பக்கம் எண் :

50

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

அபூஜஹில் இறப்பு

அவ்வடை யாளம் உண்டேல்
    அபுஜஹில் வீழ்ந்தா னென்றே
ஒவ்வலாம் என்றே அண்ணல்
    உரைத்திட லானார் நெஞ்சே


விரைந்தனர் தோழர் சில்லோர்;
    விழிகளால் அதனைக் கண்டார்;
விரைந்துவந் தண்ண லின்பால்
    விளம்பிட லானார் நெஞ்சே


இறக்கும்போதும் இறுமாப்பு

ஆங்கந்த அபுஜ ஹில்தான்
    ஆற்றல்சேர் மூஆத் வாளால்
தாங்கொணாத் துன்ப முற்றே
    தவித்ததென் சொல்வேன் நெஞ்சே


தனக்கும்இத் தோல்வி வந்தே
    தழுவிட லாமோ வென்றே
மனத்ளே எண்ணி எண்ணி
    மருண்டிட லானான் நெஞ்சே

 

சற்றுநே ரத்தில் ஆவி
    தாவிடும் நிலையில் ஆங்கு
வெற்றியா ருக்காம்? என்றே
    அபுஜஹில் வினவ லானான்


ஆண்டவ னுக்கும் மற்றும்
    ஆண்டவன் தூத ருக்கும்
ஈண்டுநல் வெற்றி என்றே
    தோழர்கள் இயம்ப லானார்


அம்மொழி கேட்ட போதே
    அபுஜஹில் முகமும் சோர்ந்து
விம்மியே தரையின் கண்ணே
    விழுந்திட லானான் நெஞ்சே


விழுந்ததும் இப்னு மஸ்ஊத்
    விரைந்தவன் மார்பில் ஏறி
எழுந்திடா தழுத்திக் கொண்டே
    இசைத்ததைக் கேளாய் நெஞ்சே

 


பகைவளர்த் திட்டாய்; அல்லாஹ்
    பலத்தினால் வீழ்ந்தா யன்றோ
அகப்பட்ட உன்னைக் காக்க
    ஆருளார்? என்றார் நெஞ்சே


இப்படி இப்னு மஸ்ஊத்
    இயம்பிட அபுஜ ஹில்தான்
அப்பொழு தெடுத்து ரைத்த
    அனல்மொழி கேளாய் நெஞ்சே


காரியே உமிழ்ந்த வண்ணம்
    கடுகடுத் திட்ட வண்ணம்
கூறிய சொற்கள் தம்மின்
    கொதிப்பினைப் பாராய்! நெஞ்சே


ஆட்டினை மேய்க்கும் அற்பா
    அரசனாம் என்றன் நெஞ்சுக்
கூட்டின்மீ தேறல் காலக்
    கொடுமையே என்றான் நெஞ்சே

 

என்னுடை மார்பில் நீயும்
    ஏறுவாய் என்றே நானும்
எண்ணவே இல்லை என்றே
    இயம்பிட லானான் நெஞ்சே


மண்ணில்நான் வீழ, உங்கள்
    மாநபி வாழ்வார் என்றே
எண்ணிய தில்லை; இல்லை
    என்றிட லானான் நெஞ்சே


ஒடிந்தஓர் வாளைக் கொண்டே
    ஒப்பிலா இபுனும் ஆங்கே
மடிந்திடு வாய்நீ என்றே
    வழுத்திட லானார் நெஞ்சே


தோற்றனன் போரில்; நீதான்
    துணிப்பாய்என் தலையை என்றே
ஆற்றிடா அபுஜ ஹில்வாய்
    அடங்கியே மொழிந்தான் நெஞ்சே

 

தலையினைத் துணிக்கும் போதோ
    தறிப்பாய்என் பிடரி தன்னை
நிலையில்என் தலையே நீண்டு
    நிற்கட்டும் என்றான் நெஞ்சே


பிடரியில் சேர்ந்த என்றன்
    பெருந்தலை அதனைக் கண்டே
இடருற வேண்டும் உன்றன்
    முகம்மதும் என்றான் நெஞ்சே


அப்பொழு தேஎன் உள்ளத்
    தாசையும் தீரும் என்றே
செப்புமவ் வபுஜ ஹில்கொள்
    செருக்கதும் என்னே நெஞ்சே

இருள் விலகியது

கடுத்ததோர் முகத்தி னோடும்
    கடுமைகொள் விழியி னோடும்
விடுத்தனன் உயிரை அந்த
    வீழ்ச்சியைப் பாராய் நெஞ்சே

 

இருள்நிகர் அஞ்ஞா னத்துக்
    கிணையிலா அடிமை யாகி
மருள்மனத் தவனாய் மாண்டு
    மடிந்தனன் அந்தோ ! நெஞ்சே


விரைந்தஅத் தோழர் இந்த
    விவரத்தை அண்ண லின்பால்
அறைந்ததும் அண்ணல் சொன்ன
    அரியசொற் கேளாய் நெஞ்சே


இறையில்லை ; மறையு மில்லை
    என்றெல்லாம் உரைத்த *பிர்அவ்ன்
*நிறைநதிப் பிளப்பின் போது
    நெகிழ்ந்தனன் நெஞ்சம் என்றார்

*பிர்அவ்ன் Phir-oun-எகிப்தில் ஆட்சி புரிந்து, தானே
இறைவன் எனக் கூறிய கொடிய மன்னன்.
Rameses II the Pharaoh (an ancient Egyptian King)
who opposed Moses.

*நிறைநதி:-எகிப்திய நைல் (Nile) நதி


மூசாவை எதிர்த்த அன்னான்
    மூழ்கிடும் போதி லேனும்
கூசாமல் இறையுண் டென்றே
    கூறினன் என்றார் நெஞ்சே


ஆயினும் என்பிர் அவ்னாம்
    அபுஜஹில் இறக்கும் போதோ
நாயனை மறுத்தே சென்றான்;
    நலம்பெற விலையே என்றார்


தக்கஇவ் விறைதண் டத்தை
    தான்வந்து பெறுவ தற்கோ
மக்காவை விட்டே இங்கு
    வந்தனன்? அந்தோ! நெஞ்சே


மாண்டிடும் போது கூட
    மனம்மாற வில்லை போலும்
ஈண்டவ னோடஞ் ஞானம்
    இறந்ததை அறிவாய் நெஞ்சே


ஆர்த்தெதிர்த்தனர் அன்புத்தோழர்கள்


செருக்குறும் அபுஜ ஹில்தான்
    செருக்களம் தன்னில் மாண்ட
விருப்புறு செய்தி தன்னை
    வீரர்கள் கேட்டார் நெஞ்சே

 


பெருமானார் வீரத் தோடு
    பெட்புடைத் தோழர் கள்பால்
அருமுரை ஆற்றி வீரம்
    அளித்திட லானார் நெஞ்சே


புதுபலம் தன்னைப் பெற்றுப்
    போரிட லானார் தோழர்
எதிரிகள் வீழ, வீழ
    இறைவலி நினைந்தார் நெஞ்சே


பளிச்சிடும் வாளைக் கொண்டு
    பறந்துமே தாக்க லானார்;
ஒளிமிகு பெருமா னாரின்
    உயருரை என்னே நெஞ்சே


அஞ்சிய குறைஷி யர்தாம்
    ஆண்மையை இழந்த பின்னும்
மிஞ்சிய கோபம் மேவ
    மிருகம்போல் ஆனார் நெஞ்சே

 

முன்னிலும் பன்ம டங்கு
    முனிவுகொள் குறைஷி யர்தாம்
அண்ணலார் அணியின் மீதே
    ஆர்த்தெதிர்த் தாரே நெஞ்சே


ஒட்டகப் படைகள் சூழ
    உடன்பல வீரர் மோத
மட்டிலாப் புழுதி வானை
    மறைத்ததென் சொல்வேன் நெஞ்சே


முகிலெனப் புழுதி சூழ்ந்த
    மூடிருள் இடையே வாட்கள்
தகதக என்ன மின்னல்
    தன்மையைக் காட்டும் நெஞ்சே


அதிர்கடல் ஒலியைப் போல
    ஆர்க்குமக் களத்தின் கண்ணே
குதிரைகள் குதித்து நின்ற
    கோலமென் சொல்வேன் நெஞ்சே

 

குதிரைகள் குதித்துச் செல்ல
    குறைஷியர் வாட்கள் மின்ன
உதிரந்தான் வெள்ள மாக
    ஒடிய தந்தோ நெஞ்சே

நிலத்ததன் நிறத்தை மாற்றும்
    நீரெனக் குருதி யோட
பலத்துடன் படைகள் கொண்ட
    பயங்கரம் பெரிதே நெஞ்சே


குதிரைகள் கனைக்கும் ஓசை
    கேடயம் கொடுக்கும் ஓசை
அதிர்கடல் முழக்கம் போல
    ஆர்த்ததும் கொடிதே நெஞ்சே


வாளொடு வாள்தான் மோத
    வன்மஞ்சேர் குறைஷி யர்தம்
தோளதன் பலத்தைக் கொண்டே
    தொடர்ந்துபோ ரிட்டார் நெஞ்சே

 

அதிகமாய்க் குறைஷி வீரர்
    ஆங்கெதிர்த் திட்ட போதும்
எதனாலோ அவர்கள் எல்லாம்
    ஏங்கிட லானார் நெஞ்சே


குறைந்தபேர் நபியின் பக்கம்
    கூடியே நின்றா ரேனும்
நிறைந்தநன் நிலையில் போரை
    நிகழ்த்திட லானார் நெஞ்சே


முன்னூறு முஸ்லிம் மக்கள்
    முழங்கிடும் குறைஷி யர்பால்
பன்னூறு வீரர் போலப் -
    பளிச்சிட லானார் நெஞ்சே


பறந்திடும் ஊர்தி போல
    பாங்குறு பரிகள் தாவப்
பிறந்திடும் ஒளிவாள் வீச்சைப்
    பேசிடல் எளிதோ? நெஞ்சே

 

எங்கணும் பெருமு ழக்கம்;
    எப்பக்கம் நோக்கி னாலும்
பொங்கிடும் குருதி வெள்ளம்
    போரொலி என்னே நெஞ்சே


நிறைபலம் இவர்க்கு வானின்
    நின்றுவந் ததுவோ? என்றே
குறைஷியர் எண்ணி் எண்ணிக்
    குமைந்திட லானார் நெஞ்சே


*அன்னவர் கரங்கள் பெற்ற
    அளப்பரும் வலிமை எந்தம்
முன்னவர் வரலா றேதும்
    மொழிந்தில தென்றார் நெஞ்சே

* அன்னவர்-அந்த முஸ்லிம்கள்


ஒளிரும்அவ் வாட்கட் குள்ள
    உயிர்கள்தாம் எவையோ? என்றே
பளிச்சிடும் வாட்கள் கண்டு
    பயந்திட லானார் நெஞ்சே


வாட்களின் ஒலிதான் மேவ
    வீழ்ந்தன உடல்கள்; முஸ்லிம்
ஆட்களின் வீரங் கண்டே
    அயர்ந்திட லானார் நெஞ்சே


குறைஷியர் கூட்டந் தன்னில்
    குழப்பமும் பயமும் மேவ
நிறைவுடை முஸ்லிம் மக்கள்
    நின்றெதிர்த் திட்டார் நெஞ்சே


வாள்பலம் கொண்டு வந்தவர் கால்பலம் கொண்டு ஓடினர்

கடல்அலைக் கூட்டம் போல
    கணப்பொழு தும்ஓ யாமல்
திடமிகு முஸ்லிம் மக்கள்
    திரண்டெதிர்த் தாரே நெஞ்சே

 

தொடர்ந்தவர் சுற்றிச் சுற்றித்
    துரத்தவே குறைஷி யர்தாம்
இடருற்ற நிலையில் ஆங்கே
    ஏங்கிட லானார் நெஞ்சே


குறைஷியர் மனத்தைப் பற்றிக்
    குவிந்தநல் அகந்தை போல
நிறைவுறு புழுதி ஆங்கே
    சூழ்ந்திருந் ததுவே நெஞ்சே


எதிர்ப்பினில் எழுந்தே ஆடும்
    ஏற்றஞ்சேர் அரவைப் போல
அதிர்ச்சிஇல் லாத முஸ்லிம்
    ஆண்மையும் என்னே நெஞ்சே


குருதியின் வெள்ளங் கண்டே
    குறைஷியர் அச்சங் கொண்டே
திருதிரு எனவி ழித்துத்
    திகைத்திட லானார் நெஞ்சே

 


ஒருவர்பின் ஒருவர் வீழ
    ‘உத்பா’வும் எங்கே என்றே
இருவர்தான் கேட்க மற்றோன்,
    “இறந்தனர்” என்றான் நெஞ்சே


வாள்வீரர் மீண்டும், அந்த
    வலீதவர் எங்கே? என்றார்
“வாளுக்கு மாய்ந்தார்” என்ன
    வருந்திட லானார் நெஞ்சே


அபுஜஹில் எங்கே? என்றே
    அடுத்தவன் கேட்க ஆங்கே
‘அபுஜஹில் முன்பே வீழ்ந்தே
    அடங்கினார்’ என்றான் நெஞ்சே


தலைவன்தான் வீழ்ந்தா னென்ற
    திடுக்கிடும் தகவல் கேட்டே
மலைத்தஅக் குறஷி யர்தாம்
    மருண்டிட லானார் நெஞ்சே

 


வீழ்ந்தனன் வீரன் என்றே
    விம்மலும் திகிலும் கொண்டே
ஆழ்ந்தனர் துன்பந் தன்னில்
    அடுத்துரை கேளாய் நெஞ்சே

தருக்கிய தலைவர் எல்லாம்
    தலைகவிழ்ந் திட்டார் என்ன
பொறுக்கொணாத் துன்பந் தன்னில்
    புழுங்கிட லானார் நெஞ்சே


வீழாத வீர னுந்தான்
    வீழ்ந்தனன் இனியும் காலம்
தாழாமல் விரைவோம் என்றே
    தப்பிக்க லானார் நெஞ்சே


முஸ்லிம்கள் வீரங் கொண்டார்
    முன்நிற்க முடியா தென்றே
விஸ்வாச மில்லா வீணர்
    விரைந்திட லானார் நெஞ்சே


ஆர்த்துமே வந்தோ ரெல்லாம்
    அஞ்சியே ஓட லானார்
போர்வேண்டாம் உயிர்கி டைத்தால்
    போதும்என் றுரைத்தார் நெஞ்சே

 

விட்டதை விட்ட வண்ணம்
    விரைந்தவர் ஒன்றாய்ச் சேர்ந்து
மட்டிலா வேகத் தோடு
    மறைந்திட லானார் நெஞ்சே


வாளதன் பெருமை பேசி
    வந்தவர் எல்லாம் ஆங்கே
காலதன் வலிமை கொண்டே
    காற்றெனச் சென்றார் நெஞ்சே


தலைவர்கள் ஓடக் கண்டே
    தடுமாறி நின்றோ ரெல்லாம்
நிலையின்றி அவர்கள் பின்னே
    விரைந்திட லானார் நெஞ்சே


ஒட்டகம் ஓர்பால் நிற்க -
    ஒளிரும்வாள் ஓர்பால் வீழ -
நெட்டோட்ட மாகச் சென்றோர்
    நேர்மையும் என்னே நெஞ்சே


திறங்கொண்டு வந்தோ ரெல்லாம்
    திவ்ய நம் அண்ணல் முன்பு
புறங்கொண்டு சென்ற தைத்தான்
    புகன்றிடு வேனோ நெஞ்சே


மாண்பிலாக் குறைஷி யர்தாம்
    மக்காவை நோக்கி ஓடி
வீண்பகை கொண்டே மென்றே
    விசனத்தில் ஆழ்ந்தார் நெஞ்சே

வாகை சூடிய வள்ளலார்

நேர்மையே இல்லா வண்ணம்
    நெஞ்சினை உயர்த்தி வந்தோர்
போரினில் வெல்வ துண்டோ?
    புகன்றிடு வாயென் நெஞ்சே


உருவிய வாளும் கையும்
    ஒங்கிய பகையும் கொண்டே
வெருவிய பகைவர் வீழ்ந்த
    விவரத்தைப் பாராய் நெஞ்சே

ஆண்டவன் கருணை வெள்ளம்
    அன்புறு அண்ண லாரை
ஈண்டிய தென்னே நெஞ்சே
    இயம்புவ தாமோ நெஞ்சே


நிறைவுறு பெருமா னாரின்
    நெஞ்சத்தை அறிந்த அந்த
இறைவனே “வெற்றி” தந்த
    இன்பதும் என்னே நெஞ்சே


“வெற்றி” என் றோதும் அந்த
    வியப்புறு மங்கை ஆங்கே
பெற்றியாய் அண்ண லாரைச்
    சேர்ந்ததும் பெரிதே நெஞ்சே


வெற்றியைப் பெற்றோம் என்றே
    வியப்பதோ மகிழ்வோ இன்றி
நற்றவ வள்ளல் நின்ற
    நலமதும் என்னே நெஞ்சே

 

ஆண்டவன் வெற்றி தன்னை
    அருளினான் என்றே எண்ணி
பூண்டநல் அடக்கத் தோடு
    பொலிந்திட லானார் நெஞ்சே

தியாகிகள் தரிசனம்

அண்ணலோ போரில் மாய்ந்தோர்
    அன்பர்கள் உடலைக் காண
நண்பர்கள் சூழ ஆங்கே
    நடந்திட லானார் நெஞ்சே


புனிதத்தைக் காக்கும் போரில்
    பொற்புறு முஸ்லிம் வீரர்
கனிவுடன் கொண்ட வற்றைக்
    களருவேன் கேளாய் நெஞ்சே


உயிர்நீங்கும் போது கூட
    உற்சாகம் கொண்ட தோடு
அயர்வின்றி மாண்ட தைத்தான்
    அறைந்திட லாமோ? நெஞ்சே


இறந்திடும் போது கூட
    இறைவனை நெஞ்சில் எண்ணி
அறமுடைப் போரில் மாண்ட
    அதிசயம் பெரிதே நெஞ்சே


வல்லவா! உயர்ந்த உன்றன்
    வழியினைக் காப்ப தற்கே
நல்லுயிர் அளித்தோம் என்றே
    நவின்றதும் என்னே நெஞ்சே


இறைவா!உன் தூதர் சொன்ன
    இன்புறு நெறியைக் காக்க
இறக்கின்றோம் என்றே அன்னார்
    இயம்பிய தென்னே நெஞ்சே


உனக்கென வாழ்ந்தோம் மற்றும்
    உன்நெறி தன்னைக் காக்க
மனத்துயர் இன்றி நாங்கள்
    மாள்வோம்என் றாரே நெஞ்சே

 

மக்கத்தை விட்டே அந்த
    மதினாவைத் தேடி வந்தோம்
க்கமே இல்லா வண்ணம்
    துறக்கின்றோம் என்றார் நெஞ்சே


நீயேஎம் வாழ்வுக் கென்றும்
    நின்றிடும் “சாட்சி” யானாய்
நீயேஎம் ஆவி ஏற்றாய்
    மாள்கின்றோம் என்றார் நெஞ்சே


இத்தகைத் தியாகந் தன்னில்
    இறந்திட்டோர் உடலைக் கண்டே
உத்தம நபிக ளாரும்
    உருகியே நின்றார் நெஞ்சே


தோழர்கள் கிடக்கை கண்ட
    தூய்மைசேர் அண்ணல் கொண்ட
ஆழிய துன்பந் தன்னை
    அறைந்திட லாமோ! நெஞ்சே


ஆண்டவா ! நின்ற னுக்கே
    அருமுயிர் தந்தார் இந்த
ஆண்டகை யோர்க்கே சாந்தி
    அருளுக ! என்றார் நெஞ்சே