெரிவிப்பீர்! என்றார் நெஞ்சே


ஆமாம்! நீர் அல்லா ஹூவின்
    அரியதோர் அன்பைப் பெற்றீர்
ஆம்!என்று மடியில் வைத்தே
    அழுதிட லானார் நெஞ்சே


அம்மணி வாச கங்கள்
    அவருடைக் காதில் வீழ
விம்மித மாக மாண்ட
    விந்தையும் என்னே நெஞ்சே


தோழர்கள் போரில் மாயும்
    துன்பத்தைப் பொறுத்தி டாமல்
ஆழிய துன்பில் அண்ணல்
    அழுந்திய தென்னே நெஞ்சே


வானின்பால் சிரசைத் தூக்கி
    வல்லானை நினைக்கும் போது
ஆனநல் லுதவி தன்னை
    அறிந்திட லானார் நெஞ்சே


மறுகணம் வீரங் கொண்டு
    மனத்தினில் உறுதி கொண்டு
செருக்களம் அதனை நோக்கிச்
    சென்றிட லானார் நெஞ்சே


உமர்,அலி, ஹம்சா போன்றார்
    உக்ரமாய்ப் போர்செய் திட்ட
அமர்க்களம் அதனைப் பார்த்தே
    அகம்நிறைந் தாரே! நெஞ்சே

 


வீரர்கள் இடையிற் சென்றே
    வெற்றியை அருள்வான் அல்லாஹ்
போரிடுங் கள்என் றோதி
    புத்தொளி தந்தார் நெஞ்சே


எங்கெங்கும் அண்ணல் போன்றே
    எல்லோர்க்கும் தெரிந்த தாலே
பொங்கிடும் வீரத் தோடு
    போர்செய்ய லானார் நெஞ்சே


பெருமானார் உரைகள் எல்லாம்
    பேசரும் ஒளியை நல்க
செருக்களம் அதனில் வீரர்
    செயல்கொள்ள லானார் நெஞ்சே


அண்ணலார் முகத்தை நோக்கி
    அளப்பரும் வீரங் கொண்டே
திண்ணிய உள்ளத் தோடு
    திரண்டுபோர் செய்தார் நெஞ்சே

 

வெற்றியே அருள்வான் அல்லாஹ்
    வீரப்போர் செய்க! என்றே
சுற்றியே அண்ணல் ஆங்கே
    தொடருரை பொழிந்தார் நெஞ்சே


பெருமானார் வீரப் பேச்சைப்
    பெற்றபின் தோழர் கள்தாம்
ஒருவர் பத் துப்பே ரென்ன
    உளபலங் கொண்டார் நெஞ்சே


பறந்துமே வீரர் எல்லாம்
    பகைவர்கள் தலையைக் கொய்ய
இறந்தனர் பலர்தாம் ஆங்கே
    எதிரிகள் சோர்ந்தார் நெஞ்சே


அணிவீழும் நிலையைக் கண்ட
    அபுஜஹில் திகிலே கொண்டு
இனியில்லா வண்ணம் ஆங்கே
    எரிந்திட லானான் நெஞ்சே

 

ஒளிரும்தம் வாளெ டுத்தே
    ஒப்பாரும் இல்லா வண்ணம்
களிறுபோல் அபுஜ ஹில்தான்
    கடுமையாய் வந்தான் நெஞ்சே


வந்தஅக் கொடியோன் ஆங்கே
    வாளினால் பலரை வீழ்த்த
சிந்தைதான் கொண்டான் நெஞ்சே
    சீறிட லானார் நெஞ்சே

அடலேறு போல ஆங்கே
    அன்பர்‘மு ஆதும்’ மிக்கத்
திடமுடன் தற்காப் புக்கே
    திகழ்ந்திட லானார் நெஞ்சே


பாய்ந்தனன் அபுஜ ஹில்இப்
    பாரினை முடிப்பேன் என்று
தேய்ந்தன உடலி ரண்டும்
    தீயுமிழ்ந் ததுவே நெஞ்சே

 

கீரியும் பாம்பும் போலக்
    கிளர்ந்தெழும் கோபத் தாலே
கூரிய வாட்கள் கொண்ட
    கோரமும் என்னே நெஞ்சே


இறையருள் வலிமை பெற்றும்
    இறைதூதர் ஆசி கொண்டும்
முறையுடன் மூஆ தாங்கே
    முனைந்தெதிர்த் தாரே நெஞ்சே


வீரருள் வீரர் மூஆத்
    வீணனாம் அபுஜ ஹில்மேல்
போரிட லானார் அந்தப்
    போர்ச்செய்தி கேளாய் நெஞ்சே


வானத்தில் பறப்ப தைப்போல்
    வளைந்து‘மு ஆது’ம் ஆங்கே
மானத்தைக் காப்பேன் என்றே
    மற்புரிந் திட்டார் நெஞ்சே

 


மூஆதை எதிர்த்து நிற்க
    முடியாத அபுஜ ஹில்தான்
மூஆதின் வலிமை எண்ணி
    முணங்கிட லானான் நெஞ்சே


ஒருவன்தான் எதிர்நிற் கின்றான்
    ஒராயி ரம்பேர் போன்று
வரும்பலம் எதுவோ? என்றே
    வாடிட லானான் நெஞ்சே


இவ்விதம் அபுஜ ஹில்தான்
    இதயத்தில் எண்ணிச் சோர்ந்தே
எவ்விதம் வெல்வோம்? என்றே
    ஏங்கிட லானான் நெஞ்சே


அணைந்திடும் விளக்கைப் போல
    அபுஜஹில் ஆர்த்தெ ழுந்து
துணிந்துபோ ரிட்டும் கூடத்
    துயரத்தில் ஆழ்ந்தான் நெஞ்சே

 


பார்ப்பவர் அஞ்சும் வண்ணம்
    பயங்கரம் மேவி நின்ற
போரில்‘மு ஆதி’ ன் வாளே
    புகழ்கொண்ட தென்னே நெஞ்சே


மலைநிகர் அபுஜ ஹில்தான்
    மருண்டுமே கீழே வீழப்
புலிநிகர் ‘மூஆ’ தாங்கே
    புன்னகை செய்தார் நெஞ்சே


கொடுமையே புரிந்து வந்த
    கொடியவன் உடலம் மண்ணில்
நெடுமரம் போன்றே வீழ்ந்த
    நிலையைஎன் சொல்வேன் நெஞ்சே


குற்றுயி ராக ஆங்கே
    கொடியவன் அபுஜ ஹில்-வேர்
இற்றிடு மரம்போல் அந்த
    இடத்தினில் வீழ்ந்தான் நெஞ்சே

 

அண்ணல்பால் இதனைச் சொல்ல
    ஆனந்தங் கொள்ளா வண்ணம்
எண்ணத்தில் கலக்கங் கொண்டே
    இருந்ததைக் கேளாய் நெஞ்சே


அடுத்துநம் அண்ண லாரும்
    அபுஜஹில் தன்னை வீழ்த்தல்
கடுமைசேர் முயற்சி என்றே
    கருத்தினைச் சொன்னார் நெஞ்சே


மெய்வலி மிக்கோன் அந்த
    அபுஜஹில் வீழ்ந்தான் என்னும்
செய்தியை அறிய மீண்டும்
    செல்வீர்கள்! என்றார் நெஞ்சே


இளமையில் இருவ ருக்கும்
    இடையினில் நடந்த தான
விளைவொன்றைக் கூறு கின்றேன்
    விவரம்உண் டென்றார் நெஞ்சே

 

விருந்தொன்றில் நானும் இன்று
    வீழ்ந்தஇவ் வீரன் தானும்
இருவரும் சென்று வந்தோம்
    என்றிட லானார் - நெஞ்சே


அவ்வாறு சென்ற போது
    அபுஜஹில் எனது தோளில்
எவ்வாறோ மோத ஆங்கே
    வீழ்ந்தனன் என்றார் நெஞ்சே


வீழ்ந்ததும் இடது தோளில்
    விளைந்ததோர் காயம் தன்னால்
ஆழ்ந்ததுன் படைந்தான் இந்த
    அபுஜஹில் என்றார் நெஞ்சே


இன்றந்தத் தழும்பும் அன்னான்
    இடதுதோள் மீதி ருக்கும்
சென்றுநீர் பார்க்க! என்றே
    செப்பிட லானார் நெஞ்சே