பக்கம் எண் :

61

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

பாரினை வென்ற பண்புடைச் செம்மல்

காலத்தை வென்ற கடைசி நபி


தாம்பெற்ற பேரின் பத்தைத்
    தாரணி பெறுக வென்றே
ஆம்! நம தண்ணல் ஆங்கே
    அரும்பணி செய்தார் நெஞ்சே


மக்கம்நன் மதினா வெங்கும்
    மாண்புறு இறைவ னாட்சி
மிக்கவும் சிறப்பாய் நின்ற
    மேன்மையைக் கண்டார் நெஞ்சே


திருமறை ஓது வாரும்
    திருநெறி பரப்பு வாரும்
விருப்புடன் பணிக ளாற்ற
    வெளிசெல்ல லானார் நெஞ்சே


தூதர்கள் அண்டை நாட்டின்
    தொடர்பினைக் கொள்வ தற்கே
போதலும் அவர்கள் எல்லாம்
    புளகமுற் றாரே நெஞ்சே


யமன்,பஹ்ரைன், சிரியா பார
    சீகத்து மக்கள் எல்லாம்
அமைதிசேர் மதினா வுக்கே
    அழைப்பின்றி வந்தார் நெஞ்சே


நீணில வள்ள லாரை
    நேரில்தம் கண்க ளாலே
காணலாம் என்றே மக்கள்
    கவிந்திட லானார் நெஞ்சே


வந்தவர் பல்லோர் நெஞ்சை
    வான்புகழ் வள்ள லுக்கே
தந்ததும் என்னே நெஞ்சே
    தாகமும் பெரிதே நெஞ்சே

 

இஸ்லாம்என் றோது கின்ற
    இன்கதிர் உச்சி வானில்
விஸ்வாசக் கதிர்ப ரப்பி
    விளங்கிய தென்னே நெஞ்சே


அரபதன் எட்டுக் கோண
    அன்புறு மக்க ளாலே
பரிசுகள் குவிந்த அந்தப்
    பான்மையும் வியப்பே நெஞ்சே


தாயிப்வாழ் மக்கள் வந்தே
    தலைவரைக் காணும் போது
தாயன்பாய் வள்ள லும்தான்
    தழுவிய தென்னே நெஞ்சே


கற்களால் அடித்தே அன்று
    கலங்கிடச் செய்தோ ருக்கும்
அற்புத அன்பு காட்டும்
    அருமையும் பெரிதே நெஞ்சே


இன்னாசெய் தாருக் கும்தான்
    இனியவை செய்யும் நெஞ்சம்
அன்புடை யாரி டத்தே
    அமந்ததைப் பாராய் நெஞ்சே

நாடொறும் வள்ளல் வாழ்க்கை
    நலம்பெறும் மாண்பு கண்டே
நாடதும் கண்ட இன்பை
    நவின்றிடல் எளிதோ? நெஞ்சே


அண்ணலைக் கண்டோ ரெல்லாம்
    அடங்கொணா இன்பங் கொண்டே
புண்ணிய மார்க்கம் தன்னில்
    புகுந்திட லானார் நெஞ்சே


அண்டையர், அயலார் எல்லாம்
    அன்புறு இஸ்லாம் மாண்பைக்
கண்டதில் வள்ள லுந்தான்.
    களித்திட லானார் நெஞ்சே

அறபினில் இஸ்லாம் ஆட்சி
    ஆண்டிடும் சீர்மை தன்னில்
சிறப்புடன் நேரில் காணும்
    சீர்மைகொண் டாரே நெஞ்சே

காலத்தை வென்ற கடைசி நபி

தன்வழி வந்த கொள்கை
    தன்னுடைக் காலத் தில்தான்
பொன்னெனப் போற்றும் மாண்பில்
    புளகமுற் றாரே நெஞ்சே


எல்லோரும் சமமாய் நின்று
    ஏகனைத் தொழுது வாழ்த்தி
உள்ளத்தில் கொண்ட இன்பை
    உரைத்திடல் எளிதோ ? நெஞ்சே


எல்லோரும் இஸ்லாம் தன்னில்
    இன்புடன் இணைந்து நின்றே
நல்லொளி நல்க அண்ணல்
    நகைபுரிந் திட்டார் நெஞ்சே


பாவலர் இணைந்தி ருந்தார்
    பாட்டாளி இணைந்தி ருந்தார்
ஆவலாய்ப் பெண்டீர் சேர்ந்தார்
    அணிஒன்றாய் ஆனார் நெஞ்சே


ஆடவர் பெண்கள் எல்லாம்
    அனைத்திலும் சமதை உற்றே
பீடுடன் வாழக் கண்டே
    பெருமிதம் உற்றார் நெஞ்சே


அறியாமை யாலே அன்று
    அவிந்திட்ட அரபு நாடோ
அறிவொளி யாலே இன்று
    அழகுற்ற தென்னே நெஞ்சே


கொலை,புலை ஏதும் இன்றி
    கூடியே மக்கள் வாழும்
நிலைதனைக் கண்டே அண்ணல்
    நெஞ்சுவந் திட்டார் நெஞ்சே

 

அவரிவர் பேத மின்றி
    அனைவரும் ஓர்தாய் மக்கள்
எவர்க்கெவர் தாழ்ந்தார் ? என்ற
    எழிலதும் என்னே நெஞ்சே


தம்பதி இருவ ராலே
    தவழ்ந்தஇவ் விஸ்லாம் என்னும்
செம்மைசேர் நெறிதான் எங்கும்
    செழித்ததும் வியப்பே நெஞ்சே


இத்தகு நிலையைத் தந்த
    இறைவனை எண்ணி எண்ணி
அத்திரு மேதை செய்த
    அன்புரை கேளாய் நெஞ்சே


உயர்நெறி தந்தோய் ! காத்தோய் !
    உனக்கேஇப் பெருமை எல்லாம்
உயிர்நெறி யைநீ நல்கி
    உவந்தாய்என் றுரைத்தார் நெஞ்சே


உன்னுடை வழியில் நின்றே
    உயர்பணி ஆற்று தற்கே
உன்னருள் வேண்டு மென்றே
    உருகிட லானார் நெஞ்சே