பக்கம் எண் :

66

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் போதனைப் பகுதி

ஐங்கடன் பணித்த அறிவரசு


இறுதியில் வந்த தூதர்
    இணையிலா வாழ்க்கை தன்னை
உறுதியாய்க் கேட்டுக் கேட்டே
    உவப்படந் திருப்பாய் நெஞ்சே


இனிஅவர் காட்டிச் சென்ற
    இன்நெறி அதனை யானும்
கனிவுடன் சொல்லக் கேட்டே
    களிப்புறு வாயென் நெஞ்சே


ஏகஇறை நம்பிக்கை

ஐம்பெரும் தூணைக் கொண்டே
    அழகொளி வீசும் இல்லம்
நம்முடை ‘இஸ்லாம்’ என்று
    நாயகம் நவின்றார் நெஞ்சே

சோதியாம் ‘அல்லாஹ்’ அன்றித்
    தொழத்தகும் இறைவே றில்லை;
தூதுவர் ‘முஹம்மத்’ என்னச்
    சொலுமொழி முதற்றூண் நெஞ்சே


உலகெலாம் ஆக்கிக் காக்கும்
    ஒருவனை ஐந்து வேளை
வளமுறத் தொழல்இ ரண்டாம்
    மாண்புறு தூணாம் நெஞ்சே


இரும்பொருள் உடையார் நூற்றுக்
    கிரண்டர வீதம் காப்புத்
தரும்வரி செலுத்தல் மூன்றாம்
    தகைமைசேர் தூணாம் நெஞ்சே


ஆண்டிலோர் திங்கட் காலம்
    அரும்பசி அடக்கி நோன்பு
பூண்டொழு குதலே நான்காம்
    பொற்புறு தூணாம் நெஞ்சே

ஆயுளில் ஒருகால் மக்கா
    அணுகிஅல் லாஹ்வின் வீட்டைப்
பூண்டொழு குதலே ஐந்தாம்
    பொற்புறு தூணாம் நெஞ்சே


இறவனைத் தொழுது, பெற்றோர்க்
    கிதம்புரிந் தில்லத் தார்க்கும்
உறவினர், உலகத் தார்க்கும்
    உதவலே இஸ்லாம் என்றார்


இவ்விதக் கடமை ஐந்தில்
    இயங்கியே வாழ்ந்தா யென்றால்
ஒவ்விய அமைதி கண்டே
    ஒளிருவாய் வாழ்வில் என்றார்


தொழுகை

உலகத்தின் இன்பிற் கெல்லாம்
    உயர்ந்தஓர் இன்பம் நல்கும்
நலமுடைத் தொழுகை பற்றி
    நல்லுரை கேளாய் நெஞ்சே


நாளொன்றுக் கைந்து வேளை
    நலமுடன் தொழுவ தாலே
வாழ்வதில் ஒளியைச் சேர்த்து
    வைத்தவர் நபியே நெஞ்சே


ஐம்முறை ஒன்று கூடி
    அகமொன்றித் தொழுகை செய்தே
செம்மைசேர் ஐக்கி யத்தால்
    சிறந்திட வத்தார் நெஞ்சே


ஐம்முறை குளிக்கும் போது
    அழுக்கெலாம் அகல்வ தப்போல்
ஐம்முறைத் தொழுகை யாலே
    அகத்தொளி வென்றார் நெஞ்சே


ஏகனைத் தொழுது நிற்போர்
    ஏதங்கள் எல்லாம் காற்றில்
வேகமாய்ச் சருகைப் போல
    வீழும்என் றுரைத்தார் நெஞ்சே


நற்செயல் என்று சொல்லும்
    அனைத்திலும் நயம தாகும்
பொற்புடைத் தொழுகை என்று
    புகன்றவர் அவரே நெஞ்சே


என்னுடைக் கண்க ளுக்கே
    ஏற்றநல் குளிர்ச்சி அந்த
அன்புடைத் தொழுகை தன்னில்
    அமைந்ததே என்றார் நெஞ்சே


குனிந்து,பின் நிமிர்ந்து, மண்டி
    இட்டுப்பின் எழுந்து வாழ்த்தும்
கனிவுடைத் தொழுகை யாலே
    காண்பயன் சிறிதோ? நெஞ்சே


நோய்களைப் போக்கு வித்து
    நுண்மைசேர் ஒளியைத் தந்து
தூய்மைசேர் வாழ்வ ளிக்கும்
    தொழுகையக் கொள்வாய் நெஞ்சே


புடமிட்ட தங்கத் தைப்போல்
    பொலிவினை அளிக்க வல்ல
தொடர்புடைத் தொழுகை தன்னால்
    தூய்மையைப் பெறுவாய் நெஞ்சே


உளமொன்றி உவந்து செய்யும்
    உயர்வழி பாட்டி னுக்கு
உளமதைப் பறிகொ டுத்தே
    உயர்ந்திடு வாயென் நெஞ்சே


உடையாரின் முன்னால் நிற்கும்
    உறுபசி உடையார் போல
அடக்கமாய்த் தொழுது நின்றே
    ஆனந்தம் பெறுவாய் நெஞ்சே


சென்னிமண் ணுறவே உள்ளச்
    செருக்கெலாம் மறந்து நல்ல
அன்பினால் உருகி நிற்கும்
    அஃதொன்றே தொழுகை நெஞ்சே

உள்ளொளி நல்கி அன்பின்
    உயரொளி காட்டு கின்ற
நல்லொளித் தொழுகைக் கீடாய்
    நவில்வதிங் கெதனை? நெஞ்சே


இறையருட் கதவைத் தட்டும்
    இயல்புடைத் தொழுகை தன்னை
நிறைவுடன் செய்வோர் தம்மை
    நிர்மலன் ஏற்பான் நெஞ்சே


நோன்பு

வான்புகழ் கொண்ட அல்லாஹ்
    வகுத்தளித் திருக்கும் அந்த
நோன்பதன் மாண்பு தன்னை
    நுவலவொண் ணாதே நெஞ்சே


நானெனும் செருக்க றுத்து
    நலிந்தவர் நிலையைக் காண
நோன்பினைத் தந்த அண்ணல்
    நுண்மையும் பெரிதே நெஞ்சே


விழிப்புடன் பசிபொ றுத்து
    விரிபுலன் களைய டக்கி
எழிலுடை யோனை யெண்ண
    இயம்பிய தவரே நெஞ்சே


உள்ளத்தைத் தூய்மை செய்ய
    உறுதுணை யாக நிற்கும்
நல்லொளி நோன்பு தன்னை
    நாம்கொள்ள வேண்டும் என்றார்


உடல்நலம் காப்ப தற்கும்
    உயிர்நலம் சேர்ப்ப தற்கும்
இடரில்மீண் டிடவும் நோன்பே
    இனியதாம் என்றார் நெஞ்சே


வாழைபோல் வாழ்ந்த போதும்
    வறுமைநல் பசி உணர்ந்தே
ஏழையர்க் குதவி செய்ய
    இயன்றதே நோன்பாம் என்றார்


ஊரெலாம் சுற்று கின்ற
    உளத்தினை நேர்நி றுத்தும்
சீர்மையைப் பெற்ற நோன்பின்
    சிறப்பினை அறிவாய் நெஞ்சே


பொதுநலம் காத்தலும் புனிதயாத்திரையும்

தோழனுக் குயிராய் நிற்கும்
    தோழனே இறைவ னுக்கும்
தோழனாம் என்று சொன்ன
    தூயவர் நபியே நெஞ்சே


பொருளுக்கே அடிமை யாகும்
    புன்மையைப் போக்கு வித்தே
அருளுக்கே ஆட்சி தந்த
    அண்ணலும் அவரே நெஞ்சே


குவியலாய்ச் செல்வம் தங்கும்
    கொடுமைதான் உலகில் நீங்கி
புவியெலாம் பரவு தற்கே
    புதுவழி கண்டார் நெஞ்சே

நதியைப்போல் செல்லு கின்ற
    நந்நிதி நெறிவ குத்த
கதிரொளி மணியைப் போன்ற
    கண்ணியர் எவரே? நெஞ்சே


தான்தேடும் பொருளென் றாலும்
    தாரணிக் கதிலே நல்ல
பான்மையாய்ப் பங்குண் டென்று
    பகர்ந்தவர் அவரே நெஞ்சே


நாட்டமாய்ச் சேர்க்கும் சொத்தில்
    நாற்பதி லொன்றை இங்கு
வாட்டமுற் றோருக் கீய
    வைத்தவர் அவரே நெஞ்சே


கடனதால் வருந்து வோர்க்குக்
    கருணைகாட் டிடுவீர் என்று
திடம்படு செல்வ ருக்குத்
    தேர்ந்துமே சொன்னார் நெஞ்சே


கட்டுகள் தமைம றந்து
    கனிவுடன் மக்கர் விற்குத்
திட்டமாய்ச் செல்வீ ரென்ற
    திருமொழி கொள்வாய் நெஞ்சே

இறைவனின் சன்னி தானம்
    ஏகிடு வோர்கள் எல்லாம்
துறந்தவோர் நிலையில் செல்லத்
    துணிவுர தந்தார் நெஞ்சே


ஓரிறை எண்ணங் கொண்டே
    உயர்நபி வழியிற் செல்வோர்
பாரில்பல் லிடமி ருந்தும்
    பாங்குடன் வந்தார் நெஞ்சே


வந்தவர் எல்லாம் ஒன்றாய்
    வந்தவர் போன்றே ஆகி
அந்தமாய் ‘கஅபா’ தன்னில்
    அன்புற வத்தார் நெஞ்சே


ஒருமையில் கட்டுண் டோர்கள்
    ஓரிறை அவனை எண்ணிப்
பெருமையாய்த் தொழுது கண்ட
    பேரின்பம் என்னே நெஞ்சே


தேசத்தை, மொழியை மற்றும்
    தனித்தனி உணர்வி ழந்தே
நேசத்தில் மக்கள் ஒன்றி
    நெகிழ்ந்திட வைத்தார் நெஞ்சே


எந்நிற ஆடை இன்றி
    எல்லோரும் ஒன்றாய் ஆக
வெண்ணிற ஆடை தன்னில்
    விளங்கிட வத்தார் நெஞ்சே


நாள்ஒன்றில் ‘கஅபா’ தன்னில்
    நாட்டமாய் எண்ணற் றோரை
ஆள்கின்றோன் சன்னி தானம்
    அணிகொள்ள வைத்தார் நெஞ்சே


பாரக முஸ்லிம் எல்லாம்
    பாசமாய் அன்பாய் ஒன்றாய்ச்
சீருடன் வாழ்ந்த வன்பால்
    சேர்க!என் றாரே நெஞ்சே