பக்கம் எண் :

53

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி    
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி 

வெற்றியில் நிறைந்த வியத்தகு மேதை

உஹதுப் போர்    

மிக்கதாம் இன்பம் தன்னில்
    மதினாதான் மிளிரும் போது
மக்கத்தில் பகைவ ரெல்லாம்
    மனமெரிந் திட்டார் நெஞ்சே

முகம்மதைத் தொலைத்தால் அன்றி
    முகம்தூக்க முடியா தென்றே
பகையினால் அவர்கள் ஆங்கே
    பகைத்திட லானார் நெஞ்சே

அண்ணலை அழிப்ப தற்கே
    அவரெலாம் ஒன்று கூடி
எண்ணிலா ஆயு தங்கள்
    எங்கெங்கும் சேர்த்தார் நெஞ்சே

ஆயுதம் சேர்ப்ப தில்தான்
    ஆத்திரம் மிகவும் கொண்ட
ஓயுதல் இல்லா வண்ணம்
    உழைத்திட லானார் நெஞ்சே

ஓர்நாள்மூ வாயி ரம்பேர்
    *உஹதென்னும் இடத்தில் கூடி
போர்க்கொடி உயர்த்தி நின்ற
    புன்மையும் என்னே நெஞ்சே

*உஹது-இது ஒரு மலைப்பகுதியான இடம். மதீனாவுக்கு வடமேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. முற்காலத்தில் இருந்த ஹலரத் மூசா - Moses - (அலை) நபியின் சகோதரர் ஹாரூன் - Aaron - (அலை) நபி இந்த இடத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செய்தியை அறிந்த வள்ளல்
    சேர்த்தனர் தோழர் தம்மை;
கொய்திட வருகின் றார்கள்
    கூடுவீர்! என்றார் நெஞ்சே

எழுக!என் றண்ணல் ஓத
    இமைத்திடும் போதுக் குள்ளே
எழுநூறு தோழர் ஆங்கே
    எழுந்திட லானார் நெஞ்சே

சாடின வாட்கள் ஆங்கே
    சரிந்தன தலைகள் - அஞ்சி
ஓடினர் சில்லோர் எங்கும்
    உதிரம்ஓ டியதே நெஞ்சே

 

குறைஷியர் போரில் கொண்ட
    கொடுமைகள் தம்மை இங்கண்
அறைந்திட முடியு மாமோ?
    அக்ரமம் செய்தார் நெஞ்சே

போரிலே இறந்த முஸ்லிம்
    பொற்புறு மூக்கை, காதைக்
கூரிய வாளால் பெண்கள்
    கொய்திட லானார் நெஞ்சே

அரிந்தெடுத் தவற்றை எல்லாம்
    அழகுறு மாலை யாக்கி
அரிவையர் ஆடி நின்ற
    அவலமும் கொடிதே நெஞ்சே

அண்ணலின் சிறிய தந்தை
    ஹம்ஸாஎன் றோதும் நல்லார்
புண்ணியப் போரில் மாண்டே
    புழுதியில் கிடந்தார் நெஞ்சே

அன்னவர் உடலைக் கண்ட
    அபுசுப்யான் மனைவி ஆங்கே
தன்கையால் உடல்பி ளந்த
    தன்மையைக் கேளாய் நெஞ்சே

ஈரலைப் பிய்த்தெ டுத்தே
    இன்புடன் வாயில் வைத்துக்
கோரமாய் தின்ற தைத்தான்
    கூறுவ தாமோ ? நெஞ்சே

குறைஷியர் இவ்வா ரெல்லாம்
    கொடுமைகள் செய்த போதும்
நிறைவுற்றா ராமோ ? இல்லை;
    நெஞ்செ ரிந்திட்டார் நெஞ்சே

முற்றிய போரில் ஆங்கே
    மும்முர மாய்ப்போ ரிட்டும்
வெற்றிக்கு வழியில் லாமல்
    விலகிட லானார் நெஞ்சே

அபுசுப்யான்-சரியான உச்சரிப்பு
அபூசுப்யான்-Aboo Sufyan.

பொருதியே ஓய்ந்த பின்பு
    போரில்கொள் வெற்றி யின்றி
இறுதியில் குறைஷி யர்தாம்
    ஏகிட லானார் நெஞ்சே

அவரவர் நகர்க ளுக்கே
    அவரவர் போவ தானார்
தவநபி மதினம் வந்தே
    தம்பணி புரிந்தார் நெஞ்சே

வஞ்சக வலை விழுந்தது


தோல்வியின் கார ணத்தைத்
    துருவிஆய்ந் துணரா தாராய்ச்
சால்பிலா குறைஷி மக்கள்
    சதியினில் ஆழ்ந்தார் நெஞ்சே

அடங்கொணாத் தலைவன் அந்த
    அபுஜஹில் வீழ்ந்த பின்போ
அடுத்துமே அபுசுப் யான்தான்
    அப்பணி ஏற்றார் நெஞ்சே

கூட்டத்தைக் கூட்ட லானார்
    கூட்டத்தில் அபுசுப் யான்தான்
நாட்டத்தைச் சொல்வீர்! வெற்றி
    நமதேஎன் றுரைத்தார் நெஞ்சே

கூட்டத்தில் ஒருவன் தோன்றி
    கூறிய மொழியை இங்கு
நாட்டமாய் உரைக்கின் றேன்நான்
    நயமுடன் கேளாய்! நெஞ்சே

பூரண மாக அந்தப்
    பொல்லாத முஸ்லிம் மக்கள்
போரில் ஏன் வீழ்வ தில்லை?
    புகலுவேன் கேட்பீர்! என்றான்

ஒருவனே இறைவன் என்றும்
    ஒன்றேதான் மார்க்கம் என்றும்
உரைப்பவர் தம்மை வெல்லல்
    உண்டுமோ? என்றான் நெஞ்சே

ஒர்குலைக் காயைப் போல
    ஒற்றுமை யாக உள்ளார்;
போரில்வெல் கின்றார் என்றே
    புகன்றிட லானான் நெஞ்சே

வாளினால் வீழ மாட்டார்
    வஞ்சனை செய்தோ மென்றால்
தாளிலே வீழ்வார் என்றே
    தனிவழி தந்தான் நெஞ்சே

அவர்வழி சேர்வ தைப்போல்
    அனைவரும் நடிப்போம்; பின்பே
அவரைநாம் ஒழிப்போம் என்றும்
    அவனுரை செய்தான் நெஞ்சே

குறைஷியர் எல்லாம் இந்தக்
    கொள்கையே சிறந்த தென்று
நிறைவுறு இன்பங் கொண்டே
    நிமிர்ந்தெழ லானார் நெஞ்சே

வஞ்சக உள்ளம் கொண்டே
    வலியவர் எழுவ ரைத்தான்
அஞ்சாமல் அண்ண லின்பால்
    அனுப்பிட லானார் நெஞ்சே

அடுத்துமே கெடுப்ப தற்கிங்
    ககமதில் எண்ணங் கொண்டே
அடுத்தவர் செய்த வற்றை
    அறைந்திடக் கேளாய் நெஞ்சே

எண்ணத்தில் தீமை கொண்ட
    எழுவருள் சிலர்தான் வந்தே
அண்ணல்பால் சூழ்ச்சி தன்னை
    அவிழ்த்திட லானார் நெஞ்சே

இனியீர்!எம் மக்க ளுக்கே
    இறைமறை சொல்வான் வேண்டி
அனுப்புவீர் சிலரை என்றே
    ஆசைபோல் சொன்னார் நெஞ்சே

நல்லவர் போன்றே ஆங்கு
    நடித்தே தம் பகுதி கட்கு
வல்லோரைத் தருக! என்றே
    வசனிக்க லானார் நெஞ்சே

முஸ்லிம்கள் இடத்தில் அன்னார்
    மூண்டெழும் அன்பி னோடு
விஸ்வாசம் கொண்ட தைப்போல்
    விளக்கிட லானார் நெஞ்சே

யோசிக்க விரும்பா அண்ணல்
    உத்தமர் சிலரை மக்கா
வாசிகள் பால்அ னுப்பி
    வைத்திட லானார் நெஞ்சே

ஆஸிம்என் பாரின் நல்ல
    அன்புறு தலைமை கொண்டே
மாசிலா நண்பர் கள்தாம்
    மக்காசென் றாரே நெஞ்சே

வழியினில் குறைஷி மக்கள்
    வஞ்சனைச் செயலைக் காட்ட
வழியொன்று காண்ப தானார்;
    வன்மத்தைக் கேளாய் நெஞ்சே

வந்தாருள் ஒருவன் ஆங்கே
    வலிமிகு குதிரை ஏறி
தந்திர மாக முன்னே
    தாவிட லானான் நெஞ்சே

விரைந்தவன் அபுசுப் யான்பால்
    வீழ்ந்தார்நம் வலையில் ஆங்கே
வருகின்றார் என்று சொல்லி
    வழிகாட்ட லானான் நெஞ்சே

செய்தியை அறிந்த தும்தான்
    சிறிய ஓர் படைதி ரட்டி
எய்திநாம் அழிப்போம் என்றே
    அபுசுப்யான் எழுந்தார் நெஞ்சே

வஞ்சக வலைவி ரித்த
    மனிதர்தாம் அபுசுப் யானும்
நெஞ்சினில் பகைமை கொண்டு
    நேருறச் சென்றார் நெஞ்சே

பாலையில் வந்த முஸ்லிம்
    பத்துப்பேர் அபுசுப் யானின்
வாளொடு பொருது வாரோ?
    வஞ்சனை பெரிதே நெஞ்சே

இருநூறு பேர்கள் கொண்ட
    இரக்கமில் படையின் முன்னே
வெறுமனே பத்துப் பேர்கள்
    வீழ்வதும் கொடிதே! நெஞ்சே

முஸ்லிம்கள் தம்மைப் பார்த்து
    மூர்க்கமாய்க் குறைஷி மக்கள்
இஸ்லாத்தை விடுவீர்! இன்றேல்
    இறப்பீர்கள்! என்றார் நெஞ்சே

உங்களை அழிப்ப தற்கே
    ஓயாமல் முயன்றோம் ஆனால்...
எங்களை முகம்ம தும்தான்
    ஏய்த்தார்என் றாரே நெஞ்சே

இரும்பினால் கழும ரந்தான்
    இயற்றியே அதற்கு முன்னே
இரும்பினும் கொடியோர் செய்த
    இன்னலைக் கேளாய் நெஞ்சே


ஊசிபோல் கூர்மை கொண்ட
    உயிர்கொள்ளும் கழும ரந்தான்
ஆசையாய் நிற்ப தைப்பார்!
    அச்சங்கொள்! என்றார் நெஞ்சே


கழுமரம் அதிலே உம்மை
    கணத்திலே ஏற்று முன்னம்
வழிக்குநீர் வருக! என்றே
    வருந்திட லானார் நெஞ்சே

இவ்வாறு குறைஷி மக்கள்
    இம்சித்த போதும் ஆங்கே
பௌவிய மாக ஆஸிம்
    பகர்ந்ததைக் கேளாய் நெஞ்சே

எங்களைக் கொன்ற போதும்
    என்னதான் செய்த போதும்
உங்களின் எண்ணம் என்றும்
    ஒவ்வாதென் றுரத்தார் நெஞ்சே

வதைத்தெமை வாட்டி னாலும்
    வாள்கொண்டு வெட்டி னாலும்
இதயத்தை மாற்றிக் கொள்ளோம்
    இதுமுடி வென்றார் நெஞ்சே


திருமறை ஓதிக் காட்டத்
    தெரிவித்தீர் வந்தோம் எம்மை
வருத்தியே இம்சித் தல்தான்
    வாய்மையோ? என்றார் நெஞ்சே


இம்மொழி கேட்ட அந்த
    இதயமில் லாத கூட்டம்
வெம்மைசேர் முகத்தி னோடு
    விளைத்ததைக் கேளாய் நெஞ்சே

எண்மரைக் குறைஷி மக்கள்
    எதிரிலே கொன்ற அந்த
கண்ணிலா செய்தி தன்னைக்
    கண்டதுண் டாமோ? நெஞ்சே

ஆயுதம் ஏதும் இன்றி
    அன்பினை நம்பி வந்தோர்
மாயும் ஓர் நிலையைக் கொண்ட
    மனத்துயர் சிறிதோ? நெஞ்சே

எஞ்சியே நின்ற தோழர்
    *இருவரை அச்சு றுத்தி
வஞ்சகர் சிறைபி டித்தே
    வதைத்திட லானார் நெஞ்சே

* இருவர்-ஆஸிம் என்பாரின் தலமயின் கீழ் குர்ஆன் போதகர் பத்துப் பேர்களுள் எண்மர் நிரபராதிகளாகக் கொல்லப்பட்ட பின்னர் எஞ்சியவர் ‘குபைப்’ என்பாரும் ‘ஜைது’ என்பாருமாவர்.

அபுசுப்யான் கையில் சிக்கி
    அளப்பரும் துன்பம் கொண்ட
குபைபும்நம் ஜைதும் ஆங்கே
    குமைந்திட லானார் நெஞ்சே

கொல்லப்போ கின்றோம் உன்னை
    குபைபே!என் முன்னே நீர்தான்
சொல்லப்போ வதுவென்? னென்றே
    சோதனை செய்தார் நெஞ்சே

பற்பல வீரர் தம்மைப்
    போரிலே பறிகொ டுத்தோம்
அற்பமாய் ஆனோம் என்றே
    ஆத்திரம் கொண்டார் நெஞ்சே

முகம்மதை எங்க ளுக்கு
    முன்கொண்டு வந்தால் உன்மேல்
பகையில்லை; உன்னை நாங்கள்
    பழிவாங்கோம் என்றார் நெஞ்சே

ஆம்!எனச் சொன்னால் போதும்
    அல்லல்கள் இல்லை; உன்னை
யாம்விடு விப்போம் செல்வாய்!
    ஏன்மௌனம்? என்றார் நெஞ்சே

தீயெனத் தீய்க்கும் இந்தத்
    தீச்சொல்லை அபுசுப் யானும்
பேயென நின்றே ஆங்கே
    பேசிட லானார் நெஞ்சே

வஞ்சக மொழியைக் கேட்ட
    வாய்மைசேர் குபைபும் ஆங்கே
நெஞ்சொளி யோடு சொன்ன
    நேருரை கேளாய் நெஞ்சே

பத்துப்பேர் வந்தோம் எம்முள்
    எண்மரைப் பறித்து விட்டீர்
உத்தமர் ஆஸி மையும்
    இழந்தோமென் றுரைத்தார் நெஞ்சே


இரக்கமில் லாத வண்ணம்
    இவ்விதம் கொடுமை செய்தீர்
இறக்கவோ நாங்கள்? என்றே
    இயம்பிட லானார் நெஞ்சே

அபயமாய் வருவார் என்றே
    அபுசுப்யான் எண்ணங் கொள்ள
குபைபவர் முழக்கங் கேட்டே
    கொதித்திட லானார் நெஞ்சே

இனியும்பொ றுப்ப தாமோ?
    ஏற்றுவோம் தூக்கில் என்ன
கனிவுடன் குபைபும் சொன்ன
    கருத்தினைக் கேளாய் நெஞ்சே

என்னரும் இறைவ னைநான்
    இறைஞ்சவே பொறுப்பீர்! என்றே
சொன்னஅக் குபைபும் ஆங்கே
    தொழுதிட லானார் நெஞ்சே

தொழுதிட அனும திப்போம்
    தோணாத மாற்றம் ஆங்கே
எழுந்திடக் கூடும் என்றே
    அபுசுப்யான் இருந்தார் நெஞ்சே


குபைபவர் இறைவனத் தொழுதார்


உனதருள் இதுவே என்றால்
    உவப்புடன் ஏற்பேன் என்றே
துணிவுடன் இறைவ னைத்தான்
    குபைபவர் தொழுதார் நெஞ்சே

உயிரது பிரியும் போதும்
    உருக்கமாய் குபைபும் ஆங்கே
அயராது தொழு நின்ற
    அதிசயம் பாராய்! நெஞ்சே

அன்னவர் தொழுது நின்ற
    அன்பினை - உருக்கந் தன்னை
என்மொழி யாலே யானும்
    இயம்புதல் எளிதோ? நெஞ்சே

ஆண்டவ! குறைஷி யர்கள்
    அறியாமை யாலே எம்மை
ஈண்டிந்த நிலையில் செய்யும்
    இன்னலோ? என்றார் நெஞ்சே

எம்மரும் நபிமு ஹம்மத்
    ஏற்றத்தை - நெறியைக் காக்க
எம்முயிர் தருவ தற்கே
    இசைகின்றோம் என்றார் நெஞ்சே

எங்களின் தியாகத் திற்கே
    என்றும்நீ சாட்சி யானாய்;
எங்களை ஏற்பாய்! என்றே
    இயம்பிட லானார் நெஞ்சே

இவ்வாறு குபைபும் ஆங்கே
    இறைஞ்சிடக் கண்டே அன்னார்
·எவ்வித உறுதி!· என்றே
    எண்ணிட லானார் நெஞ்சே

வியப்பொரு பக்க மேனும்
    வினையம்ஓர் பக்கம் துள்ள -
புயத்தினைத் தட்டி அன்னார்
    புழுங்கிட லானார் நெஞ்சே

தொழுகயை முடித்த வண்ணம்
    தூய்மைசேர் குபைபும் ஆங்கே
எழுந்திடப் பகைவ ரெல்லாம்
    என்னவென் றாரே நெஞ்சே

இம்மொழி கேட்ட பின்பும்
    இணையிலா குபைபும் ஆங்கே
செம்மையாய்த் தந்த அந்தச்
    சீருரை கேளாய் நெஞ்சே

இறைவனை இன்னும் சற்றே
    இறைஞ்சவே எனது நெஞ்சம்
கருதிய தென்று ஆங்கே
    கழறிட லானார் நெஞ்சே


ஆயினும் பிழையாய் நீவிர்
    அகமதில் எண்ணு தற்கே
மாயினும் நல்கேன் என்றன்
    வாய்ப்பைஎன் றாரே-நெஞ்சே

இறந்திட அச்சங் கொண்ட
    இவ்வாறு செய்தேன் என்று
கருதுவீர் எனவே நானும்
    கலைந்தனன்! என்றார் நெஞ்சே

தொழுகையைப் பற்றி நாங்கள்
    தொடர்ந்துமைக் கேட்க வில்லை
எழுந்தந்த முகம்ம தைத்தான்
    ஈவீரா? என்றார் நெஞ்சே

குறைஷியர் மீண்டும் மீண்டும்
    கொடுக்கும்இத் தொல்லை கண்டே
நிறைகுண குபைபும் தந்த
    நேருரை கேளாய் நெஞ்சே

அதுமட்டும் ஆகா தானால்
    அதற்கென என்னை நீங்கள்
எதுவேண்டு மானா லும்தான்
    செய்குவீர்! என்றார் நெஞ்சே

இசைகொண்ட தலைவர் எங்கள்
    இன்னுயிர் நபிய வர்மேல்
வசைமொழி சொன்னீர் கேட்டு
    வாடினோம் என்றார் நெஞ்சே

எம்மைநீ கொன்ற போதும்
    எத்துணை இடர்தந் தாலும்
செம்மைசேர் தலைவர் மாண்பைச்
    செப்புவோம் என்றார் நெஞ்சே

அவரையாம் உயிராய்க் கொண்டோம்
    அவர்க்கென உயிரும் ஈவோம்
அவர்க்கொரு துன்பம் நல்க
    ஆட்படோம் என்றார் நெஞ்சே

அவர்காலில் முள்தைத் திட்டால்
    அதுஎங்கள் கண்ணில் தைக்கும்;
அவர்க்கேதும் இடரென் றாலும்
    அகம்பொறோம் என்றார் நெஞ்சே

இத்தகை உறுதி தன்னை
    இயம்பிடக் கேட்ட அந்தச்
சித்தமில் அபுசுப் யானும்
    சிரித்திட லானான் நெஞ்சே

இறப்பென்றோர் அச்சம் இன்னார்க்
    கிலையோ !அம் முகம்ம தாரின்
சிறப்பொன்றே போதும் என்ற
    சிந்தைதான் போலும் ! என்றார்

முகம்மதைக் கொடுக்க வேண்டாம்
    முஸ்லிமாய் இருத்தல் விட்டே
அகமதில் விலகி விட்டால்
    அதுபோதும் என்றார் நெஞ்சே

என்னைநீர் கொல்க ! ஆனால்
    எதிலும்நான் மாறேன் என்றே
முன்னிலும் உறுதி யாக
    மொழிந்திட லானார் நெஞ்சே

குபைபிந்த விடையைச் சொல்ல
    குறைஷியர் கோப முற்றே
குபைபே!நீ மாண்டாய் என்றே
    கூறிட லானார் நெஞ்சே!

ஆட்டினைப் பலிபீ டத்தில்
    அறுத்திட இழுப்ப தைப்போல்
மாட்டினாய் என்றே அன்னார்
    மகிழ்ந்திழுத் தாரே நெஞ்சே

இருமரம் தாங்கி ஆங்கே
    இருந்திடும் நடும ரத்தில்
இருகால்க ளயும் கட்டி
    இழுத்திட லானார் நெஞ்சே

இடையிலே குபைபும் ஆங்கே
    இன்னலால் தொங்கும் போது
படையைப்போல் குறைஷி யர்தாம்
    பாய்ந்துசூழ்ந் தாரே நெஞ்சே

நாற்பது வீரர் ஆங்கு
    நாற்புறம் சூழ்ந்து நின்றே
ஏற்றமாய் அம்பை ஈய
    அவசரம் செய்தார் நெஞ்சே

பாலையில் நடக்கும் இந்தப்
    பயங்கரம் தன்னைக் கண்டே
காலமே உருகி நின்ற
    காட்சியும் என்னே நெஞ்சே

ஏகனின் கொள்கை தன்னை
    ஏற்றமாய்க் காப்ப தற்கே
தாகமாய்த் தொங்கி நின்ற
    தன்மையைப் பாராய் நெஞ்சே

அந்தஓர் நிலையில் கூட
    அஞ்சாத குபைபும் ஆங்கே
சிந்தையை உருக்கும் செய்யுள்
    செய்ததைக் கேளாய் நெஞ்சே

நான்ஒரு முஸ்லிம் - என்ற
    நலத்தினில் மாண்டால் அந்தப்
பான்மையே போதும் என்று
    பாடிட லானார் நெஞ்சே

கொன்றாலும் என்னை நீவிர்
    கொடுமைகள் செய்த போதும்
என்றும்நான் மாறேன் என்றே
    எடுத்திசைத் தாரே நெஞ்சே

மனத்துளே பதிந்து விட்ட
    மாசிலாக் கொள்கை தன்னைக்
கணமும்நான் மாற்றேன் என்றே -
    கவிதைதான் செய்தார் நெஞ்சே

இறைவன்என் நாமம் தன்னை
    என்றும்காப் பானென் றோதி
நிறைவுடன் பாடி நின்ற
    நெஞ்சொளி என்னே நெஞ்சே

அப்பெரும் பாடல் தன்னை
    அனைவரும் கேட்டே கொண்ட
செப்பரும் வியப்பை இங்கே
    செப்புவ தாமோ ? நெஞ்சே

இப்பெரும் அன்பை நாங்கள்
    எங்குமே கண்ட தில்லை
அப்பப்பா ! என்றே அன்னார்
    அதிசயம் கொண்டார் நெஞ்சே

முகம்மதின் இடத்தில் இந்த
    மூர்க்கஞ்சேர் அன்பா ? என்றே
அகமதில் வியப்பு கொண்டே
    அபுசுப்யான் சொன்னார் நெஞ்சே

மனிதர்பால் மனிதர் இந்த
    மாண்புறு அன்பைக் கொள்ளும்
காணேன் என்றே
    புகன்றிட லானார் நெஞ்சே

இப்பெரும் பேற்றைப் பெற்ற
    இனிப்பினில் குபைபும் ஆங்கே
எப்பெரும் துன்பை யும்நான்
    ஏற்பேனென் றுரைத்தார் நெஞ்சே

குறுநகை முகத்தி லாட
    குபைபவர் கயிற்றில் தொங்க
செறுபகைக் குறைஷி மக்கள்
    சீறிட லானார் நெஞ்சே

தொங்கிய குபைபின் மீது
    தொடுத்தனர் அம்பை அந்தோ !
அங்கவர் உடலில் எல்லாம்
    அம்புகள் தானே நெஞ்சே

அன்னவர் பட்ட துன்பை
    அறைந்திட லாமோ ! நெஞ்சே
துன்பத்துள் துன்பம் அந்தத்
    துயரத்தைச் சொல்லேன் நெஞ்சே

அம்புகள் பாயப் பாய
    அடுத்துமே இருந்தோ ரெல்லாம்
விம்மித முற்றே ஆங்கே
    வீற்றிருந் தாரே நெஞ்சே

எள்முனை இடமில் லாமல்
    எதிரிகள் துளைக்கும் போதும்
உள்ளொளி குபைபார் ஆங்கே
    உரைத்ததைக் கேளாய் நெஞ்சே

ஒன்றேதான் இறைவன்; அந்த
    ஒருவனின் தூதே அண்ணல்
என்றவர் சொல்லிச் சோர்ந்த
    ஏற்றமும் என்னே நெஞ்சே

எஞ்சிய ஜைதை யும்தான்
    ஏற்றவே மரத்தில் அன்னார்
மிஞ்சிய விசையால் அம்பை
    விடுத்தனர் அந்தோ ! நெஞ்சே

கொடுமைகள் பலவும் செய்த
    குறைஷியர் மனமும் மீண்டும்
அடங்காத நிலையில் செய்த
    அல்லல்கள் குறைவோ? நெஞ்சே

எத்தனை கொடுமை செய்தும்
    எள்ளள வும்தான் ஜைதும்
சித்தத்தில் சோரா வண்ணம்
    சிறந்ததும் என்னே நெஞ்சே


குற்றமில் லாத அந்தக்
    குபைபை - நம் ஜைதை அன்னார்
குற்றுயி ராகக் கொன்ற
    கொடுமையும் சிறிதோ! நெஞ்சே

விளையாட்டுப் பொருளாய் அந்த
    வீரரின் உடலை அன்னார்
துளையிட்டுக் கொன்ற அந்தத்
    துயரத்தைப் பாராய் நெஞ்சே

ஏகனின் நெறியின் பற்றும்
    இறைதூதர் அன்புப் பற்றும்
தேகத்தை - உயிரை நல்கத்
    துணிந்ததைத் தெரிவாய்! நெஞ்சே

இறப்பிலே பிறப்பெ டுத்தே;
    இதயங்கள் தம்மில் வாழும்
சிறப்புடை இவர்கள் மாண்பைச்
    செப்புவ தாமோ! நெஞ்சே

இச்செய்தி அறிந்த வள்ளல்
    இதயத்தில் கொண்ட துன்பை
எச்சக்தி யாலும் நானோ
    இயம்பிட வல்லேன் நெஞ்சே

வஞ்சக வலைவி ரித்தே
    வாட்டிய செய்தி யாலே
நெஞ்செலாம் நோக அண்ணல்
    நெகிழ்ந்ததும் சிறிதோ! நெஞ்சே

அன்னவர் சாந்திக் காக
    அண்ணல்தாம் இறைஞ்சி ஆங்கே
துன்புற்ற துயரந் தன்னைத்
    தொடர்ந்துநான் சொல்லேன் நெஞ்சே

குறைஷியர் கொடுமை நெஞ்சம்
    குணங்களைப் பெறுவ தற்கே
நிறைவுறு நமது வள்ளல்
    நெஞ்சினால் தொழுதார் நெஞ்சே

துன்பங்கள் தொடர்ந்த போதும்
    தூயவன் நெறிப ரப்பும்
இன்பத்தில் அண்ணல் நாளும்
    இலங்கிட லானார் நெஞ்சே

நாளுக்கு நாள்தான் அங்கு
    நலம்பெறும் இஸ்லாம் மார்க்கம்
வாளுக்கும் அஞ்சு மாமோ
    வளர்ந்துவந் ததுவே நெஞ்சே