பக்கம் எண் :

65

NABIGAL
 
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் போதனைப் பகுதி

அறிவியக்கம் கண்ட அண்ணலார்


விளக்கின்றி ஒளியும் உண்டோ?
    வித்தின்றி விளவும் உண்டோ ?
விளக்கத்தை வேண்டு கின்றேன்
    விளக்கிடு வாய்!என் நெஞ்சே


கட்டுவோர் எவரும் இன்றிக்
    கட்டிடம் எழுந்த தென்றே
இட்டுரை ஒருவன் சொன்னால்
    ஏற்றிடு வாயோ? நெஞ்சே


நடத்துவோன் ஒருவ னின்றி
    நல்லதோர் வணிகம் தானே
நடந்ததென் றொருவன் சொன்னால்
    நம்பிடு வாயோ? நெஞ்சே

நெருப்பிலா யிடத்தி னின்று
    நெடும்புகை வருமென் றுன்பால்
பொறுப்பிலா தொருவன் சொன்னால்
    பொருந்திடு வாயோ? நெஞ்சே


விளக்கின்றி ஒளியு மில்லை;
    வித்தின்றி விளவு மில்லை
விளக்கிட வேண்டு மாமோ?
    விளங்கிக்கொள் வாய்என் நெஞ்சே


கட்டுவோர் எவரு மின்றிக்
    கட்டிடம் எழுவ தில்லை
திட்டமாய் இதனை நம்பித்
    தெளிந்திடு வாய்என் நெஞ்சே


இசைப்பவன் ஒருவன் இன்றி
    இசையொலி எழுவ தில்லை;
அசைப்பவன் இன்றி இங்கு
    அணுவசை வில்லை நெஞ்சே


முதலவன்

துவக்குமோர் இறைவ னின்றித்
    தோன்றுமோ உலகம் யாவும்?
உவந்தவன் படைத்துத் தந்த
    உயிர்களைப் பாராய் நெஞ்சே


கதிர்,மதி, மீனி னங்கள்
    கணக்கிலா உயிரி னங்கள்
முதலவன் இன்றித் தாமே
    முகிழ்த்தெழுந் திடுமோ நெஞ்சே


பேரலை வீசித் தாவும்
    பெருங்கடல் அதனை யும்தான்
ஆரிங்கு படைத்தா னென்றே
    அறியவேண் டாமோ? நெஞ்சே


பல்லடுக் குள்ள தான
    பரந்தஇப் பூமி யும்தான்
வல்லவன் இன்றி இங்கு
    வந்ததோ? சொல்வாய் நெஞ்சே

எழுவானப் பிரிவு மற்றும்
    எண்ணிலா அடுக்கு கள்தாம்
எழுந்ததோ தாமே இங்கு ?
    எண்ணிடு வாய்!என் நெஞ்சே


விண்ணுக்கும் மண்ணி னுக்கும்
    விளக்கிற்கும் ஒளியி னுக்கும்
கண்படு அனத்தி னுக்கும்
    கருப்பொருள் அவனே நெஞ்சே


அணுவுக்கும் அணுவு மாகி
    அண்டத்தின் முதல்வ னாகி
கணுக்கரும் பினிப்பி னைப்போல்
    கலந்துறைந் திடுவான் நெஞ்சே


அங்கிங்கெ னாத வண்ணம்
    அனைத்திலும் அனைத்து மாகி
தங்கியே காக்கும் அந்தத்
    தலைவனே தலைவன் நெஞ்சே

இப்படி இருப்பான்-இந்த
    வண்ணம்தான் என்று சொல்ல
ஒப்புமை இல்லான்-இந்த
    உலகவன் படைப்பாம் நெஞ்சே


இக்குணம் உடையான் மற்றும்
    இச்செயல் உடையான் என்றும்
மக்களால் அடக்கொ ணாத
    மாண்பினை உடையான் நெஞ்சே


ஓருரு அவனுக் கில்லை
    ஓர்இடம் அவனுக் கில்லை
பாரினைப் படைத்துத் தந்தான்;
    படைப்பிதை விளக்கும் நெஞ்சே


வாக்கெலாம் கடந்து நின்று
    வளி, வெளி நிறைந்து நின்று
காக்குமக் கருணை மிக்கான்
    கண்டதிவ் வுலகம் நெஞ்சே


ஈடும்ஓர் இணையு மற்றான்
    இவன்அவன் எனுமொப் பில்லான்
பீடுறு பெருமை மிக்கான்
    பிறப்பிறப் பில்லான்-நெஞ்சே


நினைப்பினுக் கெட்டா தானாய்
    நின்றொளிர்ந் திடுவோ னேஇங்(கு)
அனைத்திற்கும் முதல்வ னென்றே
    அறைந்திடு வாய்!என் நெஞ்சே


அவனின்றி அணுவும் இல்லை
    அணுவினுக் கணுவும் இல்லை
அவனிக்கு முதல்வ னான
    அல்லாஹ்வ அறிவாய் நெஞ்சே


மூலமும் முதலு மாகி
    மூதுல காக்கித் தந்த
மேலவன் அவனே என்று
    மேதினிக் குரப்பாய் நெஞ்சே


விண்ணெலாம் கலந்தி ருந்து
    விரிவெளி யாய் மலர்ந்து
மண்ணெலாம் இயக்கு கின்ற
    மன்னனென் றுரைப்பாய் நெஞ்சே


பல்லுல கம்ப டைத்தான்
    பல்லுயி ரைய ளித்தான்
வல்லவன் முதன்மைத் திந்த
    வையகம் என்பாய் நெஞ்சே


கண்டவர்க் கினிய னானான்
    கருணையின் வடிவு மானான்
விண்டவர்க் கரிய னானான்
    வித்தகன் அவனே நெஞ்சே


எப்பெயர் தாங்கு வோர்க்கும்
    எம்மொழி பேசு வோர்க்கும்
ஒப்புமை இல்லா அந்த
    ஒருவனே இறைவன் நெஞ்சே

மனிதன்

தன்னில்தா னாகி நின்று
    தண்ணருள் பொழியும் அல்லாஹ்
தன்னையே வெளிப்ப டுத்த
    மனிதனைப் படைத்தான் நெஞ்சே


மனிதனைப் படைக்கு முன்னம்
    மகிழ்ந்தவன் வாழ்வுக் கேற்ற
புனிதநல் உலகந் தன்னைப்
    புனந்ததும் அவனே நெஞ்சே


படைப்பெலாம் மாந்தர்க் கென்றே
    படைத்தபின் தன்னைக் காட்டப்
படைத்தனன் மனித னைத்தான்
    பார்த்திடு வாய்!என் நெஞ்சே


மாண்புசேர் மனித னைத்தான்
    வடித்தவன் பகர மாகக்
கேண்மைசேர் ஆட்சி செய்யக்
    கிளத்திய தென்னே நெஞ்சே


பகலையும் இரவை யும்நற்
    பயனென ஆக்கித் தந்தே
சுகமதை மனிதன் காணத்
    துலக்கிய தவனே நெஞ்சே


வையத்தை விரிப்ப தாக
    வானத்தைக் கூரை யாக
உய்வுக்கே அளித்த வல்லான்
    உயர்வதும் என்னே நெஞ்சே


உறக்கத்தை விழிப்பு தன்னை
    உயர்நல னுக்கா யீந்த
இறைவனின் பெரும தன்னை
    இயம்பிடல் எளிதோ நெஞ்சே


படைப்பெலாம் தனக்கென் றெண்ணி
    பரமனைப் போற்றும் உள்ளம்
உடயவன் மனிதன் என்ற
    உயர்நெறி தந்தான் நெஞ்சே

தன்னுடைக் கொள்கை தம்மைத்
    தரணியில் பரப்பு தற்கு
முன்னவன் தோற்று வித்த
    முதல்வர்கள் பலராம் நெஞ்சே


வந்தஅத் தூதர் எல்லாம்
    வல்லவன் ஒருவன் என்ற
சிந்தசேர் கொள்கை தன்னைச்
    செப்பியே சென்றார் நெஞ்சே


தன்னலம் தன்னில் வீழ்ந்து
    தவறிய வழியிற் சென்றே
இன்னலால் தவித்த மக்கள்
    இழிவம் சிறிதோ நெஞ்சே

பொதுமைத் தலவர்

முன்னையோர் கொள்கை யாவும்
    முரண்பட்ட போது அல்லாஹ்
பின்னையோர் இறுதித் தூதைப்
    பிறங்கிடத் தந்தான் நெஞ்சே

மனிதர்கள் புனித மெய்தும்
    மாண்புறு வழியைக் காட்ட
இனியராம் நாய கத்தை
    இறையளித் திட்டான் நெஞ்சே


வையத்தின் உய்வுக் கென்றே
    வழிவழி பலரைத் தந்தே
மெய்யன்நம் நாய கத்தை
    மேன்மையாய்த் தந்தான் நெஞ்சே


மருளெனும் கடலில் வீழ்ந்தே
    மக்கள்தாம் தவித்த வேளை
அருள்மரக் கலமாய் நின்றே
    ஆண்டிடத் தந்தான் நெஞ்சே


படைப்பிற்குப் பொதுமை யாகப்
    படைத்தவன் இருப்ப தைப்போல்
படைத்தனன் நாய கத்தை
    பாரினுக் கறிவாய் நெஞ்சே


நிறைமறை

புகழதற் குரியோ னான
    பொற்புடை அல்லாஹ் அந்தத்
தகவுடை நபியின் வாயால்
    தன்மறை தந்தான் நெஞ்சே


அவலத்தில் ஆழ்ந்தி டாமல்
    ஆண்மையைக் கொண்டே இந்தக்
குவலயம் மகிழ்வ தற்குக்
    குர்ஆனைத் தந்தான் நெஞ்சே


அறிவுக்கு மூல மாகி
    அன்பிற்கோர் பால மாகி
செறிவுடன் திகழு கின்ற
    செம்மறை குர்ஆன் நெஞ்சே


கலைகளின் இருக்கை யோ !நற்
    கருவூல மாமோ! என்ன
நிலபுகழ் உடையோன் தந்த
    நேர்மறை குர்ஆன் நெஞ்சே

நோக்குவார் நோக்குக் கெல்லாம்
    நுண்பொருள் வாய்க்கும் வண்ணம்
ஆக்கியே இறைவன் தந்த
    அருமறை குர்ஆன் நெஞ்சே


அருளியல் தத்து வங்கள்
    அரும்பொருள் தத்து வங்கள்
பெருகிய மறைய அல்லாஹ்
    பெட்புடன் தந்தான் நெஞ்சே


புகழ்பெறு கலைக ளுக்குப்
    பொற்புடைக் கழனி யாக்கித்
தகவுடன் பரவி வாழும்
    தகுமறை தந்தான் நெஞ்சே


வாழ்வையே வாழ்வுக் கிங்கு
    வனப்புறு உவமை யாக்கி
வாழ்வினில் கலந்தி னிக்கும்
    நபிகளைத் தந்தான் நெஞ்சே


இனியநல் அறிவைக் கொண்டே
    இன்புறு பணிக ளாற்றி
வினயமாய் வாழ்வ தற்கு
    விண்மறை தந்தான் நெஞ்சே


உள்ளுணர் வதனைக் கொண்டே
    ஓதுவோர் உள்ளம் பற்றி
நல்லாட்சி செய்ய வல்ல
    நன்மறை தந்தான் நெஞ்சே


நீரினில், நிலத்தில் மற்றும்
    நெடுவான்கள் ஏழுக் குள்ளும்
ஓரிறை யவ ணங்க
    உயர்மறை தந்தான் நெஞ்சே


ஏவல்கொள் மனித னுக்கும்
    எல்லாம்நற் பணியாள் என்ற
ஆவல்கொள் நுண்குர் ஆனை
    அளித்ததும் அவனே நெஞ்சே

நிலமும்,நீள் வரையும், கடலும்,
    நேர்த்திசேர் வானும், இங்கு
உலவிடும் காற்றும் நல்ல
    ஊழியர் என்றான் நெஞ்சே


கடலையும் சொந்த மாக்கிக்
    கணக்கிலாப் பயன்க ளெய்தி
உடமையாய்க் கொள்வ தற்கும்
    ஒளிமறை தந்தான் நெஞ்சே


வானிலே வட்ட மிட்டு
    வையத்தைப் பொருளாய் இங்கு
மானுடன் கொள்வ தற்கு
    மணிமறை தந்தான் நெஞ்சே


விண்ணேறிச் சென்ற போதும்
    விரிகதிர் அளந்த போதும்
முன்னவன் புகழைப் போற்ற
    முழுமறை தந்தான் நெஞ்சே

எத்திக்கும் மனிதன் சென்றும்
    எழிற்கலை யைக்கொ ணர்ந்து
மெத்தவும் உயர்ந்து வாழ
    மேன்மறை தந்தான் நெஞ்சே


அருங்கலை யாவுங் கற்றே
    அவனியில் பெண்ணி னத்தார்
பெருங்குடி யாக வாழ
    பெருமறை தந்தான் நெஞ்சே


அறிவதற் கினிக்கும் வண்ணம்
    அகமதற் கேற்ற வண்ணம்
உறவதற் குகந்த வண்ணம்
    உயர்மறை தந்தான் நெஞ்சே


என்ன? எப் படி? ஏன்? என்ற
    எழில்மிகு கேள்வி கட்கும்
உன்னத விடைய ளிக்கும்
    உயர்மறை தந்தான் நெஞ்சே


புனிதமிக் குடைய அன்பால்
    பூதலம் சேரும் போது
மனிதன்தான் நிறைவு கொள்ளும்
    மறையதைத் தந்தான் நெஞ்சே


நன்னெறி என்றே இந்த
    நானிலம் புகழ்ப வற்றைத்
தன்னெறி யாகக் கொண்ட
    தகுமறை தந்தான் நெஞ்சே


நிர்மல மான தன்னை
    நினந்துமே மக்கள் உய்ய-
குர்ஆனை உவந்தே அல்லாஹ்
    கொடுத்ததும் பெரிதே நெஞ்சே

பாராளும் மாநபி

உறவுற்ற உள்ளத் தாலே
    ஒருமையைப் பேணு கின்ற
அறிவொளி இஸ்லாம் தன்னை
    அளித்ததும் அவனே நெஞ்சே


தேனதோ! பாலோ! என்று
    தெவிட்டிடா தருந்து தற்கு
வான்மறை பெற்ற வர்தான்
    வள்ளலார் நபியே நெஞ்சே


இறைமறை குர்ஆ னுக்கோர்
    இயைந்தநல் விளக்க மாகிக்
குறையெலாம் களைந்த அண்ணல்
    குணமிகு நபியே நெஞ்சே


ஓரெழுத் தும் மா றாத
    உயர்மறை தனைக்கொ ணர்ந்தது
பாரெலாம் களிக்கச் செய்த
    பான்மையும் என்னே நெஞ்சே


முன்வந்த மறைக ளெல்லாம்
    முறைமையும் உயர்வும் கொண்ட
தென்பதை எடுத்து ரைத்த
    எந்தையும் அவரே நெஞ்சே

முன்மறை பெற்றோ ரெல்லாம்
    முதல்வனின் தூதர் என்றே
அன்புடன் எடுத்து ரைத்த
    அண்ணலும் அவரே நெஞ்சே


இறுதியாய் இறைவன் தந்த
    இனிய குர்ஆனை மக்கள்
உறுதியாய்க் கொண்டு வாழ
    உரைத்ததும் அவரே நெஞ்சே


முன்னரே மறைகள் பெற்றோர்
    முழுமைசேர் குர்ஆன் பற்றி
நன்னரே அறிவித் துள்ள
    நலமதும் என்னே நெஞ்சே


முன்மறை கள்உ ரைத்த
    மொழிகளை நம்பி னோரே
என்நெறி சார்ந்தோ ரென்றே
    இயம்பிய தவரே நெஞ்சே


அறிவதன் இயக்க மாகும்
    அன்புறு இஸ்லாம் என்ற
அறிஞர்நம் நாய கத்தின்
    அருமையைப் பாராய் நெஞ்சே


அறிவதை முடியாய்க் கொண்டு
    அன்பதை அகமாய்க் கொண்டு
உறவதை உயிராய்க் கொள்ளும்
    உயர்‘இஸ்லாம்’ என்றார் நெஞ்சே


அறிவதன் கதவைத் தட்டி
    அனத்தையும் அறிந்து ணர்ந்தே
இறைவனின் பெருமை தன்னை
    இயம்பிடச் சொன்னார் நெஞ்சே


பகுத்தறி வுக்கும் மேலாய்
    படைத்திலன் இறைவன் ஒன்றை;
பகுத்திதை அறிவீர்! என்றும்
    பகர்ந்தவர் நபியே நெஞ்சே

அறிவதை வளர்ப்ப தற்கே
    அருந்துணை யாயி ருப்போர்
இறந்துமே இறவார் என்ற
    இயல்பதும் என்னே நெஞ்சே


ஒருமணித் துளிசிந் தித்தல்
    ஓரிர வெல்லாம் செய்யும்
பெருவழி பாடாம் என்ற
    பெருமையைப் பாராய் நெஞ்சே


சிந்தனை செய்வ தற்குச்
    சிறப்புடை மறைகொ ணர்ந்த
எந்தையை நினைக்குந் தோறும்
    ஏற்றமே தோன்றும் நெஞ்சே


எத்திக்கும் சென்று நல்ல
    எழிற்கலை யாவும் கற்க
தித்திக்கும் மறைய ளித்த
    தேசதும் என்னே நெஞ்சே


ஆய்வதன் அவசி யத்தை
    அவனியோர்க் குணர்த்தும் நல்ல
வாய்மைசேர் மறையைத் தந்த
    வள்ளலும் அவரே நெஞ்சே


ஆண்டவன் நமக்க ளித்த
    அருங்கொடை அறிவாம் என்னும்
மாண்புடை மறையைத் தந்த
    மன்னவர் அவரே நெஞ்சே


இறைவனை உணர்வ தற்கே
    இன்புறு அறிவாம் என்னும்
முறைமைசேர் மறையைத் தந்த
    மூலவர் அவரே நெஞ்சே


மடமையுள் மடமை ஏகன்
    மாண்பினை மறத்த லென்று
திடமுடன் உரைத்த வள்ளல்
    திருவுளம் என்னே நெஞ்சே


எக்காலத் திற்கும் நீதி
    ஏற்றமாய் உரைக்க வல்ல
தக்கநல் மறையத் தந்த
    தலைவரும் அவரே நெஞ்சே


தேன்மலர் வண்டி னத்தைத்
    தியங்கவே வைத்தல் போல
வான்மொழி இறக்கித் தந்த
    வல்லவர் அவரே நெஞ்சே


உலகத்துப் படைப்பு யாவும்
    உயரிறைக் குடும்ப மென்றே
அலகிலா அன்பு செய்வோன்
    ஆன்றோன்என் றாரே நெஞ்சே


மண்ணக உயிர்க ளெல்லாம்
    மக்களைப் போன்ற தென்ற
பொன்னுரை புகன்ற வள்ளல்
    பொற்பதும் என்னே நெஞ்சே

வாய்த்தஇவ் வாழ்வு தன்னை
    வளமுடன் செலுத்து தற்கே
ஆய்வுரை பலவும் தந்த
    அறிஞரும் அவரே நெஞ்சே


அடுத்தவர் அறிவை எண்ணி
    ஆராய்ந்து பேசும் நல்ல
எடுப்பது வேண்டு மென்ற
    ஏற்றத்தைப் பாராய் நெஞ்சே


செயற்கரும் செயல்க ளாற்றிச்
    செயல்திற னோடு பாரில்
வியப்புடன் மனிதன் வாழ
    விழைந்தவர் நபியே நெஞ்சே


உலகத்து நிலங்கட் கெல்லாம்
    உரியவன் இறைவன் - இங்கு
கலகங்கள் வேண்டா மென்ற
    கண்ணியர் அவரே நெஞ்சே

ஓரிறைக் கொள்கை தன்னை
    உலகத்தோர் போற்றி வந்தால்
போரில்லை என்று சொன்ன
    புண்ணியர் அவரே நெஞ்சே


விந்தைமேல் விந்தை யென்னும்
    வியத்தகு வாழ்வைக் கொண்ட
சுந்தர மான வள்ளல்
    சொற்றிறன் என்னே நெஞ்சே


காலத்தை வென்று வாழும்
    கருணைசேர் நபிகட் கோமான்
சீலஞ்சேர் முஹம்ம தென்று
    செப்பியே மகிழ்வாய் நெஞ்சே


அறிவதன் இயக்கம் கண்ட
    அண்ணலார் பெருமை பேசி
செறிவினைக் கொள்வாய் நெஞ்சே
    சிறப்பினை அடைவாய் நெஞ்சே