பக்கம் எண் :

59

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

வெற்றியில் நிறைந்த வியத்தகு மேதை

மூத்தா யுத்தம்

யூதர்கள் தோற்ற பின்னர்
    யூகித்த குறைஷி மக்கள்
தோதாய்ஓர் மன்ன னத்தான்
    தூண்டிட எண்ணங் கொண்டார்

பற்பல மன்ன ருக்குப்
    பாங்குடன் அண்ண லார்தான்
பொற்புறு கடிதம் தன்னைப்
    போக்கிய தறிவாய் நெஞ்சே


அண்டைய புஸ்ரா நாட்டின்
    அரசனுக் கனுப்ப ஆங்கே
அண்டிய குறைஷி மக்கள்
    ஆற்றிய தைக்கேள் நெஞ்சே

கல்லாத முஹம்ம தும்தான்
    கவினார்ந்த உங்க ளுக்கே
வல்லமை யோடு தீட்டும்
    வலிமையும் உண்டோ? என்றார்


நாட்டாட்சி செய்வோ ருக்கு
    நாடியே முஹம்ம தும்தான்
ஏட்டினை அனுப்பி வத்தல்
    ஏற்றமோ? என்றார் நெஞ்சே


முகம்மதை எதிர்ப்ப தற்கே
    முரணான வற்றை எல்லாம்
முகமறை வாகச் செய்வோம்
    என்றவர் மொழிந்தார் நெஞ்சே

மனநல மில்லா மன்னன்
    மனமதில் பகையை மூட்டக்
கணமேனும் சிந்திக் காமல்
    கடும்போருக் கெழுந்தான் நெஞ்ச

போருக்கு வீரர் தம்மை
    ‘புஸ்ரா’நாட் டரச னும்தான்
சேருங்கள்! என்று சொல்லிச்
    சினந்தெழ லானான் நெஞ்சே


குறைஷியர் தம்மெண் ணம்தான்
    கூடிய தென்றே எண்ணி
நிறைந்ததோர் மகிழ்ச்சி யாலே
    மன்னன்முன் நின்றார் நெஞ்சே


முகம்மதை வீழ்த்தா விட்டால்
    முடிமன்னர் பெருமை எல்லாம்
மிகவும்கீழ் ஆகும் என்றே
    விநயமாய்ச் சொன்னார் நெஞ்சே


*பெரும்படை கடலைப் போலப்
    பெருகிட மதினா மக்கள்
வரும்படை யாதாம் என்றே
    வியப்புடன் மலைத்தார் நெஞ்சே

* பெரும்படை-ஒரு லட்சம் பேர் கொண்ட பெரும்படை.

அரபதற் குரிய ரான
    அண்ணலை எதிர்ப்ப தற்கோர்
அரசன்தான் படைஎ டுத்த
    அதிசயம் பாராய் நெஞ்சே

அளப்பரும் சக்தி வாய்ந்த
    அண்ணலின் திருமு கத்தில்
ஒளிநகை மலர்ந்து நின்ற
    உறுதியும் சிறிதோ! நெஞ்சே

தோழர்கள் அச்சங் கொண்டே
    துணுக்குற்ற போதும் துன்பில்
ஆழாத நிலையில் அண்ணல்
    ஆற்றிய தைக்கேள்! நெஞ்சே

நாளுக்கு நாள்தாம் நாமும்
    நன்மையில் வளரும் போது
வாளுக்கும் வேலுக் கும்நாம்
    வளைவோமா? என்றார் நெஞ்சே

அறியாமை அதனை நீக்க
    அரும்பணி செய்வ தானோம்
தெரியாமல் பலர்எ திர்த்தால்
    திகைப்போமா? என்றார் நெஞ்சே


ஆடவர் பெண்க ளுக்கும்
    அந்தஸ்தில் ஒருமை வேண்டி
கேடெலாம் அழிக! என்றால்
    கிளர்ச்சியோ? என்றார் நெஞ்சே


நல்லதைச் செய்வ தற்கே
    நாமுளோம் நம்மை வீழ்த்ம்
உள்ளத்தைக் கொண்டோர் போக்கை
    உரைப்பதோ? என்றார் நெஞ்சே


நம்தொகை சிறிய தென்றே
    நன்கவர் அறிவார் பின்னர்
இம்முறை யில்தி ரண்டே
    வந்ததேன்? என்றார் நெஞ்சே


அச்சத்தைக் கொண்டே அன்னார்
    ஆழிபோல் திரண்டுள் ளார்கள்
நிச்சயம் தோற்பார் என்றே
    நினக்கின்றேன் என்றார் நெஞ்சே

மூவாயி ரம்பேர் நீங்கள்
    முனைந்மே திரண்டு செல்வீர்
நாவால்நான் சொல்லு கின்றேன்
    நாம்வெல்வோம் என்றார் நெஞ்சே


இறைவனின் வழியில் நீங்கள்
    இன்புடன் நின்று செய்யும்
முறைமைசேர் போரில் வெற்றி
    முழக்குவீர் என்றார் நெஞ்சே


வீரர்கள் இதனைக் கேட்டார்
    விம்மித முற்றார்; போரில்
தீரமாய் நிற்போம் என்றே
    திரண்டெழ லானார் நெஞ்சே


அலைகடல் போல வந்த
    அரசனின் படையைக் கண்டே
உலையாத நிலையில் நின்ற
    உறுதியும் வியப்பே நெஞ்சே

மூத்தாஎன் னும்இ டத்தில்
    மோதின படைகள்; போரப்
பார்த்தவர் எல்லாம் கொண்ட
    பயமம் பெரிதே நெஞ்சே

மன்னனின் படையினர்போல் மாறுவேடம் பூண்டு
குறைஷியரும் சேர்ந்து போரிட்டனர்.


வெற்றிமேல் வெற்றி கொண்டு
    விளங்கிடும் அண்ண லாரைப்
பற்றியே குறைஷி யர்தாம்
    பழிஎண்ணங் கொண்டார் நெஞ்சே

உள்ளத்தின் அடித்த ளத்தில்
    ஓயாத பகையைக் கொண்டே
நல்லதோர் காலந் தன்னை
    நாடியே நின்றார் நெஞ்சே

வேற்றவர் குழுவின் உள்ளே
    வேற்றுரு தாங்கிச் சென்றே
சாற்றொணாத் ன்பம் தந்த
    சதியதைப் பாராய் நெஞ்சே

*இக்ரிமா போன்றோர் இந்த
    இழிவுடை வேடம் பூண்டே
துக்கத்தைத் தந்த தைத்தான்
    தொடுத்துரைப் பதுவோ! நெஞ்சே

* இக்ரிமா- அபூஜஹிலின் மகனாகிய இக்ரிமா தந்தைக்குப்பின் தாங்கொணாத் துன்பத்தைத் தருவதானார். இறுதியில் சத்தியம் தெரிந்து இஸ்லாத்தில் இணைவதானார்.


உயிரதைக் கரத்தில் ஏந்தி
    உளத்தினில் வலிமை இன்றி
அயர்ந்தேயெல் லோரும் செய்த
    அவலப்போர் என்னே நெஞ்சே


மன்னனின் படையைச் சேர்ந்தோர்
    மருண்டனர், அச்சங் கொண்டே
பின்வாங்க லானார் அந்தப்
    பீழையும் பெரிதே நெஞ்சே


தொகையினில் குறைந்தா ரேனும்
    துணிவுட யோர்கள் என்று
பகைவர்கள் தெரிந்து கொண்டே
    பயந்துபோர் செய்தார் நெஞ்சே


இஸ்லாத்தின் நெறியைக் காக்க
    இன்னுயிர் வழங்க வந்த
விஸ்வாச மிக்க தோழர்
    வீரத்தக் கேளாய் நெஞ்சே


எதிரிகள் கோழை என்றே
    எண்ணிய முஸ்லிம் வீரர்
உதிரவெள் ளத்தில் பலரை
    உருண்டிட வைத்தார் நெஞ்சே


சிங்கங்கள் போன்றே பாய்ந்து
    சீவிட லானார்: மாற்றார்
இங்கினி நிற்ப தாமோ?
    என்றெண்ண லானார் நெஞ்சே

தப்பித்தால் போதும் என்றே
    தாவியே ஓட லானார்
அப்பெருங் காட்சி தன்னை
    அறைந்திடக் கேளாய்! நெஞ்சே

குதிகால்கள் பிடரி தொட்டுக்
    கொள்ளுமோர் வேகம் என்ன-
அதிவேக மாக அன்னார்
    அகன்றிட லானார் நெஞ்சே


களத்தினில் ஒருவ ரில்லை
    கணத்திலே மறந்து விட்டார்
உளத்தினில் உறுதி யின்றி
    ஓடிட லானார் நெஞ்சே


முஸ்லிம்கள் வெல்ல - துன்பில்
    மூழ்கிய வண்ணம் சோர்ந்
புஸ்ராநாட் டரசன் ஆங்கே
    புழுங்கிட லானான் நெஞ்சே


இறைவனின் கொடையால் வந்த
    இணையிலா வெற்றி என்றே
நிறைவுறு அண்ணல் ஆங்கே
    நெகிழ்ந்துரை செய்தார் நெஞ்சே